பூமி அளவான நூற்றுக்கும் அதிக வேற்று உலகங்கள் கண்டுபிடிப்பு

நாஸாவின் கெப்லர் தொலைநோக்கி வேற்று நட்சத்திரங்களை வலம்வரும் நூற்றுக்கும் அதிகமான பூமியின் அளவு கிரகங்களை கண்டுபிடித்துள்ளது. அதேபோன்று உயிர்வாழ தகுந்த மற்றும் திரவ நீர் இருக்க சாத்தியம் கொண்ட வலயத்தில் உள்ள ஒன்பது சிறிய கிரகங்களும் அவதானிக்கப்பட்டுள்ளன. கெப்லர் தொலைநோக்கி புதிதாக கண்டுபிடித்திருக்கும் 1,284 கிரகங்களின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட வேற்று கிரகங்களின் எண்ணிக்கை தற்போது இரட்டிப்பாகியுள்ளது.

சூரிய குடும்பத்திற்கு வெளியே இருக்கும் அதிக எண்ணிக்கையிலான கிரகங்கள் தொடர்பில் அறிவிக்கப்படுவது இது முதல் தடவை என்று நாஸா குறிப்பிட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற டெலிகொன்பிரன்ஸ் ஊடான கலந்துரையாடலில் விஞ்ஞானிகள் இந்த புதிய கண்டுபிடிப்புகள் குறித்த விபரத்தை வெளியிட்டனர்.

கெப்லரின் இந்த கண்டுபிடிப்பின் மூலம் எமது உலகம் போன்ற வேற்று உலகங்கள் பொதுவாக இருப்பதை வானியலாளர்களால் புரிந்துகொள்ள முடிந்துள்ளது.

கலிபோர்னியாவில் இருக்கும் நாஸா ஆய்வு மையத்தின் கெப்லர் திட்ட விஞ்ஞானி கலாநிதி நடாலி படல்ஹா குறிப்பிடும்போது, இந்த கணிப்புகள் கொண்டு பால் வீதியில் உயிர்வாழ சாத்தியம் கொண்ட 10 பில்லியனுக்கும் அதிகமான கிரகங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

“சுமார் 24 வீதமான நட்சத்திரங்கள் உயிர்வாழ சாத்தியம் கொண்ட கிரகங்களை பெற்றுள்ளன. அவை பூமியின் அளவை விடவும் 1.6 மடங்கு சிறியதாக இருக்கும். இந்த அளவான கிரகங்களே பாறை உலகமாக இருக்க வேண்டும் என்று நாம் கணித்திருக்கிறோம்” என்று கலாநிதி படல்ஹா குறிப்பிட்டார்.

“அண்மித்து இருக்கும் உயிர்வாழ சாத்தியம் கொண்ட கிரகம் எங்கே இருக்கிறது என்று கேட்டால் அது 11 ஒளியாண்டுகளுக்குள் இருக்கிறது என்று குறிப்பிடலாம். அது எமக்கு மிக நெருங்கிய தூரமாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

2009 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்லர் தொலைநோக்கி, நட்சத்திரங்களை இடைமறித்து அதன் கிரகங்கள் பூமிக்கு நேர்கொட்டில் பயணிக்கும்போது ஏற்படும் ஒளி மங்கலை கொண்டே புதிய கிரகங்களை கண்டுபிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.