2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: ’சதி என்பது தெளிவாகத் தெரிகிறது’

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் ராகம தெவத்த தேசிய பசிலிக்காவில் நேற்று (14) இடம்பெற்ற விசேட ஆராதனையின் பின்னரே மேற்கண்ட விடயத்தை ஊடகங்களிடம் அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

2019 ஜனாதிபதித் தேர்தலில் ஆதாயத்தைப் பெறுவதற்காக தேவையற்ற அச்சம், நிச்சயமற்ற தன்மை மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உளவுத்துறை அறிக்கைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையா என்பது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை பரிந்துரைக்கிறது என்று பேராயர் கூறினார்.
 
தாக்குதல்கள் நடந்து 1,000 நாட்கள் கடந்துவிட்டன என்றும் உண்மைகளை மறைக்க முயலும் தனிநபர்களின் பொய்கள், கடவுளின் கிருபையால் வெளிப்படுத்தப்படுகின்றன என்றும் கூறினார்.
 
சில அரசியல்வாதிகள் இந்த தாக்குதல்களை அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டிய பேராயர், மேலும் இந்த நபர்கள் விசாரணை மற்றும் உண்மையை வெளிக்கொணரும் முயற்சிகளை முறியடித்துள்ளனர் என்பது தெளிவாகிறது என்றார்.

பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஆகியோரையும் கர்தினால் கடுமையாக விமர்சித்தார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழு அறிக்கையானது ஆதாரங்களின் அடிப்படையில் முறையாக உருவாக்கப்பட்ட உத்தியோகபூர்வ சட்ட ஆவணம் என்று குறிப்பிட்ட அவர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிக்கையை மதிப்பில்லாத ஆவணமாக குறைமதிப்புக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்கு அவ்வாறு செய்ய அதிகாரம் உள்ளதா என கர்தினால் மல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த அறிக்கையை பொதுமக்களுக்கு வெளிப்படுத்துமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

அறிக்கையில் குறிப்பிட்ட சில அதிகாரிகள் தமது கடமைகளை புறக்கணித்ததாகக் காணப்பட்ட போதிலும் அவர்களுக்கு எவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தாக்குதல் நடத்தப்படுவதைத் தடுக்காத தலைவர்களின் உண்மை வெளிப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல குறைபாடுகள் காணப்படுவதாக கொழும்பு பேராயர் தெரிவித்துள்ளார்.

அன்று காலை தேவாலயத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்து கொண்ட ஒரு நபரை அதிகாரிகள் விசாரிக்கத் தவறியது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், சம்பவம் தொடர்பாக அப்பாவிகள் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.

விசாரணைகள் கடுமையான முறையில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்டுள்ளமைக்கான காரணத்தை பொலிஸார் ஆராய்ந்து ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு இடையில் ஒற்றுமைகள் உள்ளதா என கர்தினால் மல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

அனைத்து சம்பவங்களின் பின்னணியில் உள்ள உண்மை வெளிவரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.