தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் சமூகத்தின் ஜனநாயகத்துக்காகவும் உழைக்கும் மக்களின் விடிவுக்காகவும் தம் உயிரை அர்ப்பணித்த தோழர்கள், சகோதர இயக்கப் போராளிகள், பொதுமக்கள் அனைவரையும் நினைவு கூரு முகமாக “தியாகிகள் தினம்” – 2016க்கான நிகழ்வுகள் இம்முறை மட்டக்களப்பில் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுவரை பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் ஆக செயற்பட்டு வந்த நாம் “பத்மநாபா மக்கள் முன்னணி(PPF)” எனும் அமைப்பின் பெயரிலும் அதன் அரசியற் கட்சி அமைப்பான ” தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி(SDPT)” எனும் புதிய கட்சியின் பெயரிலும் மற்றும் அரசியல் சமூக ஆர்வமுள்ள சகல முற்போக்கு ஜனநாயக சக்திகளையும் இணைத்துக்கொண்டு தோழர் பத்மநாபா அவர்கள் வழிகாட்டிய மற்றும் வாழ்ந்து காட்டியபடி அவர் பாதையில் பரந்துபட்ட மக்களின் இயக்கமாக செயற்பட திடசங்கற்பம் பூண்டுள்ளோம் என்பதை இத்தால் சகலருக்கும் அறியத் தருகிறோம்.

நடைபெறவுள்ள தியாகிகள் தின நிகழ்வில் மக்களுக்கான போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கான அஞ்சலியும் அவர்களை நினைவு கூரும் உரைகளும் இடம்பெறவுள்ளன. இந்நிகழ்வில் முன்னாள் வடக்கு-கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் கலந்து கொள்ளவுள்ளார். அத்துடன் பத்மநாபா மக்கள் முன்னணியின் பல முக்கியஸ்தர்கள் மற்றும் தோழமைக் கட்சிகளின் பிரமுகர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர். கடந்த கால போராட்டங்களின் போது உயிர் நீத்த தியாகிகளின் குடும்பங்கள், சகோதர இயக்க உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

பத்மநாபா மக்கள் முன்னணி(PPF)
தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி(SDPT)