ஜெனிவாவில் நாளை அல் ஹுசேன் அறிக்கை!?

ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரி்மைகள் பேரவையின் 31ஆவது அமர்வில், சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் நாளை உரையாற்றவுள்ளார். கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், சிறிலங்காவின் அமைச்சரும், ஐ.நாவுக்கான முன்னாள் சிறப்புத் தூதுவருமான மகிந்த சமரசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

”ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 31ஆவது கூட்டத்தொடர் கடந்த மாதம் 29ஆம் நாள் ஆரம்பமாகியது. எனினும், சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், எந்த கருத்தையும் வெளியிடவில்லை. இது நல்லதொரு முன்னேற்றம். அவர் வரும் வியாழக்கிழமை, சிறிலங்கா தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார். இந்த அறிவிப்பு பெரும்பாலும், கடந்த மாதம் அவர் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கலாம். வரும் ஜுன் மாதம் சிறிலங்கா தொடர்பான வாய்மொழி அறிக்கை சமர்ப்பிக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.