முகநூலில் முகமூடிகளின் பதிவுகள்?!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது ஏற்புடையது என்றால், முகநூலில் வரும் பதிவுகள் பற்றி நீங்கள் பதிவேற்றும் பதில் பதிவுகள் தான், உங்களின் உண்மையான மனநிலையின் பிரதிபலிப்பு என கொள்வது தவறா?. ஒருவர் கருத்தை ஏற்ப்பதும் மறுப்பதும் நீங்கள் தான் என்பது உண்மை அல்லவா?.சமூகவலைத்தளம் மூலம் நாம் உண்மைக்கு வரவும், பொய்மைக்கு விலக்கும் செய்தல் நன்றல்லவா.

என்னிடம் இருக்கும் கணனி காரியமாற்ற வேண்டும். மற்றவரை கரித்து கொட்டவோ காறித்துப்பவோ பயன்படக்கூடாது என எண்ணிப்பார்ப்பவர் எத்தனைபேர்?, கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. ஏற்ப்பதும் மறுப்பதும் நாகரிகமாக, நல்வார்த்தைகளுடன் அமைந்தால், விருப்புடன் பகிரப்படும். மாறாக ஒருவரை கொச்சைப்படுத்தவோ, அன்றி குறை கூறவோ கருத்து சுதந்திரம் கசாப்புக் கடை ஆகக்கூடாது.

ஒருவர் பதிவிடும் அவரது கருத்து தவறானது என உணர்ந்தால் அவரின் கருத்துடன் மட்டுமே மோத வேண்டும். மாறாக அவருடன் அல்ல. ஒருவரின் கடந்த கால தவறுகள் கொண்டு மட்டும், அவரின் நிகழ்கால செயல்களை கணக்கிடக் கூடாது. எல்லா மனிதர்களும் தவறிழைக்கக் கூடியவர்களே. அதனால் ஒருவர் தான் விட்ட தவறை திருத்த முற்ப்படுகையில் அதனையே குத்திக்காட்டி பதிவிடக் கூடாது.

பல ஆண்டுகளாக பலரின் பதிவுகளை முகநூலில் படித்து அதிருப்பதி அடைந்த நான், இவர்கள் திருந்த வேண்டும் என்று மட்டுமே நினைப்பேன். அதுபற்றி எந்த பதிவையும் நான் முகநூலில் இடுவதில்லை. காரணம் நானும் கண்ணாடி வீட்டில் இருந்ததுதான். விடுதலைப் போராட்ட காலத்தில் எனது பங்களிப்பு இன்றி நடந்தாலும், பல வேண்டத்தகாத நிகழ்வுகள் போராட்டம் என்ற பெயரில் நடந்தேறின.

செய்தவர்களையும் எனக்கு தெரியும். அவ்வாறு செய்யச் சொன்னவர்களையும் எனக்குத் தெரியும். இருந்தும் மௌனித்திருந்த, குற்றவாளிகளின் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள் பலரில், நானும் ஒருவன். சகோதரப் படுகொலைகளின் சாட்சிகளாக, என்போல் பலர் உண்டு. நாம் சார்ந்த அமைப்பின் நலன்காக்க, வாய் மூடி, காதைப் பொத்தி, கண் விழிக்காது, காந்தியின் குரங்குகள் போலானோம்.

அன்றைய எங்களின் தவறுகள் தான் எம் இனத்துக்கு பேரழிவை தந்தது என்ற குற்ற உணர்வில்தான் பலர், இனியும் இவ்வாறு நிகழக்கூடாது என தமது பதிவுகளை முகநூலில் முன்வைக்கின்றனர். அதில் நடந்த விடயங்களின் மறுபக்கத்தை அவர்கள் விபரிக்கும்போது, அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட அனைவரதும் செயல்ப்பாடுகள் வெளிப்படுகின்றன.

இங்குதான் விசுவாசிகள் வீறுகொண்டு எழும் பதிவுகள் முகநூலில் வெளிவருகின்றன. அமிர்தலிங்கம் விசுவாசிக்கு துரையப்பா துரோகி. பிரபாகரன் விசுவாசிக்கு பத்மநாபா துரோகி, டக்களஸ் தேவானந்தா விசுவாசிக்கு தவராசா துரோகி, பிரேமசந்திரன் விசுவாசிக்கு சுமந்திரன் துரோகி, சிறீதரன் விசுவாசிக்கு சந்திரகுமார் துரோகி, ஆனந்தசங்கரி விசுவாசிக்கு சம்மந்தர் துரோகி.

ஆக இவர்கள் அனைவருக்கும் மொத்தமான எதிரி பற்றிய கவலை, இந்த முகநூல் உணர்ச்சியாளருக்கு எழுவதில்லை. காரணம் இவர்களுக்கு குண்டு சட்டிக்குள் மட்டுமே குதிரை ஓட்டத்தெரியும். அலசி ஆராய்ந்து எதுசரி எதுபிழை எங்கே தவறு நடந்தது, அதனை எப்படி யார் திருத்துவது என்று கூறும் அறிவுகூட இல்லாததால், ஒன்றில் லைக்ஸ் போடுவர் அல்லது சிலவரியில் கொமன்ற்ஸ் போடுவர்.

விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர் நோக்கம் ஒன்றாகவே இருந்தது. ஆனால் அவர்கள் தெரிவு செய்த பாதைகள் வேறானவை. எல்லா வீதிகளும் ரோமாபுரியை நோக்கி என்பது போல அனைவரின் பயணமும் தமிழ் மக்களின் விடிவு வேண்டியதாய் தான் ஆரம்பிக்கப்பட்டது. அவர்களின் பயணத்தின் இடைவழியில் அவர்கள் தம்மிடையே முட்டி மோதியதால் தான் முள்ளிவாய்க்கால் முடிவானது.

இந்த உண்மையை இதய சுத்தியுடன் அலசவேண்டிய நிர்ப்பந்தம் எல்லோருக்கும் உண்டு. நான் சரி நீ பிழை என தம்மை தாமே நியாயப்படுத்தல் ஏற்புடையதல்ல. எல்லோரும் சரியாக நடக்க முற்பட்டும் பிழையாக நிகழ்வுகள் நடக்க, நாமும் காரணம் ஆனவர்களே. யார் ஆரம்பித்தது என்ற நதி மூலம் ரிசி மூலம் தேடும் செயலை விடுத்து அவலங்களை களையும் உபாயங்களே முன்னிலைப்படல்வேண்டும்.

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது போல, நாம் தொடர்ந்து செயல்ப்படின் எம் இனத்துக்கான விடியலை நாம் வாழும் காலத்தில் மட்டுமல்ல,எதிர்காலத்திலும் இருட்டில் தான் வைக்கவேண்டி வரும். கருக்கலில் தெரிவதெல்லாம் காட்சிப்பிழை ஆகிவிடும். மயக்க நிலையில் எடுக்கும் முடிவுகள் தவறாகவே இருக்கும். சரியான முடிவு எடுக்க நடந்த உண்மைகள் பற்றிய தெளிவு வேண்டும்.

அதற்க்கு உதவும் நேர்மையான பதிவுகள் பற்றிய கருத்துகள், ஆரோக்கியமானதாக இருத்தல் வேண்டும். ஒருவர் சொல்வதெல்லாம் உண்மை என்றால், நாம் சார்ந்தவர் விட்ட தவறுகளை நாம் தான் திருத்த வேண்டும். அவர் சொன்ன உண்மையை மறுதலித்து, நீயா நானா என வாதிட முற்ப்படல் நன்மை பயக்காது. எப்பொருள் யார் யார் வாய் கேட்ப்பினும் மெய்ப்பொருள் காண்பது தானே அறிவு.

விடுதலைப் போராட்ட காலத்தில் பலவகையான எண்ணக்கருக்கள் எம் இளையவர் மனதில் பதிவேறின. மாக்சிசம் ஒருசாரார் கொள்கை என்றால், அதை விமர்சிக்கும் மாற்று அணியும் முன்னிலைப்பட்டது. உனக்கு ஏற்புடையதை நீயும் எனக்கு ஏற்புடையதை நானும் பின்பற்றலாம் என்ற விட்டுக்கொடுப்பு இல்லாததால், பிளவுகள் பெரிதாகி தமக்குள்ளே மோதியதால் வீழ்ந்துபட்டதே எம் போராட்டம்.

இந்த வரலாற்றை முகநூலில் எழுதுபவர் லைக்ஸ் பற்றி கவலைப்படுவதில்லை. அவருக்கு தேவை ஆரோக்கியமான கொமன்ற் மட்டுமே. அவரது எதிர்பார்க்கை இன்றைய இளையவருக்கு கடந்தகாலத்து நடவடிக்கைகள் பற்றிய தெளிவூட்டலும், எதிர்கால பயணத்துக்கான வழிகாட்டலும் மட்டுமே. தனது அனுபவ பகிர்வை அவர் முன்வைக்கையில், அவரை அநாகரிக சொல்கொண்டு சாடல் சரியானதல்ல.

ஆரோக்கியமான கருத்து பரிமாறல் ஆயுதங்கள் கோலோச்சிய வேளையில் அடங்கி இருந்த நிலை இன்று இல்லை. அவை மௌனித்த பின்பும் நாம் சுய சிந்தனைக்கும், பரிமாறலுக்கும் எம்மை தயார்ப்படுத்தும் நல்ல வழிமுறையாக முகநூல் அமைந்தது ஒரு வரப்பிரசாதமே. அதனை நாம் அடுத்தவர் மீதான எம் வஞ்சத்தை தீர்க்கும் வகையில் பாவிப்பதை தவிர்த்தால் எம் வரலாற்று தவறுகள் சீராகும்.

அன்று போலவே இளையவரின் உணர்ச்சிகளை தூண்டி அவர்களை பலிக்கடா ஆக்காதீர்கள் என எழுதினால், அதற்க்கு அரசியல் விமர்சகர் ஒருவர் அடிமைப்புத்தி என கொமன்ற்ஸ் போடுகிறார். அமிர் போலவே பிரபாகரனும் தமிழ் ஈழம் கிடைக்கும் என கூறினார். கிடைக்கவில்லை. அதுபோலத்தானே சம்மந்தர் 2016ல் தீர்வு என்றார். இப்போது சம்மந்தரை மட்டும் வவுனியாவில் நாசமாய் போ என ஏன் திட்டுகிறீர்கள்? அவர் படத்தை ஏன் நிலத்தில் போட்டு மிதிக்கிறீர்கள்?

இவ்வாறு கேள்வி எழுப்பியவரை நார்நாராக கிழித்த ஒருவர், தன் கொமன்ற் ஆக, அவருக்கு துரோகி பட்டம் மட்டுமல்ல, அவர் கையாலாகாதவர் என்ற தன் கண்டுபிடிப்பை பதிவிடுகிறார். தன் தலைவன் சுதுமலையில் சொன்னபடியே தமிழ் ஈழத்துக்காக போராடி, குடும்பத்துடன் மரணித்து போனதாக பெருமிதம் கொள்கிறார், தான் மட்டும் புலம்பெயர் தேசத்தில் தன் உறவுகளுடன் வாழ்வதை மறந்து.

மன்னர் காலத்தில் இருந்து மடிக்கணணி காலம்வரை பல மாற்றங்கள் வந்துவிட்டன. ஆனால் எம் இனத்துள் காணப்படும் பல்வகை பிளவுகள் மட்டும் மாறாத ஒன்றாகவே தொடர்கிறது. அடுத்தவரை விமர்சிப்பதில் காட்டும் முனைப்பை தம்மை பற்றிய சுயவிமர்சனத்தில் நழுவவிடுகின்றனர். அன்று ஓலைச்சுவடிகளில் பல காவியங்களைப் படைத்த நாம் இன்று, கணனியுகத்தில் காழ்ப்புணர்ச்சியை விதைக்கிறோம்.

பெரும் அரசியல் மாற்றத்தை தமது வைபர் மூலமான தொடர்பாடலால் நிகழ்த்தியதை சொல்லிப் பெருமைப்படும் சந்திரிகா ரணில் மைத்திரி கூட்டு, அவர்கள் இனத்துள் உருவாகிவந்த மகிந்தவின் சர்வாதிகாரபோக்கு குடும்ப அரசியலை சேதாரமின்றி அப்புறப்படுத்தியதை நாம் கவனத்தில் எடுத்தால், எம் இனத்தின் விடிவுக்காக நாமும் முகநூலை அரோக்கியமான கருத்துருவாக்கத்துக்கு பயன்படுத்த வேண்டும். மாறாக அடுத்தவரை சீண்டுவதற்க்கல்ல.

– ராம் –