செல்சி தாக்குதல் சந்தேகநபரின் விவரங்கள் வெளியிடப்பட்டன

ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க்கிலுள்ள மன்ஹட்டன் பகுதியிலுள்ள செல்சி பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் நபரின் விவரங்கள் வௌியிடப்பட்டுள்ளன.

29 பேரைக் காயப்படுத்திய இந்த வெடிப்புச் சம்பவம், நியூயோர்க்கையே அதிரச் செய்திருந்தது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பிறந்து, தற்போது அமெரிக்கப் பிரஜையாக உள்ள 28 வயதான அஹ்மட் கான் ரஹாமி என்பவர், இத்தாக்குதலில் பிரதான சந்தேகநபர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையதாக, ஐந்து பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர் என ஊடகங்கள் தெரிவித்திருந்த போதிலும், இதுவரையிலும் கைதுகள் எவையும் இடம்பெற்றிருக்கவில்லை என, பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சந்தேகத்துக்குரிய வாகனமொன்றை மறித்து, அதைச் சோதனையிட்டதை உறுதிப்படுத்திய மத்திய புலனாய்வு முகவராண்மை, அதில் எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்தனர்.

நியூயோர்க்கில் குண்டுவெடிப்பு இடம்பெற்ற அன்று இடம்பெற்ற ஏனைய 2 சம்பவங்களில் ஒன்றான மினிசொட்டாவில் இடம்பெற்ற கத்திக்குத்தில், 9 பேர் காயமடைந்திருந்த நிலையில், அந்தத் தாக்குதலை, தமது போராளி ஒருவரே மேற்கொண்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலை மேற்கொண்ட நபர், அல்லாவின் பெயரை உச்சரித்துக் கொண்டே தாக்குதலை மேற்கொண்டிருந்ததாக முன்னர் வெளிவந்த தகவல்கள் தெரிவித்திருந்த நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் தாக்குதலாக அல்லது அக்குழுவால் தூண்டப்பட்ட ஒருவரது தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இதற்கு மத்தியிலேயே, தமது குழுவைச் சேர்ந்தவரே இத்தாக்குதலை மேற்கொண்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ் தெரிவித்துள்ளமை முக்கியம் பெறுகிறது.

அத்தோடு, தற்போது வெளியாகியுள்ள புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், ஐக்கிய அமெரிக்காவில் மறைந்திருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகள் காணப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.