யாழ்ப்பாணத்தில் வருகிறது கிரிக்கெட் மைதானம்

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் புதிதாக இரண்டு கிரிக்கெட் மைதானங்களை அமைக்கவுள்ள இலங்கை கிரிக்கெட் சபை, கிரிக்கெட் அதிகம் பரவியிருக்காத இலங்கையின் பகுதிகளில், கிரிக்கெட்டை வளர்ப்பதற்கு முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. மேற்கூறப்பட்ட இரண்டு மைதானங்களும் அமைக்கப்படுவதற்கான அனுமதியை, இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்றுச் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. அண்மைய எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள மேற்படித் திட்டங்களுக்கு, 200 மில்லியன் ரூபாய் செலவிடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கருத்துத் தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா, யாழ்ப்பாணத்திலும் பொலன்னறுவையிலும் கிரிக்கெட் அரங்கை அமைப்பதற்கு, தலா 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளதோடு, இத்திட்டங்கள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, பொலன்னறுவை அரங்குக்கான திட்டங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாணத்தில், இலகுவாக மக்கள் அரங்குக்கு செல்லக் கூடியவாறு, பிரதான வீதிக்கு அண்மையில் பொருத்தமான இடத்தை தேடி வருவதாக டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கில் கிரிக்கெட் அரங்கு அமைவதற்காக, புலம்பெயர் தமிழர்களினால் பெரும் உற்சாகம் ஏற்படுத்தப்படுவதாக தெரிவித்த டி சில்வா, இதை நிஜமாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் யாழ்ப்பாண கிரிக்கெட் சங்கம் எடுத்து வருவதாக டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

முதலில், முதற்தர கிரிக்கெட் போட்டிகளை நடாத்தக்கூடியவாறே, இரண்டு அரங்குகளும் அமைக்கப்படவுள்ளதுடன், பின்னர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடாத்தக் கூடிய மைதானங்களாக மேம்படுத்தப்படவுள்ளதாக டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.