மாற்று வேலைத்திட்டம் உள்ள அமைப்புகளுடன் அணிதிரளாவிடின் மலையக மக்கள் பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும் – இ.தம்பையா

 

மைத்திரி-ரணில் அரசாங்கமும் மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாத நிலையில் உள்ளது. இவ் அரசாங்கமும் வெளிநாட்டுக் கடன்களைத் தொடர்ந்து பெற்று வரும் நிலையில் 2018 ஆகின்ற போது இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படும் நிலை உள்ளது. இலங்கையின் அனைத்து உழைக்கும் மக்களும் இதற்கு முகம் கொடுக்க வேண்டி வரும். இதில் அதிகளவு பாதிப்பு மலையக மக்களுக்கு ஏற்படும். இந்த பாதிப்பில் இருந்து மக்கள் தம்மை பாதுகாக்கவும் புதிய பொருளாதார அரசியல் சமூக மாற்றத்திற்கு மாற்றுக் கொள்கை மற்றும் வேலைத்திட்டமுள்ள அமைப்புகளுடன் அணிதிரண்டு போராட வேண்டியதும் தவிர்க்க முடியாத ஒன்று. இதனை உணர்ந்து மலையக மக்கள் செயற்பட வேண்டும். இவ்வாறு காவத்தையில் இடம்பெற்ற கூட்டு மே தினத்தில் தலைமையுரை ஆற்றிய மக்கள் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையா குறிப்பிட்டார். அவ்வுரையில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

1000/= சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் இ.தொ.கா. உட்பட கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் சங்கங்கங்களுக்கோ முற்போக்கு தமிழ் கூட்டணிக்கோ இல்லை. இன்று மு.த.கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு ஒப்பந்தம் சட்டத்திற்கு முரணானது என்ற அடிப்படையற்ற கருத்துக்களை கூறி தங்களின் இயலாமையை வெளிப்படுத்தி வருகின்றன. கூட்டு ஒப்பந்தம் என்பது கைத்தொழில் பிணக்குச் சட்டத்திற்கு அமைவானதே. இவ்வாறான நிலையில் அதனை சட்டத்திற்கு முரணாது என்று கூறுவதனூடாக கூட்டு ஒப்பந்தத்தினூடாக சம்பள உயர்வை அவர்கள் மறுத்து வருகின்றனர். சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க தொழிலாளர் நலனில் அக்கறை கொண்ட தொழிற்சங்கங்கள் அமைப்புகள் அணித்திர வேண்டும் என்றார்.

சமூக சீராக்கல் இயக்கத்தின் அழைப்பாளர் கா.கமலதாசன் தனது உரையில்: என்று மலையக மக்கள் சலுகைகளை வழங்கி தங்களின் அரசியல் உரிமைகளை மறுக்கும் தலைமைகளை நிராகரிக்கின்றார்களோ அன்றுதான் மலையகத்தில் மாற்று அரசியலுக்கான பாதை விரிவடையும். பிரித்தானியர் காலம் தொட்டு இன்று வரை மலையக மக்கள் பலருக்கு நல்ல மூலதனம். சமகாலத்தில் அரசியல் தலைவர்களுக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்களுக்கும் நல்ல மூலதனமாகியுள்ளனர். மலையக மக்கள் யாருக்கும் மூலதனமாதை நிறுத்தி அரசியல் மாற்றத்திற்கான மூலதனமாக தம்மை மாற்ற வேண்டும் என்றார்.

மக்கள் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் நெல்சன் மோகன்ராஜ் தனது உரையில்: ஆசிரியர்களின் உரிமை என்பது மாணவர்களின் கல்விக்கான உரிமையோடு இரண்டரக் கலந்தது. 6000/= மாதாந்த கொடுப்பனவை பெறும் ஆசிரிய உதவியாளர்கள் மாணவர்களுக்கான கல்விக்கான உரிமைக்காக போராடுவதற்கு முன்னர் தமக்கான உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலையை ஆளும் வர்க்கமும் அவர்களின் மலையக பிரதிநிதிகளும் எற்படுத்தியுள்ளன. இவைகள் திட்டமிடப்பட்ட சதி. இன்று கல்வி இராஜாங்க அமைச்சர் மலையகத்தை சார்ந்த அரசியல்வாதியாக இருந்த போதும் ஆசிரிய உதவியாளர்களை ஆசிரியர் சேவையில் இணைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. பாடசாலைகளுக்கு வளங்கள் சமத்துவமற்ற வகையில் பகிர்ந்தளிக்கப்பட்டாலும் எல்லா பாடசாலைகளில் இருந்து உயர்ந்த பெறுபேறுகளை ஆசிரியர்கள் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று நியாயமற்ற வகையில் அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் கோருகின்றனர். இந் நிலைகளை மாற்ற ஆசிரியர்கள் முன்வர வேண்டம் என குறிப்பிட்டார்.

இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் இணை அழைப்பாளர் டபில்யூ. சோமரத்தின தனது உரையில்: இன்று ஆளும் வர்க்கங்கள் தங்களுக்கிடையில் பிரச்சினைகள் பிளவுகள் இருப்பதாக காட்டிக் கொண்டு மக்களை திசைத்திருப்பி விடுகின்றன. மஹிந்த – மைத்திரி, ரணில்- மஹிந்த பிளவுகள் அர்த்தமற்றவைகள் ஏனெனில் அவர்கள் அனைவரும் ஒரே அரசியல் பொருளாதார நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டவர்கள் என்றார்.

இக்கூட்டு மேதினக் கூட்டத்தில் மக்கள் பண்பாட்டுக் கழகத்தின் செயலாளர் பா. மகேந்திரன் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் அக்கழகத்தின் பாடலொன்று காணொலியாக ம.தொ.சங்கத்தின் பொதுச் செயலாளர் இ.தம்பையாவினால் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.