முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு உயரிய சபையில்

‘முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த எமது உறவுகளுக்கு இந்த உயரிய சபையில், அனைவரின் சார்பாகவும் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்’ என்று நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், ‘இறுதி யுத்தத்தின் போது, முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த எங்களுடைய உடன்பிறவா உறவுகளை நினைவுகூர்ந்து, நாம் அஞ்சலி செலுத்திவருகின்றோம். அந்தவகையில், முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த எமது உறவுகளுக்கு, இந்த உயரிய அவையில் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்’ என்றார். இதேவேளை, ‘மாரடைப்பால் காலமான, மன்னார் நகரசபையின் முன்னாள் நகரபிதா சந்தன பிள்ளை ஞானபிரகாசத்துக்கும் இச்சபையில் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்’ என்றார்.