யாழில் ஆறு மாணவர்கள் கடலில் மூழ்கிப் பலி

யாழ்ப்பாணம், மண்டைத்தீவு கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் ஆறு மாணவர்கள் இன்று (28) பிற்பகல் கடலில் மூழ்கிப் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று பிற்பகல் 1.35 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மண்டைத்தீவு கடற்பரப்பில் இளைஞர்கள் 7 பேர் படகில் இருந்தவேளை அது மூழ்கியுள்ளது. கடலில் மூழ்கியோரில் ஒருவர் மாத்திரம் நீந்தி, கரையை வந்தடைந்துள்ளார். ஏனையோரில் ஐவரின் சடலங்கள் உடனடியாக மீட்கப்பட்டதுடன் மேலும் ஒருவரைத் தேடும் பணிகளில் பொலிஸாரும் கடற்படையினரும் ஈடுபட்டனர். அவர்களின் தீவிர தேடுதலின் பின்னர் மற்றையவரின் சடலமும் சற்றுமுன் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் உரும்பிராய், நல்லூர், கொக்குவில் பகுதிகளைச் சேர்ந்த 19 மற்றும் 20 வயதுடையவர்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. மீட்கப்பட்டோரின் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.