மாவட்டங்களைக் கைப்பற்றினோம்: தலிபானுக்கெதிரான படைகள்

பன்ஜ்ஷிருக்கு வடக்காகவுள்ள அயல் மாகாணமான பக்லனிலுள்ள டெஹ் சாலேஹ், பனோ, புல்-ஹெசர் மாவட்டங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் பிஸ்மிலாஹ் மொஹம்மடி தெரிவித்துள்ளார்.

தலிபானை எதிர்க்கவுள்ளதாக மொஹம்மடி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், எப்படைகள் குறித்த நடவடிக்கையில் பங்கேற்றன என்பது தெளிவில்லாமலுள்ளது.

உள்ளூர் பொலிஸ் தளபதியொருவரை மேற்கோள்காட்டிய உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசையான டொலோ நியூஸ், பக்லனிலுள்ள பனோ மாவட்டமானது உள்ளூர் ஆயுதப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், பலத்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து கருத்து எதனையும் தலிபான் தெரிவித்திருக்கவில்லை.

ஆப்கானிஸ்தானின் உப ஜனாதிபதி அம்ருல்லா சாலேயும், சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான முன்னாள் முஜாஹிதின் தளபதியான அஹ்மட் ஷா மசூட்டின் மகனான அஹ்மட் மசூட்டும் தலிபானுக்கு எதிராக பன்ஜ்ஷிரிலிருந்து செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இங்கு இராணுவ, சிறப்புப் படைகளின் 6,000க்கும் மேற்பட்ட போராளிகள் உள்ளார்கள் எனக் கூறப்படுகிறது. இவர்களிடம் சில ஹெலிகொப்டர்களும், இராணுவ வாகனங்களும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.