தனி நபர்களோ, குழுக்களோ சட்டத்தைக் கையில் எடுக்க முடியாது!

தோப்பூர் சம்பவம் மற்றும் வென்னப்புவ வியாபார நிலையத் தீ பற்றி அமைச்சர் ரிசாத்

(எஸ். ஹமீத்)

”இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களினதும் வாழ்விட உரிமைகள் சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. நாட்டின் சட்டத்தைப் பாதுகாப்பதற்கு அரசாங்கமும் பொலிஸாரும் தேவையேற்படும் பட்சத்தில் முப்படையினரும் இருக்கின்றனர். எனவே, தனி நபர்களோ அல்லது குழுக்களோ சட்டத்தைத் தமது கைகளில் எடுத்துக் கொண்டு செயற்படுவதை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது.”

கடந்த 16ம் திகதி செவ்வாய்க்கிழமை தோப்பூர் செல்வ நகர் பகுதியில் முஸ்லீம் மக்களுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலும் அதன் விளைவாக அவர்கள் இரவோடிரவாக இடம்பெயர்ந்தது பற்றியும் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிசாத் பதியுதீனிடம் கருத்துக் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறுகையில்,

”ஒரு சிலர் இன்று தாங்கள் உத்தியோகப்பற்றற்ற பொலிஸாராகச் செயல்படப் போவதாகக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். சில நேரங்களில் அவர்கள் தமது இனவாத நோக்கங்களுக்காக மற்றவர்களையும் தூண்டிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இனங்களிடையே பதற்ற நிலைமை தோன்றுகிறது. குறிப்பாக முஸ்லிம் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

தோப்பூர் செல்வநகரில் ஏற்பட்ட சம்பவம் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. அங்கிருந்த முஸ்லிம் மக்களை அச்சுறுத்தும் நோக்குடன் வெளியிடங்களிலுருந்தும் பலர் வந்திருக்கின்றனர். ஆகவே, அந்த மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்குடன் பள்ளிவாசல்களிலும் அயலவர் வீடுகளிலும் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். முஸ்லிம்கள் மீதான இவ்வாறான அச்சுறுத்தல்களை நான் மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன். அந்த மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களுக்காகவும் அசௌகரியங்களுக்காகவும் நான் மிகவும் வருந்துகிறேன். இது போன்ற சம்பவங்கள் இனியும் ஏற்படாதிருப்பதை உத்தரவாதப்படுத்திக் கொள்வதற்காக நான் அரச உயர்மட்டங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன்.

வென்னப்புவ லாஸ்ட் சான்ஸ் வியாபார நிலையத் தீ சம்பந்தமாகவும் எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஓர் இனவாத, நாசகார செயலா என்பதைப் பற்றி நாம் மிகுந்த அக்கறையோடு விசாரித்து வருகிறோம். இதுவும் ஓர் இனவாத நடவடிக்கையாக இருக்குமாயின் அதற்கெதிராக நாம் தக்க நடவடிக்கைகளை எடுப்போமென்று கூறிக் கொள்ள விரும்புகிறேன்!” என்று தெரிவித்தார்.