எங்கடை தமிழ் சனம் – முதலமைச்சர் தன்ரை வேலையைப் பாக்காமல்

நான் யாழ்ப்பாணம் சென்று அங்கே கனடாவாழ் மக்களின் பணத்தில் உருவாக்கப்பட்டு செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஆடைத் தொழிற்சாலையைப் பார்த்து வந்ததை பற்றி அறியவென எனது நண்பன் என்னைத் தேடி வந்தான். வரும்போதே சிரித்துக் கொண்டே சொன்னான் ‘எல்லாரும் ஏறின குதிரையிலை சக்கடத்தாரும் ஏறி சறுக்கி விழுந்தாராம்’ என்று. ஆரைக் குறிப்பிடுகின்றாய் எனக் கேட்டேன். ‘வேறை ஆர் முதலமைச்சர்தான். அவர் கனடா வாறாராம். முதலமைச்சர் தனக்கென ஓர் நிதியத்தை உருவாக்க போகிறாராம். அதுக்கு நிதி சேகரிக்க வாறாராம’; என்றான்.

‘அதிலே என்ன பிழை. அண்மையிலே தானே லண்டன் போய் எல்லாரையும் சந்திச்சு நிதி சேர்த்தவர். இப்ப கனடா வாறார். அவர் வடமாகாணத்தை கட்டியெழுப்பத்தானே நிதி சேர்க்கிறார். தன்ரை வீட்டை கொண்டு போகவே’ என்றேன். ‘மத்திய அரசாங்கம் குடுக்கிற காசு செலவழிக்கப்படாமல் திரும்பிப் போகுது. அதைப் பாத்து இவர் சரிசெய்தாலே போதும். முதலமைச்சர் தன்ரை வேலையைப் பாக்காமல் நாயின்ரை வேலையை கழுதை பாத்த மாதிரி என்னவோ செய்யிறார்’ என்றான். ‘மத்திய அரசாங்கம் கடைசி நேரத்திலை காசைக்குடுத்தா எப்பிடி செலவழிச்சு முடிக்கிறது’ என்றேன். அவனுக்கு கோபமே வந்திட்டுது. ‘அவையிலே ஆயிரம் பிரேரணைகள் ஆக்கப்பட்டிருக்கு. அனால் அதை நடைமுறைப்படுத்த அந்தந்த மந்திரிமார் சட்ட அமூலாக்கம் செய்யவேணும். அவையும் அவைக்கு கீழை இருக்கிற ஒருத்தரும் வேலை செய்யாமல் இருந்தால் சட்ட அமூலாக்கம் எப்பிடி நடக்கும்.

முத்திய அரசாங்கம் ஒதுக்கிற நிதி எப்படி செலவழியும். முதலமைச்சர் வடமாணத்தை எப்பிடி வளப்படுத்திறது எண்டதைப்பற்றி யோசிக்கவேணும். அரசியலை சம்பந்தர் பாக்கவேணும்’ என்றான். எனக்கும் கோபம் வந்தது. ‘சம்பந்தர் அரசியல் பாக்கிற வல்லமை இருக்கு. தமிழருக்கு என்ன வேணுமெண்டும் அவருக்கு தெரியும். ஆனா அவர் இப்ப அமெரிக்காவின்ரை கட்டுப்பாட்டுக்குள்ளை இருக்கிறபடியா இதுதான் தமிழருக்கு வேணும் எண்டு அடிச்சு கேக்கேலாது. கோவிச்சுக்கொண்டு வெளியாலை வரவும் ஏலாது. இரண்டும் கெட்டான் நிலையிலை அவர் இருக்கிறார்.

இந்த நேரத்திலை வடமாகாண முதலமைச்சர் இதைத்தவிர வேறெதையும் தமிழர்கள் தீர்வாக பெற்றுக்கொள்ள இணங்க மாட்டார்கள் எண்டு சொல்லுறதிலை என்ன பிழை’ என்றேன்.
‘ஓ நீ என்ன தமிழ் மக்கள் பேரவையை சொல்லிறியோ. கூட்டமைப்பு சோரம் போகுது எண்டு தமிழ் மக்கள் நினைச்சதாலே மக்களாலே உருவாக்கப்பட்டதுதான் தமிழ் மக்கள் பேரவை. அதுக்கு எவ்வளவு ஆதரவு இருக்குதெண்டு எழுக தமிழைப்பாத்து புரிஞ்சிருப்பாய். சிங்களவங்களே பயந்து போனாங்கள்’ என்றான். ‘சிங்களவன் அந்தப் பலம் வாய்ந்த புலிகளையே அழிச்சது சாணக்கியத்தாலே. தமிழர்கள் முட்டி மோதி உடைஞ்சு போறதுதான் மிச்சம். ஏன்ரை பார்வையிலே தமிழ் மக்கள் பேரவை காலத்தின் கட்டாயம். ஒரு பலமான மக்கள் சக்தியாக இருந்து தமிழ் மக்களின்ரை அபிலாசைகளை எடுத்துச் சொல்லி கூட்டமைப்புக்கு பலம் சேர்க்க வேணும். அரசியலை கூட்டமைப்பு மட்டும் நடத்தவேணும். தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சியாக மாறக்கூடாது. ஆனா அதுக்குள்ளை இருக்கிற சிலர் குறக்கு வழியிலை லாபம் தேட முனையாமலில்லை’ என்றேன்.

அதற்கு அவன் ‘அதுதான் நான் சொன்னேன் முதலமைச்சர் இப்டியான விசயங்களிலை ஒரு பேச்சாளியாய் போய் தமிழ் மக்கள் பேரவையின் நடவடிக்கைகள் தமிழர்களின் உரிமைகள் என அங்கீகரிக்க வேண்டும். அதைவிட்டிட்டு நான் தான் தலைவர் எனக்குத்தான் அரசியல் தெரியும், எனக்கும் கூட்டமைப்புக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லக் கூடாது’ என்றான். நான் சிரித்துக் கொண்டேன். ‘எனது பார்வையில் சம்பந்தரும் முதலமைச்சரும் புரிதலோடு இருப்பதாகவே எண்ணுகிறேன். நடப்பவை எல்லாம் அரசியல் சாணக்கியம். சில நடவடிக்கைகள் காலத்தின் தேவை. ஆனால் அரசியல் கட்சி ஒன்றே ஒன்றுதான் அது கூட்டமைப்புத்தான் என்பதில் தமிழர்கள் எல்லோரும் தெளிவாய் இருந்தால் போதும’; என்றேன்.
‘அங்கை தானே பிரச்சனை. முதலமைச்சர் வாறார் ஆனால் கனடாவிலை இருக்கிற முக்கிய அமைப்புக்கள் எல்லாம் சேர்ந்து அவரை வரவேற்குதோ எண்டால் இல்லை. ஏன்? முதலமைச்சர் எல்லாருக்கும் பொதுவா நடக்கேல்லை. கனடிய தமிழ் காங்கிரஸ் நாங்கள் தான் பெரிய அமைப்பு. எங்களட்டை தந்திருந்தால் எவ்வளவு சிறப்பாக செய்திருப்பம். சரி பாப்பம் எண்டு சொல்லிப்போட்டு அவையின்ரை பொங்கல் விழாவுக்கு வடமாகாணத்தின்ரை இரண்டு மந்திரிமாரைக் கூப்பிடுகினம். வர்த்தக சம்மேளனம் இன்னும் ஒரு பதிலுமில்லை. கூட்டமைப்புக்காரர் நாங்கள் கூப்பிட்டெல்லோ அவர் வந்திருக்க வேணும் அதாலை நாங்கள் வரேல்லை எண்டினம். இப்பிடி எல்லாரும் பிரிஞ்சு நிண்டா கடைசியா முதலமைச்சர் வந்து சந்திக்கப் போறது யாரை’ என்றான்.
நான் சிரித்துக் கொண்டேன். ‘எப்ப ஈழத்தமிழர்கள் ஒன்று பட்டார்கள்.கனடாவைப் பொறுத்த வரையில் குறுகிய காலத்தில் பெரிய பெரிய பதவிகளில் அமர்ந்திருப்பவர்களும் சரி தொழில் முயற்சிகளில் சாதனை படைத்ததிலும் சரி ஈழத்தமிழர்களின் படடியல் நீண்டுகொண்டே போகின்றது.

தனிப்பட்ட முறையில் சாதித்த ஈழத்தமிழர்கள் பலர். மில்லியனர்களாக இருப்பவர்கள் பலர். ஆனால் ஓர் சமூகமாக ஈழத்தமிழர்கள் எதையுமே சாதிக்கவில்லை. காரணம் அடையாளத்தை தேடி அலைபவர்களாகவும் சுயநலவாதிகளாக இருப்பதும்தான். மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். தமக்கென கொள்கைகள் இருக்கலாம். சமூகத்தின் நலனுக்காக ஒவ்வொருத்தர் ஒவ்வொரு துறையிலும் சேவை செய்யலாம். ஒரு பொது பிரச்சனையை கையாளும்போது எல்லோரும் பேசி ஒரு பொது முடிவை எட்ட வேண்டாமா? எங்களுக்குள்ளை பேசித்தீர்க்கமாட்டாத நாங்கள் எப்பிடி சிங்களவர்களோடு பேசி எங்கள் உரிமைகளை வெல்வது? எல்லாமே தமிழ் மக்களுக்காக என்றால் இப்படியோர் தலைவர் வரும்போது அத்தனை பேரும் வந்து அவருக்கு பலம் சேர்க்க வேண்டாமா? தாங்கள்தான் தமிழர்களின் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவரைப் பார்க்கும்போது அருவருப்பாக இருக்கின்றது’ என்றேன்.
‘சரி இங்கத்தே அரசியலை விடு நீங்கள் போட்ட தையல் தொழிற்சாலை எப்பிடிப் போகுது. ஏறக்குறைய 200 இலட்சத்துக்கு மேலை போட்டிட்டியள்’ என்றான். எனக்குள் யோசித்தேன். ‘ஏமாற்றம்தான். படித்த பட்டதாரிகள் அரசாங்க உத்தியோகத்தை மட்டும் எதிர்பாக்கினம். கடந்த 35 வருடத்திற்கு மேலாக எந்தத் தொழிற்சாலையும் இயங்காததாலை தொழில் தெரிந்த வேலையாட்கள் குறைவு. அவர்களை பயிற்றுவிக்க்கூடி தமிழர்கள் இல்லை. இதைத்தவிர வெளியிலையிருந்து பணம் வருவதால் இளைஞர்கள் வேலை செய்து பணம் சம்பாதிக்க வேண்டிய சூழலில்லை. அதை விட மோசம் நாங்கள் அங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்புக்கென் உருவாக்கிய தொழிற்சாலையில் பொறுப்பிலிருந்தவர்கள் அதை வளர்க்காமல் சுரண்டியது தான்’ என்றேன்.
‘அப்போ என்ன செய்யப் போகிறாய்’ என்று கேட்டான். ‘எனது ஏமாற்றமெல்லாம் படித்தவர்களும் மாணவர்களை நெறிப்படுத்தும் ஆசிரியர்களும் நாட்டை வளம்படுத்த வேண்டிய அரசங்க உத்தியோகத்தர்களும் அந்த மண்ணையும் மக்களைப் பற்றியும் நினைக்காமல் எதுவுமே செய்யாமல் சம்பளத்தை எடுப்பது தான். ஒரு தொழில் முயற்சி என்று பார்த்தால் போன காசு போய் துலையட்டும் என்று பேசாமல் மறக்கவேண்டும். ஆனால் சமூக நோக்கோடு பார்த்தால் எப்படியாவது அங்கு வேலை செய்பவர்களை திருத்தியெடுத்து மேலும் பல திறமைகளை தேடிப்பிடித்து உழைப்பின்மேல் நம்பிக்கையை வரச் செய்து வடமாகாணத்தில் தொழிற்சாலைகள் தோன்றுவதற்கு முன்னுதாரணமாக திகழவேண்டும் என்றே யோசிக்கின்றேன்’ என்றேன்.
‘சரி யாழ்ப்பாணம் அந்தமாதிர்p றோட்டென்ன பீச்சென்ன ஹோட்டலென்ன சாப்பாடென்ன எண்டு சொல்லுறாங்கள்’ எண்டு கேட்டான் சினேகிதன். சிரித்துக் கொண்டேன். ‘உல்லாசப்பயணிகள் பார்வையில் நீ சொன்னவை நிஜம்தான், ஆனால் அந்த மண்ணின் மைந்தனாகப்பார்த்தால் யாழ்ப்பாணம் என்பது கறையான் செல்லரிச்ச வீட்டிற்கு சிறப்பாக வர்ணம் தீட்டி மாளிகை போல் ஜொலிக்க வைத்திருக்கிறார்கள். காற்றடித்தால் கவிண்டு கொட்டிண்டிடும்’ என்றேன். ஆவன் வாயைப் பிளந்து கொண்டு நின்றான்.

வைரமுத்து சொர்ணலிங்கம்