ஐக்கிய அமெரிக்காவின் நியுயோர்க் நகரத்தில் இடம்பெற்ற வெடிப்பில், குறைந்தது 29 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செல்சியா மாவட்டத்தின் மன்ஹற்றன் பகுதியிலேயே, இலங்கை நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கே பாரிய சத்தத்துடன் வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
நியூஜெர்சியில் குழாய் குண்டு வெடித்து சில மணித்தியாலங்களிலேயே, மேற்குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது. எவ்வாறெனினும், எந்தவொரு காயங்களும், உயிருக்கு ஆபத்தானதாய் அமையவில்லை என நியுயோர்க் நகர தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெடிப்புக்கான காரணம் தெளிவில்லாதபோதும், குப்பைக்கூடையிலிருந்தே வெடிப்பு நிகழ்ந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், டுவிட்டரில் பகிரப்பட்ட சேதமடைந்த குப்பைக்கூடையின் புகைப்படம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதாக நியுயோர்க் பொலிஸின் பயங்கரவாதத்துக்கெதிரான முகவரகம் தெரிவித்துள்ளது.