‘பொலன்னறுவைக்கு தாருங்கள்’

“அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு எதிர்ப்புகள் எழுகின்றன. அபிவிருத்தி திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்ட பின்னரும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஹம்பாந்தோட்டையினை அபிவிருத்தி செய்யப்படக்கூடாது என்று எண்ணினால், அதற்கான பணத்தை எனக்குத் தாருங்கள், நான், பொலன்னறுவையை அபிவிருத்தி செய்துகாட்டுகின்றேன்” என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுக்கொண்டார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது ஆண்டு நிறைவையொட்டி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், ‘பேண்தகு யுகம்’ என்ற தொனிப்பொருளின் கீழ், நேற்று (08) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

“மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகள், நான்கு வருடங்களுக்குப் பின்னர் நடைபெறவுள்ள தேர்தல் பற்றிக் கதைத்துக்கொண்டிருக்கின்றனர். ஜனாதிபதி தேர்தல், கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்றது. அந்த நேரத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உலகளாவிய ரீதியிலான கடுமையான அணுகுமுறைகளுக்கும் முகங்கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதோடு, பொருளாதார நெருக்கடிக்கும் முகங்கொடுத்திருந்தார்.

ஆனால், நல்லாட்சி அரசாங்கம் வந்ததன் பின்னர், மின்சாரக் கதிரைப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஜனாதிபதிக்கு, இராணுவ வீரர்களும் உயர்மட்ட அதிகாரிகளும் பின்னால்சென்ற காலமும் மாறியது” என்று இதன்போது அவர் கூறினார்.

“மக்கள் மீது திணிக்கப்பட்டிருந்த சர்வாதிகாரமும் ஆக்கிரமிப்பும், முரட்டுத்தனமான ஆட்சியும் நீங்கி, அதற்கு பதிலாக மரியாதையும் சுதந்திரமும் கிடைத்துள்ளது. ஒழுக்கமான ஜனநாயகத்தாலும் கடவுளுக்கு பயந்த ஆட்சியினாலுமே இவையனைத்தும் இடம்பெற்றுள்ளன.

கடந்த இரண்டு வருடங்காக என்ன செய்தீர்கள் என்று சிலர் கேள்வியெழுப்புகின்றனர். உலகளாவிய சமுதாயத்தின் மத்தியில், மிகவும் கீழ்த்தரமாக பேசப்பட்ட இலங்கையோடு, அதே உலகளாவிய சமுதாயம் நற்புறவுடன் பழகுகின்றது.

கடந்த இரண்டு வருட காலப்பகுதியில், எந்தவோர் ஊடகவியலாளரும் கொலை செய்யப்படவில்லை. காணாமல் ஆக்கப்படவில்லை. நாட்டை விட்டு தலைமறைவாகவில்லை. இவையனைத்தும் மாற்றங்கள் இல்லையா?” என்று இதன்போது அவர் கேள்வியெழுப்பினார்.

“இது ஒருபுறமிருக்க, அரச ஊழியர்களது சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டது. இது வரலாற்றிலேயே இல்லாத அதிகரிப்பாகும். தனியார் ஊழியர்களது அடிப்படைச் சம்பளம் 2,500 ரூபாயால் அதிகரிக்கப்பட்டது. ஓய்வூதியத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. சிறப்புத் தேவையுடைய 20 பொருட்களுடைய விலை குறைக்கப்பட்டுள்ளது. எரிபொருள், எரிவாயு, மின்சாரம் போன்ற அடிப்படைக்கட்டணங்கள், கடந்த இரண்டு வருடங்களுக்குள் குறைக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில், இலங்கையின் மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள், சட்டம் மற்றும் ஒழுங்கு, நீதிக்கு வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரம், ஊடக சுதந்திரம், யுத்தக்குற்றம், அபிவிருத்தி திட்டங்கள், நாட்டின் நிர்வாகம், மனிதாபிமானம் போன்ற பல்வேறான விடயங்கள் குறித்து, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும், கேள்வி எழுப்பப்பட்டன. தற்போது, இலங்கையை பற்றிய கேள்வியை, யார் கேட்கின்றனர்?” என்று இதன்போது அவர் வினவினார்.

ஊடகங்கள் சுயாதீனமாக செயற்படுகின்றன. ஜனாதிபதியையும் பிரதமரையும், அமைச்சர்களையும் அவமானப்படுத்துவதற்கான சுதந்திரம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளை தவறாக மேற்கோள்காட்டி, கட்டுரைகளை எழுதுவதற்கு அவர்களால் முடிகிறது. எம்மைப்பற்றி நையாண்டி கார்ட்டூன்களை வரைந்து, மற்றையவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்கு, அவர்களால் முடிகிறது. ஆனால், 2 வருடங்களுக்கு முன்னர், ஊடகவியலாளர்கள் இவ்வாறு செய்திருந்தால், அவர்களுடைய நிலைமை என்னவாகி இருக்கும் என்பதை, நினைத்துப்பாருங்கள்” என்றும் கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“எதிர்வரும் 10 வருடகாலப்பகுதிக்குள், இலங்கையை மிகவும் சிறப்பான அபிவிருத்தி அடைந்த நாடாக நல்லாட்சி அரசாங்கம் மாற்றும். ஆசிய நாடுகளில், டொப் 10 வருமானம் உழைக்கும் நாட்டுக்குள் ஒன்றாக இலங்கையை மாற்றுவோம். இந்த முயற்சியில், அரசியல்கட்சிகளும், அரசியல்வாதிகளும் பங்கேற்க வேண்டும். ஒன்றிணைந்து சந்தோஷமாக செயற்படுவோம். அவ்வாறு இருந்தால், எம்முடைய பயணத்தை எவறாலும் தடுத்து நிறுத்த முடியாது” என்று இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டார்.