பொய்மை இருளில்

சகோதரப் படுகொலைகள் தொடர்பாகவோ அல்லது சகோதர சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பாகவோ பேசப்படுவதை இற்றைவரை விரும்பாதவர்கள்,முகம் சுழிப்பவர்கள் பலர் தம்மை இற்றை வரை தம்மை மார்க்சியர்கள் என்றும் முற்போக்காளர்கள் என்றும் காட்டிக் கொள்ள முனைகிறார்கள்.
உண்மையில் இவர்கள் நவ பாசிச சாயல் கொண்டவர்கள்.
தேச- இன- குடாநாட்டு -வட்டார குழு அடையாளங்களுக்குள் தம்மை மூழ்கடித்தவர்கள் மார்க்சியர்களாகவோ முற்போக்காளர்களாகவோ சராசரி ஜனநாயக வாதிகளனாகவோ கருதமுடியாது.
இன்று ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறிசபாரட்ணம் படுகொலை செய்யப்பட்ட தினம்.வீதி விதியாக ரெலோ போராளிகள் குற்றுயிராக எரிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக ஸ்ரீ சபாரட்ணம் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சகோதரப் படுகொலைகளுடன் ஈழப்போராட்டம் முடிவடைந்து விட்டது என்பது எமது நிலைப்பாடு.
இதற்குப் பிறகு அதற்கு அறம் சார்ந்த அர்த்தம் ஏதும் இருக்கவில்லை.
ஈழப்போராட்ட வரலாற்றில் தொடர்ச்சியாக நடந்த இத்தகைய படுகொலைகள் தொடர்பாக சுய விமர்சனத்திற்கு சுயவிசாரணைக்கு உட்படுத்தாத சமூகத்திற்கு மனித உரிமை ஜனநாயகத்தைப்பேசுவதற்கான தார்மீகத் தகுதி உண்டா?
இத்தகையவற்றை கண்டும் காணாமல் போவதால் தான் இற்றை வரை உண்மையைத் தரிசிக்கமுடியாதாக கற்பிதங்களில் பொய்மை இருளில் மூழ்கியதாக இந்த சமூகம் இருந்து கொண்டிருக்கிறது.
“நாங்கள் மாத்திரம் தான் துன்பப்பட்டோம்” என்ற சுய பச்சாத்தாபம் விட்டெறியப்பட வேண்டும். யார் அந்த நாங்கள் என்பதும் முக்கியமான கேள்வி.
ஏனெனில் இங்கு பரவலாகவே துன்பங்களில் தீண்டாமை பாராட்டப்படுகிறது.
அரச பயங்கரவாதிகளால் காணாமல் போக்கடிக்கபட்டவர்கள் சிறையில் வாடுபவர்கள் தொடர்பான அக்கறைகள் எந்தளவு முக்கியமானதோ அதற்கு எந்த விதத்திலும் குறையாத முக்கியத்துவம் வாய்ந்தவை புலிமையவாத சகோதரப்படுகொலைகளும் அதனோடு தொடர்பு பட்ட சித்திரவதைமுகாம்களும் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களும்.
இதனைப்பற்றிப்பேசாமல் விடுதலை பற்றி பேசுவது அறமன்று

(சுகு சிறீதரன்.)