ஆபிரிக்காவின் இரு மரணங்கள்: வரலாறு எவ்வாறு நினைவுகூரும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

வரலாறு எல்லோரையும் நினைவில் வைத்திருப்பதில்லை. அவ்வாறு நினைவில் இருப்பவர்களும் எதற்காக நினைவிலுள்ளார்கள் என்பதிலேயே, அவர்களின் சமூகப் பெறுமானம் உள்ளது. வரலாற்றில் இடம்பெற்றோர் எல்லோரும் நினைக்கப்படுவதுமில்லை. வரலாறு ஒருவரை எதற்காக, எவ்வாறு நினைவில் வைக்கிறது என்பதே, இருப்பின் வெற்றியைத் தீர்மானிக்கிறது. நினைப்பதும் மறப்பதும் காலத்தின் வழுவல. நினையாமல் இருப்பதும், மறவாமல் நினைப்பதும், அவரவர் வாழ்ந்த காலத்தைக் கூறும் உரைகற்கள்.

இம்மாதம் ஆபிரிக்காவின் ஆளுமைகள் இருவர் மரணித்துள்ளார்கள். ஒருவரை அறியும் அளவுக்கு, உலகம் மற்றவரை அறியாது. ஒருவரை ஊடகங்கள் கொண்டாடும்; மற்றவர் அவ்வாறு கொண்டாடலை நாடியவர் அல்ல. அவரின் மரணச் செய்தியும் ஊடகவெளியில் பரவவில்லை.

முதலாமவர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமாக இருந்த கோபி அனான். மற்றவர், மார்க்சியப் பொருளியல் அறிஞர் சமீர் அமீன்.

இருவரும் உலக அரசியல் அரங்கில், முக்கிய பங்காற்றியவர்கள். அவர்களது பணிக்காக, உலகால் நினைக்கப்படுபவர்கள். ஆனால் இருவரையும், வரலாறு எவ்வாறு நினைவுகூரும் என்பதை, இக்கட்டுரை நோக்குகிறது.

சமீர் அமீன்: சமகால முதலாளித்துவத்தின் உள்வெடிப்பு

1931ஆம் ஆண்டு, எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் பிறந்த சமீர் அமீன், பொருளியலில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். மூன்றாம் உலக நாடுகளில், மார்க்சியக் கொள்கையைக் கடைப்பிடிப்பவை, எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி, பொருளியல் நோக்கில் முன்னோடி ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்.

ஐரோப்பிய மையப் பொருளியல் நோக்குகளுக்கு மாறாக, மூன்றாமுலக நாடுகளின் விசேட நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, ஆய்வுகளை முன்னெடுத்திருந்தார். தன் வாழ்நாள் முழுவதிலும், ஆபிரிக்காவில் வாழ்ந்த சமீர் அமீன், வெறும் ஆய்வாளராக மட்டும் திகழவில்லை. மாறாக, செயற்பாட்டாளராக, போராளியாகத் தன் வாழ்நாள் முழுவதும் பங்காற்றியிருந்தார்.

‘உலக அளவில் மூலதனத் திரட்டல்’ (Accumulation on a World Scale) எனும் அவரது முதலாவது நூல், அமெரிக்காவின் தலைமையிலுள்ள ஏகாதிபத்திய நாடுகள், ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளை வளர விடாது, ஏகபோக முதலாளித்துவச் சுரண்டலுக்கு ஆளாக்குவதைச் சான்றுகளுடன் நிறுவினார்.

“ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து, வன்முறை மூலமும் பிற வழிகளிலும் கொள்ளையடித்துச் சுரண்டிய செல்வமே, வளர்ச்சி அடைந்த நாடுகளின் மூலதனத் திரட்சியாக, அந் நாடுகளின் செல்வமாக இருப்பதோடு, அதுவே மேற்குலகை, இன்னமும் வளர்ச்சியடைந்ததாக வைத்திருக்கிறது” என்றார்.

வளர்ந்து வரும் இத்தகைய நெருக்கடியில் இருந்து, தம்மைத் தற்காக்க வேண்டுமாயின், வளர்ச்சியடைந்த நாடுகள் முன்வைக்கும் திட்டங்கள், நிர்ப்பந்தங்கள், நிபந்தனைகளுடன் கூடிய கடன்கள் ஆகியவற்றை, ஏற்பதைத் தவிர்க்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

1990ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியத்தின் முடிவையடுத்து, அமெரிக்கா தலைமையிலான, ஒருமைய உலகம் தோன்றியபோது, அதைப் பற்றிய தன் பார்வையை, 1992இல் ‘குழப்பங்களின் பேரரசு’ (Empire of Chaos) என்ற தனது நூலில் முன்வைத்தார்.

உருவாகிய புதிய உலகப் படிநிலையில், கடுமையான ஏற்றத்தாழ்வும், உத்தரவாதமற்ற தொழில்களும், அதன் பயனாகத் தொழிலாளர்களுக்கு உத்தரவாதமற்ற வாழ்க்கையும் ஏற்படும் என்றும், விவசாயத்தின் அழிவும் அதன் விளைவாக, உலக நாடுகளின் அரசியலில் அபாயமான மாற்றங்களும் ஏற்படும் என்றும் முன்னறிவித்தார்.

பிறப்பால் முஸ்லீமாயினும், இஸ்லாமிய அரசியல் மீது, கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இஸ்லாமிய அரசியல் ஏகாதிபத்தியங்களுக்கே சேவை செய்வதுடன், அவை ஏற்றத்தாழ்வையும் வறுமையையும் சுரண்டல் அமைப்புகளையும் வளர்க்கிறது என்றும் விமர்சித்தார்.

இஸ்லாமிய அரசியல், மக்கள் மய்யப்பட்டதாயன்றி, வெறுமனமே மதவாத அடிப்படையில், தன்னைக் கட்டமைப்பதால், அதன் அடிப்படைவாதக் கூறுகள் மனிதநேயத்துக்கும் சமத்துவத்துக்கும் எதிரானவை என்றும் வாதிட்டார்.

2008இல் உலகம் எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், 2013ஆம் ஆண்டு, அவர் வெளியிட்ட ‘சமகால முதலாளித்துவத்தின் உள்வெடிப்பு’ (The Implosion of Contemporary Capitalism) என்ற நூல், இன்று நாம் எதிர்நோக்கும் சவால்களை எதிர்வுகூறியது.

பொருளாதார நெருக்கடிக்குப் பிந்திய, முழு உலக அமைப்பும் நிலையற்றிருப்பதுடன், முன்னரிலும் கூடியளவு இரத்தத்தை உறிஞ்சும் அமைப்பாகவும் திகழும் என்றார். நிதி மூலதனமே ஆதிக்கம் செலுத்தும் இவ்வமைப்பில், நிதி மூலதன ஏற்றுமதியும் இறக்குமதியும் தொடர்கிறது.

அதில் யாருக்கும், உத்தரவாதமற்ற தொழிலும் வாழ்க்கையும் அச்சுறுத்துவன. நிதி மூலதன ஆதிக்கத்திலிருந்து, யாரும் தப்பி ஓட முடியாது. மக்கள் போராடி, அதை வீழ்த்தினாலொழிய,வேறெதுவும் இயலாது என அவர் அந்நூலை நிறைவு செய்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, இன்று முன்னிராதளவுக்கு மூலதனத் திரட்சி நிகழ்ந்த பின்னணியில், நிதி மூலதனத்தைக் கட்டுப்படுத்துவோர் இடையேயான போட்டி, உழைக்கும் மக்களுக்கு, குறிப்பாகத் தொழிலாளர்களுக்கு, மிக அபாயமான எதிர்காலத்தைச் சுட்டுகிறது என அவர் எச்சரித்தார்.

உலகில் மிகுந்த அதிகாரம் கொண்ட பல்தேசிய நிறுவனங்களின் இலாப வெறிக்கு, மூன்றாம் உலகின் அப்பாவி மக்கள், வரைமுறையின்றிப் பலியாவார்கள் என்றும் கூறினார்.

கடந்தாண்டு ஒரு நேர்காணலில் சமீர் அமீன், இரண்டு விடயங்களைக் கவனிக்க வேண்டும் என்றார். முதலாவதாக, சந்தைகளுடன் கூடிய முதலாளித்துவப் பொருளாதாரம் உள்ளது. ஆனால், சந்தைகள் மூலதனக் குவிப்பு என்ற நியதிக்குக் கட்டுப்பட்டவை.

சந்தை, மூலதனக் குவிப்பைப் படைப்பதில்லை. மாறாக, மூலதனக் குவிப்பே சந்தைக்கு ஆணையிடுவதுடன், சந்தையைக் கட்டுப்படுத்துகிறது. இதை விளங்குவதற்கு, மூலதனக் குவிப்பையும் அதற்குச் சந்தைகள் எவ்வாறு செயலாற்றுகின்றன என விளங்குவது உதவும் என்றார்.

இரண்டாவதாக, சமூகப் பிரச்சினைகளிலிருந்து பிரிபட்ட ஜனநாயகம் ஆபத்தானது. சில அடிப்படை அரசியல் உரிமைகள், கிட்டத்தட்ட நியாயமாக நடக்கும் தேர்தல்களை வரையறுக்கின்றன.

அதற்கு மேல், ஜனநாயகம் சமுதாய முன்னேற்றத்துக்கு இட்டுச் செல்கிறதா என்பதைப் பற்றி, அக்கறையோ கவனமோ செலுத்துவதில்லை. உண்மையில், சமுதாய முன்னேற்றத்துடன் இணைந்த, ஒரு சமுதாய ஜனநாயகமாக்கலையே நாம் விரும்புகிறோம். நாம் விரும்பும் ஜனநாயகம் நிச்சயமாக, சமுதாய முன்னேற்றத்திலிருந்து துண்டிக்கப்பட்டதல்ல; உணவுக்கான உரிமை, உறைவிட உரிமை, தொழில் உரிமை, கல்வி உரிமை, உடல்நலத்துக்கும் மருத்துவத்துக்குமான உரிமை ஆகிய சமுதாய உரிமைகளுக்கு முழு முக்கியத்துவம் அளிக்கும் பணியுடன் இணைந்த சமுதாய ஜனநாயகமாக்கலை நாம் விரும்புகிறோம்.

இதன் அர்த்தம், இந்த உரிமைகளை அரசமைப்பில் பெறுவது மட்டுமல்ல, அந்த உரிமைகள் நடைமுறைப்படுத்தப்படும் நிலைமைகளை உருவாக்குவதுமாகும். இவை இரண்டும், இன்று எம் முன்னுள்ள சவால்கள் என சமீர் அமீன் கூறினார்.

வளர்ச்சியடையும் நாடுகளின் மீட்சிக்காகவும் சாதாரண மக்களின் வாழ்வுக்காகவும் தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும் வந்ததோடு, போராட்டங்களில் பங்குகொண்டு, ஊக்குவித்த ஒருவராகவும் ஆபிரிக்காவின் தலைசிறந்த பொருளியலாளராகவும் வரலாறு, சமீர் அமீனை நினைவுகூரும்.

கோபி அனான்: மண்டையோடுகள் குவிதல்

நீண்டகாலம் ஐ.நா சபையில் பணியாற்றியதோடு, செயலாளர் நாயகமாகத் தெரிவான, முதலாவது ஐ.நா ஊழியர் கோபி அனான் ஆவார். 1938ஆம் ஆண்டு, கானாவில் பிறந்த கோபி அனான், பத்து ஆண்டுகள் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமாகப் பணியாற்றினார்.

அனானுக்கு முன்னர் ஐ.நா செயலாளர் நாயகமாக இருந்த பூட்ரஸ் பூட்ரஸ் காலி, 1992ஆம் ஆண்டு அமைதிபேணும் நடவடிக்கைத் திணைக்களத்தை (Department of Peacekeeping Operations) உருவாக்கினார்.

அதன் முதல் துணைத் தலைவராகவும், 1993இல் அதன் தலைவராகவும் கோபி அனான் நியமிக்கப்பட்டார். அவருடைய காலத்தில், மூன்று நிகழ்வுகள் முக்கியமானவை.

முதலாவதாக, 1994ஆம் ஆண்டு ருவண்டாவில் ஐ.நா அமைதி காக்கும் படைகள் நிலைகொண்டிருந்த போது, அவர்களின் கண்முன்னே, இனப்படுகொலை நடந்தேறியது. 100 நாள்கள் இடம்பெற்ற வெறியாட்டத்தில், பத்து இலட்சம் ருவாண்டியர்கள் கொல்லப்பட்டார்கள்.

ஐ.நாவின் அமைதி காக்கும் படைகளுக்குத் தலைமைதாங்கிய கனடியரான இராணுவத் தளபதி ரோமியோ டிலெயர், இவ்வாறான பயங்கரம் நிகழவிருப்பதை உணர்ந்து, அதைத் தடுக்கத் தனது படைகளைப் பயன்படுத்த அனுமதிக்குமாறும், அதன் மூலம் அசம்பாவிதங்களைத் தவிர்க்கவியலும் எனவும் தனது தலைமையகமான ஐ.நா அமைதிபேணும் நடவடிக்கைத் திணைக்களத்துக்கு அவசரச் செய்தி அனுப்பினார்.

அதற்குப் பதிலளித்த திணைக்களத் தலைவர் கோபி அனான், “ஐ.நா அமைதி பேணவே வந்துள்ளது. எது நடந்தாலும் ஐ.நா படைகள் முகாமை விட்டு வெளிவரக் கூடாது; நடப்பது நடக்கட்டும்” என்றார்.

அதனால் அதிர்ந்த டிலெயர், மாபெரும் அவலத்தை ஐ.நா தடுக்கவியலும் என்பதால், அதை அனுமதிக்குமாறு கெஞ்சினார். ஆனால், கோபி அனான் அனுமதிக்க மறுத்துவிட்டார். இறுதியில், ‘ஐ.நா நீலத் தொப்பிக்காரர்கள்’ கொலை வெறியாட்டத்தின் பார்வையாளர்களாக இருந்தார்கள்.

இப்படுகொலைகளின் 10ஆவது ஆண்டு நிறைவு நினைவில் பங்கேற்ற கோபி அனான், மலர்வளையம் வைத்து அதை நினைவுகூர்ந்தார். பத்து இலட்சம் ருவாண்டியர்களின் மண்டையோடுகள், ‘எங்கள் உயிர்களை ஐ.நா ஏன் காக்கவில்லை’ என்ற கேள்விகளுடன் குவிந்துள்ளன.

இரண்டாவதாக, 1993இல் சோமாலிய உள்நாட்டு நெருக்கடியில், அமைதிகாக்கப் புறப்பட்ட ஐ.நா படைகள், அமெரிக்கப் படைகளுடன் இணைந்து, சோமாலிய போராட்டக் குழுக்களுடன் போரிட்டன. இது ‘மொகடீஷு யுத்தம்’ எனப்படுகிறது. இதில், அமெரிக்கப் படைகள் கடும் தோல்வி கண்டன.

அமெரிக்கா தலைமையிலான ஒருமைய உலக ஒழுங்கில், அமெரிக்கா சந்தித்த அதி மோசமான இராணுவத் தோல்வி இதுவாகும்.

ஐ.நா வரலாற்றில், கொரியப் போருக்குப் பின், ஐ.நா இராணுவம் நேரடியாகப் போரில் ஈடுபட்டது சோமாலியாவிலேயாகும்.

தோல்வியின் விளைவாக, ஐ.நாவின் சோமாலிய அமைதிபேணும் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன. அதற்குப் பொறுப்பாளி கோபி அனானே.

மூன்றாவதாக, யூகொஸ்லாவிய பிரிவினையின் போது, நடந்த பொஸ்னிய யுத்தத்தில், ஐ.நா அமைதிபேணும் பணியில் பங்கேற்றது. யுத்தத்தில், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ, யூகொஸ்லாவியாவுக்கு எதிரான, இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.

அதை, அப்போதைய ஐ.நா செயலாளர் நாயகம் பூட்ரஸ் பூட்ரஸ் காலி, வன்மையாகக் கண்டித்தார். நேட்டோவுக்கு, ஐ.நா அனுமதியைத் தொடர்ச்சியாக, அவர் மறுத்து வந்தார்.

இந்நிலையில், பூட்ரஸ் பூட்ரஸ் காலி விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த வேளையை வாய்ப்பாக்கிய அமெரிக்காவும் நேட்டோவும், அவருடன் தொடர்பு கொள்ள முடியாததால், ஐ.நா அமைதிகாக்கும் படைகளுக்குப் பொறுப்பான கோபி அனானிடம், பொஸ்னியா மீதான நேட்டோ விமானத் தாக்குதல்களுக்கு அனுமதி கோரியது. அனான், நேட்டோவின் தாக்குதலுக்கு அனுமதி அளித்ததோடு, தாக்குதலுக்கு வசதியாகக் களத்தில் இருந்த ஐ.நா படைகளை விலகுமாறும் கோரினார்.

அனானின் இந்நடவடிக்கையை, பூட்ரஸ் பூட்ரஸ் காலி வன்மையாகக் கண்டித்தார். ஆனால், அனானின் செயல் அவரை அமெரிக்காவின் விருப்பத்துக்கு உரியவராக்கியது. 1996ஆம் ஆண்டு, பூட்ரஸ் பூட்ரஸ் காலி, போட்டியின்றி, ஏகமனதாக இரண்டாவது தடவையாகச் செயலாளர் நாயகமாக இருந்தார்.

தெரிவாகும் செயலாளர் நாயகத்துக்கு வழமையாக இரண்டு, நான்கு ஆண்டுப் பதவிக் காலங்கள் கிடைக்கும். இந் நிலையில், பூட்ரஸ் பூட்ரஸ் காலி, தனது மீள்தெரிவின்போது, ஐ.நா பாதுகாப்புச் சபை வாக்கெடுப்பில், 15 வாக்குகளில் 14 வாக்குகளைப் பெற்றார். அமெரிக்கா எதிர்த்து வாக்களித்ததோடு, தனது வீட்டோ அதிகாரத்தையும் பயன்படுத்தியது.

அடுத்து நடந்த நான்கு பாதுகாப்புச் சபைக் கூட்டங்கள், இது பற்றிய ஒரு முடிவையும் எட்டாமல் முடிந்தன. காலியை மீண்டும் செயலாளர் நாயகமாக நியமிப்பதை, அமெரிக்கா விடாது எதிர்த்தது. இறுதியில் பூட்ரஸ் பூட்ரஸ் காலி, தான் ஒதுங்குவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து இடம்பெற்ற தேர்தலில் கோபி அனான், அமெரிக்காவால் நிறுத்தப்பட்டார். அவருக்குப் போட்டியாக ஐவரி கோஸ்ட்டின் இராஜதந்திரி அமரா எஸ்ஸி பிரேரிக்கப்பட்டார். வாக்கெடுப்பின் முதலாம் சுற்றில் அனான், எஸ்ஸியை விட ஒரு வாக்கு அதிகம் பெற்று, முன்னிலையிலிருந்தார்.

அடுத்த வாக்கெடுப்பில், எஸ்ஸிக்கு எதிராக அமெரிக்காவும் பிரித்தானியாவும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தின. அதையடுத்து, அனானை உறுதி செய்யும் வாக்கெடுப்பில் பிரான்ஸ், அனானுக்கு எதிராக வீட்டோவைப் பயன்படுத்தியது. நான்கு முறை நடந்த வாக்கெடுப்புகளிலும் பிரான்ஸ், தனது ‘வீட்டோ’வைப் பயன்படுத்தி, அனானின் தெரிவை எதிர்த்தது. இறுதியாகப் பலநாடுகளின் வேண்டுகோளை ஏற்று, பிரான்ஸ் வாக்கெடுப்பில் பங்கேற்காததால் அனான் தெரிவானார்.

இவ்வாறு பதவிக்கு வந்த அனானின் காலத்திலேயே, ஆப்கான், ஈராக் யுத்தங்கள் நடந்தன. அவரது தலைமையின் கீழ், பல முக்கிய விடயங்களில் ஐ.நா வாளாவிருந்தது. எனினும், அவரது காலப்பகுதியில் ‘காக்கும் கடப்பாடு’ (Responsibility to Protect) என்ற கருத்து, கோட்பாட்டுருவம் பெற்றது. அதைப் பயன்படுத்தியே, அமெரிக்காவும் நட்பு நாடுகளும் லிபியா மீது போர் தொடுத்தன. காக்கும் கடப்பாடு என்பது, ஓர் அரசு, தன் நாட்டு மக்களைப் பாதுகாக்கும் கடப்பாடாகும். அக்கடப்பாட்டிலிருந்து அரசு தவறும் போது, கடப்பாடு சர்வதேச சமூகத்தின் கைக்குப் போகிறது.

பாரிய அநியாயங்களிலிருந்து மக்களைக் காக்கும் கடப்பாடு, சர்வதேச சமூகத்தினுடையதாகிறது. கடப்பாடு இவ்வாறு சர்வதேசத்திடம் பாரப்படுத்தப்படக் காரணம், அது நீதியானதும் சரியானதும் என்ற வாதத்தின் அடிப்படையிலாகும்.

‘காக்கும் கடப்பாடு’ என்பது, அடிப்படையில் தடுப்பையே (prevention) பிரதானமாகக் கொண்டது. ஆனால், தடுப்பு நடவடிக்கைகள் மக்களைக் காக்கத் தவறும்போது, அவை பொருளாதார, அரசியல், இராஜதந்திர, சட்ட, இராணுவ நடவடிக்கைகளுக்கு வழிவிடுகின்றன. இவ்வாறு, அமெரிக்கத் தலையீடடுக்கு வாய்ப்பாகக் ‘காக்கும் கடப்பாடு’ வடிவம் பெற்றது.

இனி, கோபி அனானை எவ்வாறு வரலாறு நினைவுகூரும் என்ற வினாவுக்கு வருவோம். கெடுபிடிப்போருக்குப் பிந்திய இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் அவலங்களுக்கும் ஐ.நாவின் இயலாமைக்கும் சாட்சியாகவும் காரணியாகவும் கோபி அனான் இருக்கிறார்.

21ஆம் நூற்றாண்டில் சர்வதேச சட்டம், உண்மை, நியாயம் என அனைத்தையும் கேள்விக்கு உள்ளாக்கியதோடு, அனைத்தையும் கேலிக்குள்ளாக்கிய ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பையும் போரையும் அனுமதித்த பெருமை அனானுக்குரியது. மொத்தத்தில் குருதிபடிந்த கைகளுடன் அனான் விடைபெறுகிறார். வரலாறு அவரை அவ்வாறே நினைவு கூறும்.