பிரிட்டன் மன்செஸ்டரில் பயங்கர குண்டு வெடிப்பு! 19 பேர் மரணம்! 50ற்கு அதிகமானோர் படு காயம்!

நேற்றிரவு பிரித்தானிய நேரம் சுமார் 10.30 மணியளவில் மன்செஸ்டர் நகரில் நடைபெற்றுக் கொண்டிருந்த இசை நிகழ்ச்சியொன்றில் பாரிய குண்டு வெடித்து, இச் செய்தி எழுதும் வரை 19 பேர் பலியாகியுள்ளனர். 50ற்கும் அதிகமானோர் படுகாயங்களுக்குள்ளாகியிருக்கின்றனர்.

இந்த மிக மோசமான அனர்த்தம் பற்றி மேலும் தெரியவருவதாவது: பிரிட்டனின் புகழ் பெற்ற மன்செஸ்டர் நகரிலிருக்கும் மன்செஸ்டர் அரினா என்ற பிரமாண்டமான உள்ளரங்கில் ‘சிங்கர் அரியானா கிராண்ட் இசைவிழா’ (Singer Ariana Grande Concert) என்னும் இசை நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சி முடிவதற்குச் சிறிது நேரமே இருக்கும் போது பாரிய சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் அங்கு திரண்டிருந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் அலறியடித்துக் கொண்டு சிதறி ஓடினர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு அம்புலன்ஸுகளும் பொலிஸ் வாகனங்களும் விரைந்து வந்தன. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள். இது ஒரு பயங்கரவாத நடவடிக்கையாக இருப்பதற்கு வாய்ப்பிருப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள். குறித்த பகுதியில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.