மனிதம் இன்னும் வாழ்கிறது! நிரூபித்தனர் தமிழர்கள் உள்ளிட்ட குவைத் வாழ் மக்கள்!! குவிந்தன குளிர் ஆடைகளுடன் நிவாரண பொருட்கள்!!!

உள்நாட்டு போரின் பிடியில் சிக்கியுள்ள சிரியாவில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இலட்சக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். சிரியாவின் பெரிய நகரம் அலெப்பா. இங்குதான் அதிக அளவில் தாக்குதல் நடக்கிறது. அங்குள்ள மருத்துவமனை தாக்கப்பட்டு மருத்துவக் கருவிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு விட்டன. ஆனால், போரில் காயமடையும் மக்கள் அந்த மருத்துவமனையை நோக்கித்தான் ஓடுகிறார்கள். இந்த அபலை மக்களின் துயரங்களுக்கு அங்குள்ள இந்த மருத்துவமனையும் சில மருத்துவர்களும்தான் ஆறுதல். காயம்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய கட்டில் இல்லாத காரணத்தால் அவர்களை தரையில் படுக்க வைத்து அறுவை சிகிச்சை செய்கிறார்கள் மருத்துவர்கள்.

இலட்சக்கணக்கான மக்கள் உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி, வாழ வீடின்றி சொந்த நாட்டில் அகதிகளாக வாழும் அவலநிலையை கருத்தில் கொண்டு, “இன்னும் மனிதம் மரணிக்கவில்லை. அது உயிருடன்தான் உள்ளது” என்பதை உலகிற்கு உணர்த்தும் விதமாக குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், குவைத் வாழ் மக்கள் அனைவருக்கும் குறிப்பாக தமிழர்களுக்கு “சிரியாவில் வாடும் மக்களுக்கு நம்மால் இயன்ற சிறிய உதவிகளை செய்வோம் வாரீர்” என்று அழைப்பு கொடுத்தது.
“மனிதம் இன்னும் வாழ்கிறது” என்பதை நிரூபிக்கும் வகையில் குவைத் வாழ் தமிழர்களும், பிற மாநில உறவுகளும், குவைத் நாட்டினரும், பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் தங்களின் நிவாரணப் பொருட்களை குவைத் தமிழ் பள்ளிவாசலில் குளிர் கால ஆடைகள், குழந்தைக்கான உடைகள், விரிப்புகள், காலணிகள், போர்வைகள் என கொண்டு வந்து சேர்த்தனர். அதிகமானோர் புத்தாடைகளையே அன்பளிப்பாக வழங்கினர். சிலர் உதவி தொகைகளை கொடுத்து ஆடைகளை வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.
இப்படியாக குவைத் வரலாற்றில் முதல் முறையாக வெளிநாட்டு அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், சுமார் 5 டன் (ஐயாயிரம் கிலோ) ஆடைகளை நிவாரண உதவிகளாக பெற்றது. அனைவரும் ஜாதி, மதம், இனம், மொழி, அமைப்பு, இயக்கம், கொள்கை வேறுபாடின்றி அள்ளி வழங்கினர். நிவாரணப் பொருட்கள் அனைத்தும் முறையாக கட்டப்பட்டு “குவைத் நிவாரண இயக்கம்” நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இன்னும் பொருட்கள் இருக்கின்றன. பெற்றுக் கொள்ளுங்கள் என்று தொடர்ந்து அழைப்புகள் வந்துக் கொண்டே இருக்கின்றன.
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், களப்பணியாளர்கள், செயல் வீரர்கள் அனைவரும் முறையான திட்டமிடலுடன் இந்த மாபெரும் பணிகளை செய்து முடித்தனர். ஆடைகளை அள்ளி வழங்கிய அனைத்து மக்களுக்கும், இந்த சேகரிப்பு முகாமுக்கு பக்கபலமாக இருந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்தனர். எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக ஆடைகளை சேகரித்து அல்லல்படும் மக்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வோம் என்றும் நிர்வாகிகள் குறிப்பிட்டனர்.
குவைத்தில் பல்வேறு தளங்களில் கடந்த பனிரெண்டு ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கு மட்டுமில்லாமல் உலகம் முழுக்க பல்வேறு தளங்களில் சிறப்பான முறையில் சேவையாற்றிக் கொண்டிருக்கும் முதன்மை அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், தன் சேவைகளின் அடுத்தக்கட்ட தொடர்ச்சியாக கடந்த இரண்டுகளுக்கு முன் “ஆப்பிரிக்கா, சிரியா, லெபனான், ஏமன், ஜோர்டன், ஃபலஸ்தீன் மற்றும் குவைத்” உள்ளிட்ட நாடுகளில் ஏழ்மையில் வாடும் மக்களுக்கு உதவி செய்வதற்காக முதல் முறையாக ஆடைகள் சேகரிப்பு முகாமை ஏற்பாடு செய்திருந்தது. குவைத் மக்கள் அன்பளிப்பாக அள்ளி வழங்கிய ஆடைகளை சேகரித்து குவைத்தில் இயங்கும் குவைத் பூப்யான் வங்கி துணையுடன் குவைத் வளைகுடா அறிவியல் தொழில் நுட்பப் பல்கலைக் கழகம் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
இதற்கு முன் பல்வேறு காலங்களில் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கபட்ட திருப்பூர், முஸாஃபர் நகர், ஜம்மு & காஷ்மீர், சென்னை, கடலூர், இலங்கை, கண்டியூர் உட்பட பல்வேறு இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் வாயிலாக உதவித் தொகைகளை இச்சங்கம் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.