மேற்கு வங்கத்தின் பெயர் இனி ‘பங்களா’ – சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ‘பங்களா’ என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு அதிகாரபூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்படும்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வங்காளம் இரண்டாக பிரிக்கப்பட்டது. நாடு சுதந்திரத்திற்கு பின் மேற்குவங்கம் இந்தியாவுடனும், கிழக்கு வங்கம் பாகிஸ்தானுடனும் இணைக்கப்பட்டன. கிழக்கு வங்கம் பின்னர் தனிநாடாக பங்களாதேஷ் என மாறியது.

இந்நிலையில் வங்காளத்தின் பாரம்பரியதை மீட்டெடுக்கும் விதமாக மேற்குவங்கத்தின் பெயரை மாற்ற அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு செய்தார். மேலும் மேற்குவங்கத்தின் ஆங்கில மொழியாக்கம் ‘வெஸ்ட் பெங்கால்’ என்பதால் மாநிலங்களின் பட்டியலில் இது கடைசி இடத்திற்கு வந்து விடுகிறது.

எனவே இதை மாற்றும் விதமாக 2011-ம் ஆண்டே மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தின் பெயரை வங்காள மொழியில் ‘பச்சிம் பங்கா’ என பெயர் மாற்றம் செய்தார். ஆனால் இதை மத்திய அரசு ஏற்கவில்லை.

இதன் பிறகு வங்காளத்தில் ‘பங்களா’ என்றும் ஆங்கிலத்தில் ‘பெங்கால்’ என்றும், இந்தியில் ‘பங்கால்’ என்று அழைக்கும் பரிந்துரையை அம்மாநில அரசு அனுப்பி வைத்தது. ஆனால் இதனையும் மத்திய அஅரசு ஏற்கவில்லை.

இந்நிலையில் மேற்குவங்கத்தின் பெயரை மீண்டும் ‘பங்களா’ என பெயர் மாற்றம் செய்ய அம்மாநில அரசு முடிவு செய்தது. இதன்படி வங்க மொழியில் மட்டுமின்றி, இந்தி, ஆங்கிலம் என அனைத்து மொழிகளிலும் ‘பங்களா’ என்றே அழைக்கும் விதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். மத்திய அரசு ஒப்புதல் அளித்தபின் அது அரசிதழில் வெளியாகும். அதன்பிறகு மேற்கு வங்கத்தின் பெயர் அதிகாரபூர்வமாக ‘பங்களா’ என பெயர் மாற்றம் செய்யப்படும்.