போர்க்குற்றங்களை 83லிருந்து விசாரிக்கவும் – டக்ளஸ்

போர்க்குற்ற விசாரணைகள், 1983ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, இதில் அரசியல் பழிவாங்கல்களுக்கு இடமளிக்கக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் வேண்டும். அது சர்வதேச விசாரணையா?, உள்ளக விசாரணையா?, கலப்பு நீதிமன்ற விசாரணையா? என்பது தொடர்பில் தேவையற்ற விவாதங்களையும் கால இழுத்தடிப்புக்களையும் நாம் விரும்பவில்லை. இந்த விசாரணைப் பொறிமுறையானது போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கின்ற விதமாகவும் அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வக் கட்சிகளின் கூட்டத்துக்கு அமைவாக ஈ.பி.டி.பி. கட்சி சார்பில் முன்வைக்கப்படுள்ள பரிந்துரைகளில் அவர் தெரிவித்துள்ளதாவது,

விசாரணைகள், உண்மைகளைக் கண்டறிவதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி மற்றும் பரிகாரங்கள் கிடைப்பதற்கு ஏதுவாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக, விசாரணைகள், 1983ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட வேண்டும். இதில் அரசியல் பழிவாங்கல்களுக்கு இடமளிக்கக்கூடாது.

போரை நடத்தியவர்கள், வரவேற்றவர்கள், அறைகூவல் விடுத்து மக்களை அழிவுகள் நோக்கி தூண்டிவிட்டவர்கள், இளைஞர் மற்றும் யுவதிகளை போருக்கு ஆட்சேர்ப்புச் செய்தவர்கள் இதன்போது சட்டத்தின் முன்னிறுத்தப்பட வேண்டும்.

ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதற்கான காரணிகள் ஆராயப்பட்டு, பரிகாரத்துக்கான வழிமுறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக எமது பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு இந்த விசாரணைகள் வழியேற்படுத்துவதாக அமைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.