ராஜிவ் காந்தி கொல்லப்பட்டது குறித்து சர்ச்சைப் பேச்சு: கைதாகிறாரா சீமான்?

தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. அவர் பேசுகையில், “நாங்கதான் ராஜிவை கொன்றோம். ஒருநாள் வரலாறு திரும்ப எழுதப்படும். அப்போது, இந்திய இராணுவத்தை அமைதிப் படை என்ற பெயரில் அனுப்பி தமிழின மக்களை அழித்தொழித்த, தமிழின துரோகி ராஜிவை தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு எழுதப்படும்” எனப் பேசினார்.

இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. சீமானைத் தேசத் துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் எனவும், நாம் தமிழர் கட்சியின் அங்கிகாரத்தை நீக்க வேண்டும் எனவும் கூறி தமிழ்நாட்டின் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டார்.

சீமானின் பேச்சு தொடர்பாக சார்பில் பொலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சீமான் மீது விக்கிரவாண்டி பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, வேலூர் மாவட்டத்திலும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் உமராபாத் பொலிஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சர்ச்சை பேச்சு தொடர்பாக சீமான் தெரிவிக்கையில், “இந்த விஷயத்தில் வழக்கு பதிய எதுவுமில்லை, இதுபோன்ற எத்தனையோ வழக்குகளை சந்தித்துள்ளேன். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் கொந்தளித்து வழக்கு பதிவதால் மகிழ்ச்சி அடைகிறேன். விடுதலை புலிகள் இயக்கத்தை அழித்து விட்டோம் என சொல்லிக் கொண்டு, இன்னும் ஏன் அந்த இயக்கத்தின் மீது தடை விதித்துள்ளீர்கள். பிரபாகரனை முன்னிறுத்தி தான் அரசியல் செய்வோம். ஒருநாள் பிரபாகரன் படத்தை பச்சை குத்திக்கொண்டு நாடாளுமன்றத்தின் உள்ளே செல்வோம். ராஜிவ் குறித்து நான் பேசியதை திரும்ப பெற மாட்டேன்” என்று கூறியுள்ளார்.