தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்

தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார். இதே காலகட்டத்தில் விருப்ப ஓய்வுபெற்ற கர்நாடக ஐபிஎஸ் அதிகாரியும், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான அண்ணாமலை பாஜகவில் இணைந்தார். பின்னர் அவர் மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சியில் போட்டியிட்ட அண்ணாமலை வெற்றி வாய்ப்பை இழந்தார்.

விருப்ப ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் தமிழக பாஜகவில் பிரபலமான தலைவர்களில் ஒருவராக அண்ணாமலை விளங்குகிறார். இந்நிலையில் சமீபகாலமாக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராகலாம் என்கிற தகவல் கசிந்தது. நேற்று அமைச்சரவை விரிவாக்கத்தில் இணை அமைச்சராக எல்.முருகனுக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் தமிழக பாஜக தலைவர் மாற்றப்படலாம் என்கிற தகவலும், அண்ணாமலை தலைவராக்கப்படுவார் என்கிற தகவலும் வெளியானது.

இந்நிலையில் இன்று மாலை தமிழக பாஜக தலைவர் குறித்த அறிவிப்பு வெளியானது. அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக டெல்லி பாஜக தலைமை அறிவித்துள்ளது. இளம் வயதுள்ள தலைவர் ஒருவர் பாஜகவுக்குத் தலைவராக வந்துள்ளதால் தொண்டர்களிடையே எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

அண்ணாமலை பின்னணி:

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலையின் தந்தை பெயர் குப்புசாமி. கரூர் மாவட்டம், சின்னதாராபுரத்திலுள்ள சொக்கம்பட்டி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் அண்ணாமலை. கோவையில் பட்டப்படிப்பை முடித்து உயர் கல்விக்காக எம்.பி.ஏ படிக்க லக்னோவுக்குச் சென்ற அவர் அங்குள்ள மக்களின் வாழ்நிலையைப் பார்த்து ஐபிஎஸ் படித்து சேவை செய்ய வேண்டும் என சிவில் தேர்வு எழுதினார்.

2011ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று கர்நாடக மாநில கேடரானார். அங்கு பயிற்சி எஸ்.பி.யாக பணியைத் தொடங்கிய அவர் தனது பணிக் காலத்தில் கர்நாடகம் தாண்டி தமிழகத்திலும் பிரபலமானார். சீனியர் எஸ்.பி.யாகப் பதவியில் இருந்தபோது 2019ஆம் ஆண்டு ஐபிஎஸ் பதவியிலிருந்து விலகினார். பின்னர் சிறிதுகாலம் ஒரு அமைப்பைத் தொடங்கி நடத்தி வந்த அவர், ரஜினி கட்சியில் இணைவார் என்று பேசப்பட்ட நிலையில், ரஜினி கட்சி முடிவைக் கைவிட்ட நிலையில் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணைந்தார்.

கட்சியில் இணைந்த ஓராண்டிற்குள் அவருக்கு தமிழக பாஜக தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.