தமிழர்கள் சொந்த நிலங்கள் பறிபோகுதென்று கூக்குரலிடுகையிலெல்லாம்….

தமிழர்கள் சொந்த நிலங்கள் பறிபோகுதென்று கூக்குரலிடுகையிலெல்லாம் சில வேளைகளில் எனக்கேற்படும் சிந்தனையென்னவென்றால்…. அன்று ஈழத்தமிழர்களை எல்லைப்புறங்களில் சென்று குடியேறும்படி அமிர்தலிங்கம் தலைமையிலான கூட்டணியினர் அழைப்பு விடுத்தார்கள். எத்தனைபேர் சென்றார்கள்? சென்ற இளைஞர்கள் சிலரும் நுளம்புக்கடி தாங்காமல் ஓடி வந்து விட்டார்கள். பின்னர் வந்தவர்கள் இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட மலையகத்தமிழர்கள். அவர்கள் பலிக்கடாக்களாக்கப்பட்டார்கள்.

தமிழர்கள் சொந்த நிலங்கள் பறிபோகுதென்று கூக்குரலிடுகையிலெல்லாம் சில வேளைகளில் எனக்கேற்படும் சிந்தனையென்னவென்றால்…. அன்று ஈழத்தமிழர்களை எல்லைப்புறங்களில் சென்று குடியேறும்படி அமிர்தலிங்கம் தலைமையிலான கூட்டணியினர் அழைப்பு விடுத்தார்கள். எத்தனைபேர் சென்றார்கள்? சென்ற இளைஞர்கள் சிலரும் நுளம்புக்கடி தாங்காமல் ஓடி வந்து விட்டார்கள். பின்னர் வந்தவர்கள் இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட மலையகத்தமிழர்கள். அவர்கள் பலிக்கடாக்களாக்கப்பட்டார்கள்.

இன்று சொந்த இடத்தில் முஸ்லிம் மக்கள் அத்து மீறிக்குடியேற்றங்கள் செய்கின்றார்கள் என்று மக்களை இன, மதரீதியாகப் பிளவு படுத்திக் கருத்துகள் விடும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். நாட்டில் நிலவும் சட்டங்களை மீறி யாரும் செயற்படுவதாக இருந்தால் , சட்டங்கள் மூலம் அவற்றை எதிர்கொள்ளுங்கள். நிலத்துக்கான உறுதிப்பத்திரங்கள் இருந்தால் அவற்றின் உதவியுடன் உங்கள் உரிமைகளை நிலைநாட்டுங்கள். அமைதியான முறையில் அரசியல் ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் செய்யுங்கள். அப்பகுதிகளிலுள்ள அரச அதிகாரிகளிடம் , சமூக , அரசியல் தலைவர்களுக்கு முறையிடுங்கள். தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் அனைவருமே இவ்விதமே தமக்கிடையிலான பிரச்சினைகளைத் தீர்க்கப்பழக வேண்டும்.

இவற்றை விட்டு விட்டு முஸ்லிம் மக்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் போன்ற கருத்துகளை இனத்துவேசம் வெளிப்படும் வகையில் வெளியிடாதீர்கள். ஓரினத்துக்கு எதிராக எவ்விதச் சட்டங்களையும் திணிக்க முடியாது. அது மனித உரிமை மீறல். ஒரு நாட்டின் சட்டமென்பது அந்நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் பொதுவானது.

உண்மையில் உங்களுக்கு உங்கள் மண்ணில் ஆர்வமிருந்தால், மேற்கு நாடுகளின் அரவணைப்பில் அம்மண்ணின் வளங்களைச் சுகித்துக்கொண்டு வாழும் இவ்விதமான கருத்துகளைக் கூறும் நீங்கள் உடனடியாக உங்கள் குழந்தைகளுடன் நாட்டுக்குத் திரும்புங்கள், அங்கு உங்கள் எண்ணிக்கையை அதிகரியுங்கள். உங்கள் கருத்துகள் உருவாக்கும் மோதல்களால் பாதிக்கப்படப்போவது அங்குள்ள அப்பாவி மக்களே. உங்களிடமெல்லாம் ஒரு கேள்வி: அன்று தலைமுறை தலைமுறையாகத் தம் சொந்த மண்ணில் வாழ்ந்து வந்த வடக்கிலிருந்த முஸ்லிம் மக்கள் விரட்டியடிக்கப்பட்ட வேளையில், ஒரு சில மணித்தியாலயங்களில் அவர்களின் உடமைகள் பிடுங்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டபோது நீங்கள் எல்லோரும் எங்கு சென்றிருந்தீர்கள். அன்றிலிருந்து வேரோடு பிடுங்கப்பட்டு துரத்தி அடிக்கப்பட்டவர்களில் பலர் இன்றும் திரும்பாமல் இருப்பதை அண்மையில் ஐபிசி தமிழ் வெளியிட்ட ஆவணப்படமொன்றில் பார்த்தேன்.

ஒரு கணம் மேனாடுகளின் அரவணைப்பில் வாழும் நீங்கள் சிந்தித்துப்பாருங்கள். அந்நாடுகளின் பெரும்பான்மை வெள்ளையின மக்களில் சிலர் இவைபோன்ற இனத்துவேசம் மிக்க கருத்துகளை உங்களை நோக்கிக் கூறும்போது எவ்வளவுதூரம் துடித்துப்போகின்றீர்கள். இதைத்தானே அவர்களும் கூறுகின்றார்கள். எங்கள் பண்பாடு பறி போகின்றது. அதிக அளவில் குழந்தைகளைப்பெற்று, சமூக உதவிப்பணத்தை அதிக அளவில் பெற்று நாட்டு வளங்களைச் சுரண்டுகின்றார்கள். அச்சமயங்களில் அவற்றை மனித உரிமை மீறல்களாகக் கருதி முறையிடுகின்றோம். ஆனால் உங்கள் சொந்த மண்ணில் நீங்கள் வெளியிடும் கருத்துகளும் இவ்வகையானவையே.

தற்போதுள்ள சூழலில் மேலும் இன முறுகல்களை ஏற்படுத்தாமல் உங்களுக்கிடையிலுள்ள பிரச்சினைகளை அணுகப்பழகுங்கள். அவற்றைப் பகை முரண்பாடுகளாக்கி மோதல்கள் , இரத்தக்களரிகளை மீண்டும் உருவாக்கத் துணைபோகாதீர்கள். எல்லாச்சமூகங்களிலுமுள்ள மத, இன அடிப்படைவாதிகளுக்கு அவர்களுக்குப் பின்னாலிருந்து இயங்கும் சக்திகளுக்குத் தேவை நாட்டில் மீண்டும் மக்கள் மத்தியில் மோதல்கள் உருவாவது. இரத்த ஆறு ஓடுவது. அவற்றின் மத்தியில் நின்று குளிர்காய நினைக்கும் அச்சக்திகளின் தூண்டுதல்களுக்குப் பலியாகாதீர்கள்.

(Giritharan Navaratnam)