வடக்கு கிழக்கிலிருந்து சிங்கள மக்களை வெளியேற்ற சூழ்ச்சி?

வடக்கு கிழக்கிலிருந்து சிங்கள மக்களை வெளியேற்றுவதற்கு சூழ்ச்சித் திட்டம் தீட்டப்படுவதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் வேறும் தரப்பினரும் இணைந்து இந்த சூழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் சிங்கள மக்களை தங்களது சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றுவதற்கு முயற்சிக்கப் படுவதாகவும் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களை மீளவும் இணைக்க முயற்சிக்கப்படுவதாகவும் வடக்கில் காணப்படும் சிங்கள பாடசாலைகளுக்கு மாகாணசபை எந்தவிதமான உதவிகளையும் வழங்குவதில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறிப்பாக வவுனியா வெலிஓயா போன்ற பிரதேசங்களில் சிங்கள பாடசாலைகளில் நிலவி வரும் ஆசிரிய வெற்றிடங்கள் நிரப்பப்படுவதில்லை எனவும் சிங்கள மக்களிடமிருந்து பலவந்தமாக பெற்றுக்கொள்ளப்பட்ட காணிகளில் தமிழ் மக்கள் குடியேற்றப்படுவதாகவும் தெரிவித்துள்ள ஞானசார தேரர் கோகிலாய் சிங்கள மீனவர்கள் வாழ்ந்து வந்த கிராமம் எனவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.