யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின சுவரொட்டிகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தினுள் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தும், மாவீரர் தினத்தை நினைவூட்டும் வகையிலான சுவரொட்டிகள், இன்று வெள்ளிக்கிழமை (25) ஒட்டப்பட்டுள்ளன.

நவம்பர் மாதம் 27ஆம் திகதி அனுஸ்டிக்கப்படும் மாவீரர் தினம், மற்றும் 26 ஆம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவருடைய பிறந்த நாள் என்பவற்றை கொண்டாடும் வகையிலான ‘இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கரிகாலன்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளும் மாவீரர் தினத்தை நினைவு கூரும் வகையிலான சுவரொட்டிகளும் பல்கலைகழக வளாகத்தில் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் வியாழக்கிழமை (24) வடமாகாண சபையில் இடம்பெற்ற அமர்வின்போது மாவீரர் தினத்தை நினைவு கூருவதற்கான பிரேரணை ஒன்று கொண்டு வந்த போதும் உறுப்பினர்கள் சிலரின் எதிர்ப்பால் பிரேரணை மீளப்பெறப்பட்டது.
அத்துடன் கூட்டு நினைவு கூரலுக்கு அரசு தடை விதித்துள்ள நிலையிலும் இவ்வாறான ஒரு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை மாணவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் யாழ், பல்கலைக்கழகத்துக்குள் புதன்கிழமை (23) அதிகாலை அத்துமீறி ஆயுதங்களுடன் நுழைந்த சீருடை தரித்த பொலிஸார், சக மாணவர் ஒருவருடைய பிறந்தநாளை கொண்டாடிய பல்கலைக்கழக மாணவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துச்சென்றுளளமை குறிப்பிடத்தக்கது.