பிலிப்பைன்ஸைப் பின்பற்றுகிறது இந்தோனேஷியா

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக றொட்ரிகோ டுட்டேர்ட்டே பதவியேற்றதைத் தொடர்ந்து, அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் சர்ச்சைக்குரிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையான “போதைக்கெதிரான போரினால்” உந்தப்பட்டு, அந்நாட்டின் அயல்நாடான இந்தோனேஷியாவிலும், அவ்வாறான நடவடிக்கையொன்று எடுக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இந்த இரு நாடுகளும், போதைப்பொருளுக்கெதிராகத் தங்களது நடவடிக்கைகளை ஏற்கெனவே அறிவித்துள்ள போதிலும், கடந்த 2 மாதங்களாக பிலிப்பைன்ஸ் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள், கடுமையானதாக அமைந்துள்ளன. இக்காலத்தில், சுமார் 2,400 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே, இரு நாட்டுத் தலைவர்களும் அடுத்த வாரத்தில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர். இதில் முக்கிய அம்சமாக, போதைப்பொருளுக்கெதிரான நடவடிக்கையே அமையவுள்ளது.

அத்தோடு, இந்தோனேஷியாவின் போதைப்பொருளுக்கெதிரான பிரிவு, அதிக ஆயுதங்களையும் தொழில்நுட்பத்தையும் உள்வாங்கவுள்ளதோடு, புலனாய்வாளர்களையும் மோப்பநாய்களையும் தங்களது பிரிவில் சேர்க்கவுள்ளது.

இதை உறுதிப்படுத்திய இந்தோனேஷியாவின் போதைப்பொருளுக்கெதிரான பொலிஸ் பிரிவின் தலைவர், “போதைப்பொருள் கடத்துபவரின் உயிர், முக்கியமற்றது, ஏனெனில், அவர் பாரிய படுகொலைகளை (மறைமுகமாக) மேற்கொள்கிறார்” என்று தெரிவித்தார்.