‘பங்களாதேஷ் எல்லையில் கண்ணிவெடிகளை புதைக்கிறது மியான்மார்’

மியான்மார் அரசாங்கம், மியான்மாருக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான எல்லைக்கு அருகில், கண்ணிவெடிகளைப் புதைத்துவருவதாக, பங்களாதேஷ் அதிகாரிகள் சிலரை மேற்கோள்காட்டி, றொய்ட்டெர்ஸ் செய்தி முகவரகம் செய்தி வெளியிட்டுள்ளது. ராக்கைன் மாநிலத்தில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் காரணமாக, அங்கிருந்து தப்பி, பங்களாதேஷை அடைந்துள்ள றோகிஞ்சா முஸ்லிம்கள், திரும்பவும் நாட்டுக்குள் வருவதைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என நம்புவதாக, அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓகஸ்ட் 25ஆம் திகதி ஆரம்பித்த வன்முறைகளைத் தொடர்ந்து, குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதோடு, 125,000 றோகிஞ்சா முஸ்லிம்கள், பங்களாதேஷுக்குத் தப்பியுள்ளனர். இதன் காரணமாக, மாபெரும் மனிதாபிமான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, பங்களாதேஷ் – மியான்மார் எல்லைக்கு மிக அருகில், மியான்மாரின் கட்டுப்பாட்டுப் பகுதியில், எல்லை வேலிக்கு அண்மையாக, இந்தக் கண்ணிவெடிகள் புதைக்கப்படுகின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பாக, புகைப்பட ஆதாரங்கள் மூலமாகவும் தகவல் தருபவர்கள் மூலமாகவும் அறிந்து கொண்டதாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

“எல்லை வேலிக்கு அருகில் நின்றி, 3 அல்லது 4 குழுக்கள் பணியாற்றி, நிலத்துள் ஏதாவதொன்றைப் புதைத்துக் கொண்டிருந்ததை, எங்களுடைய படையினரும் கண்டனர். எங்களுடைய தகவல் மூலங்கள் மூலமாக, அவர்கள் கண்ணிவெடிகளைப் புதைக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தினோம்” என, தகவல் மூலமொன்று தெரிவித்தது.

இதேவேளை, றொய்ட்ர்ஸ் செய்திச் சேவைக்கு, பங்களாதேஷின் எல்லைக் காவல் அதிகாரியொருவர் கருத்துத் தெரிவிக்கும் போது, எல்லைக்கு அருகில், மியான்மாரின் பகுதியில், நேற்று முன்தினம், இரண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டன என்று கூறியிருந்தார்.

மியான்மாரிலிருந்து பங்களாதேஷுக்குச் சென்ற அகதிகளில் ஒரு சிறுவனின் இடது கால், இல்லாத நிலையிலேயே பங்களாதேஷுக்குச் சென்றிருந்தான். இன்னொரு சிறுவன், சிறிய காயங்களுடன் வந்திருந்தான். இந்தக் காயங்களும், கண்ணிவெடிகளின் வெடிப்புக் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

றோகிஞ்சா முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதில், போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லையென, சர்வதேச ரீதியான எதிர்ப்பைச் சந்தித்துள்ள மியான்மார் அரசாங்கத்துக்கும் அதன் தலைவி ஆங் சாங் சூகிக்கும், தற்போது புதிதாக வெளியாகியுள்ள தகவல்கள், மேலும் அழுத்தத்தை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.