‘நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை ஒற்றுமையுடன் உழைப்போம்’

“தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை ஒற்றுமையுடன் உறுதியாக உழைப்போம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் திருப்திகரமான முறையில் நடைபெற்றதாகவும் அனைவரும் தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட்டதாகவும் அவற்றிளை உள்வாங்கி அதனடிப்படையில் செயல்படுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2016ஆம் ஆண்டில் தீர்வு கிடைக்குமென சம்பந்தன் தெரிவித்திருந்தமை தொடர்பில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதியின் முடிவுகளின் அடிப்படையிலேயே தான் அக்கருத்துக்களை முன்வைத்ததாகவும் எனினும், 2016இல் தனது கணிப்பின்படி பல கருமங்கள் நடைபெற்றுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு சபையாக நாடாளுமன்றம் மாற்றப்பட்டமை, புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளை முன்வைப்பதற்கு அனைத்து கட்சிகளினதும் உறுப்பினர்களை உள்ளடக்கிய வழிகாட்டல் குழு நியமிக்கப்பட்டமை உள்ளிட்ட விடயங்களை அவர் எடுத்துக்காட்டியுள்ளார்.