ட்ரம்ப்புக்கு வருகிறது மிகப்பெரும் ஆபத்து?

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முன்னாள் சட்டத்தரணி மைக்கல் கோஹன், தன்மீதான குற்றச்சாட்டுகளை ஏற்று, நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள நிலையில், ஜனாதிபதியை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் தகவல்களை அவர் வெளியிடுவாரென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கோஹனின் சட்டத்தரணியான டனி டேவிஸ், இது தொடர்பான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

தன்னுடைய சேவை பெறுநரான கோஹன், தன்னுடைய குற்றங்களை ஒப்புக்கொண்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த டேவிஸ், விசேட வழக்குத் தொடுநர் றொபேர்ட் மல்லருடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக, கோஹனுக்குத் தெரியுமெனத் தெரிவித்தார். அத்தோடு கோஹன், “தான் அறிந்தவற்றை, விசேட வழக்குத் தொடுநரிடம் கூறுவதற்கு, முழுமையாகத் தயாராக உள்ளார்” என, அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், ரஷ்யாவுடன் இணைந்து செயற்பட்டது என்ற குற்றச்சாட்டே, ட்ரம்ப் பிரசாரக் குழு மீது முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், “சதி செய்வதற்கான முயற்சி என்ற வெளிப்படையான வாய்ப்பை விட அதிகமான விடயங்களை, கோஹன் அறிந்துள்ளார்” என்று குறிப்பிட்ட டேவிஸ், கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், ஜனநாயகக் கட்சி அலுவலர்களின் மின்னஞ்சல்களை ஹக் செய்வதற்கான “குற்றவியல் சதி”யில், அப்போதைய வேட்பாளரான ட்ரம்ப்பின் பங்குபற்றல் தொடர்பாகவும், தனது சேவை பெறுநர் அறிவார் எனக் குறிப்பிட்டார்.

வழக்கறிஞருக்கும் சேவை பெறுநருக்கும் இருக்க வேண்டிய இரகசியத்தன்மை அடிப்படையில், ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்பாக, தன்னிடம் கோஹன் தெரிவித்த விடயங்களைத் தன்னால் வெளிப்படுத்த முடியாது என்று தெரிவித்த அவர், ஆனால், மல்லரின் விசாரணைகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் அவருக்குத் தெரிந்திருக்கும் என்ற கருத்தை வெளியிட்டார்.

ஒரு காலத்தில், “ட்ரம்புக்காக துப்பாக்கிச் சன்னங்களை ஏற்பேன்” என்று கூறிய கோஹன், தற்போது அதற்குத் தலைகீழான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளமை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், தன்னுடைய குடும்பத்தையும் தன்னுடைய நாட்டையும் முன்னிறுத்தப் போவதாக, கோஹன் வழங்கிய வாக்குறுதிக்க அமைவாகவே அவர் செயற்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டார்.