விவசாயிகளின் மட்டு. பேரணியால் பதற்றம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு மற்றும் செங்கலடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதி விவசாயிகள் தங்கள் பகுதிகளிலிருந்து இன்று (08) காலை பேரணியாக மட்டக்களப்பு மாநகருக்கு வருகைதந்தனர்.

சுமார் 100க்கும் மேற்பட்ட உழவு இயந்திரத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களிலும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை தொங்கவிட்டவாறு விவசாயிகள் இதில் கலந்துகொண்டனர்.  

இந்தப் பேரணிகள், மட்டக்களப்பு நருக்குள் நுழைய முற்பட்ட போது, மட்டக்களப்பு விமான நிலைய சுமைதாங்கி பகுதியிலும் ஊரணி சந்தியிலும் பொலிஸாரால் தடைகள் ஏற்படுத்தப்பட்டு, உழவு இயந்திரங்கள் செல்வதற்கான அனுமதிகள் பொலிஸாரால் மறுக்கப்பட்டன.

இதன்போது, விவசாயிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் நிலையேற்பட்டதுடன், விவசாயிகள் தாங்கள் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தமாட்டோம். அமைதியான முறையில் எங்களது போராட்டத்தை முன்னெடுக்கின்றோம், எங்களை தடுத்தால் வீதியை மறித்து போராட்டம் நடத்துவோம் என வீதியில் அமர்ந்து போராட்டம் நடத்த முற்பட்டனர்.

இதனையடுத்து அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பொலிஸார் அவர்களை நகருக்கு செல்ல அனுமதித்த நிலையில், அமைதியான முறையில் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு காந்திப்பூங்கா வரையில் ஊர்வலமாக வந்து, பின்னர் மத்திய வீதியூடாக வாவிக்கரை வீதியை சென்றடைந்து அங்கிருந்து மாவட்டச் செயலகம் வரையில் பேரணி சென்றது.

மாவட்டச் செயலகத்தின் வாயிற்கதவை பொலிஸார் பஸ் கொண்டு மறித்தபோது, அதற்கு எதிராக விவசாயிகள் கடுமையான ஆட்சேபனையினை தெரிவித்ததுடன், குறித்த பஸ்ஸை அகற்றாவிட்டால், அப்பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கப்போவதாகவும் விவசாயிகள் எச்சரித்ததை தொடர்ந்து பஸ் அங்கிருந்து அகற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து மாவட்டச் செயலகத்துக்குள் செல்வதை பொலிஸார் தடுத்தபோதும் முன்வாசல் ஊடாக மாவட்டச் செயலக வாசல் வரையில் விவசாயிகள் கோசங்களை எழுப்பியவாறு சென்றபோதிலும் மாவட்டச் செயலக உள்வாசல் கதவை பூட்டி விவசாயிகள் உள் நுழைவதை பொலிஸார் தடுத்தனர்.

இதன்போது மாவட்டச் செயலகத்துக்குள் யாரும் உள்நுழைய முடியாதவாறு வாயிற்கதவை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் இந்த முற்றுகை போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன், விவசாயிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் மகஜரையும் பெற்றுக்கொண்டதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

முற்றுமுழுதாக சேதனப்பசளை திட்டம் என்பதை விவசாயிகள் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் 50 சதவீதம் சேதனப்பசளையை வழங்கினால் 50 சதவீதம் யூரியாவை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என விவசாயிகள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.