வல்வைக்கு பட்டம் விடச்சென்ற டெனீஸஸ்வரன் பட்டமும் விட்டார் ரீலும் விட்டார் :

(த ஜெயபாலன்)
இந்த மாகாண சபைக்கு குறிப்பிடத்தக்க அதிகாரங்கள் உள்ளது என்றும் இந்த மாகாண சபையைச் சரிவர நடத்தினால் தமிழ் மக்களின் 50 வீதமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் இந்த மாகாணசபையை சரிவரச் செயற்படுத்த தவறினால் தமிழ் மக்களின் வாழ்நிலை இன்னும் பத்து ஆண்டுகளுக்கு பின் தள்ளப்படும் என்றும் வட மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தேசம்நெற் இற்கு தெரிவித்தார். ஜேர்மன், டோட்முன் நகரில் யூலை 12இல் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவுக் கூட்டத்திற்கு வந்திருந்த டெனீஸ்வரன் தேசம்நெற் இற்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்படி கருத்தைத் தெரிவித்து இருந்தார். அப்போது வடமாகாண சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றி பத்து மாதங்கள் ஆகியிருந்த நிலையில் பா டெனீஸ்வரன் அக்கருத்தைத் தெரிவித்து இருந்தார்.

ஆனால் வட மாகாண சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றி தற்போது மூன்று ஆண்டுகள் ஆகின்ற நிலையில் வடமாகாண சபையின் மிக மோசமான ஊழல் பேர்வழியாக பா டெனீஸ்வரன் சித்தரிக்கப்படுகின்றார். டெனீஸ்வரன் உட்பட படமாகாணசபையின் நான்கு அமைச்சர்களுக்கு எதிராகவும் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அது பற்றிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றது. அப்படிப் பார்க்கையில் வடமாகாண சபை நூறுவீத மோசடியான அமைச்சரவை என்ற பெயரைப் பெற்றுள்ளது.

கல்வி அமைச்சர் குருகுலராஜாவின் கீழ் வடமாகாணக் கல்வித்தரம் வீழ்ச்சி அடைந்துகொண்டு செல்கின்றது. அதன் போக்கை, வளர்ச்சியை நோக்கித் திருப்பும் எந்த ஒரு கொள்கைத்திட்டமும் குருகுலராஜாவினால் முன்வைக்கப்படவில்லை. இவர் ஒரு வினைத்திறன் அற்ற அமைச்சராகவே உள்ளார்.

முதலமைச்சர் சி வி விக்கினேஸ்வரனும் ஒரு வினைத்திறனற்ற ஒருவராகவே மீண்டும் மீண்டும் தன்னை நிரூபித்து வருகின்றார். தனது அமைச்சரவையில் உள்ள நால்வர் மீது மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் அந்த விசாரணைகளைத் துரிதப்படுத்தி மாகாண சபையை வினைத்திறனுடையதாக்குவதற்குப் பதிலாக, தீர்மானங்களுக்கு மேல் தீர்மானங்களை இயற்றி காலத்தை கடத்தி வருகின்றார். ஒரு நீதிபதியாக இருந்தும் தனது அமைச்சரவையில் நடக்கின்ற மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாதவராக உள்ளார்.

அமைச்சர் பா டெனிஸ்வரனுக்கு இணையாக மோசடிக் குற்றம்சாட்டப்பட்டு உள்ளவர், அமைச்சர் பொ ஐங்கரநேசன். இவரும் டெனீஸ்வரன் போன்று செயலாற்றல் உடையவர். தங்கள் செயற்பாடுகளால் தங்கள் மோசடிகளை மேவலாம் என இவர்கள் கருதிச் செயற்படுகின்றனர். அமைச்சர் பா சத்தியலிங்கமும் தான் சளைத்தவர் அல்ல என்பதைக் காட்டும் அளவில் மோசடிக் குற்றச்சாட்டுகளைக் கொண்டுள்ளார்.

வடமாகாண சபையைக் கைப்பற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் உரிமை, அபிவிருத்தி போன்ற எந்த விடயங்களிலும் ஒரு அங்குலம் தானும் முன்நோக்கி நகரவில்லை. ஆனால் வட மாகாண அமைச்சர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையை மிகவும் வளம்படுத்தி வருகின்றனர் என்பதை வடமாகாண தமிழர்கள் தங்கள் கண்முன்னே காண்கின்றனர்.

அமைச்சர் பா டெனீஸ்வரன் கடந்த காலங்களில் வெளியிட்ட சில உறுதிமொழிகள்:
பெப்ரவரி 20 2015 : போரினால் ஊனமுற்றவர்கள், சிறைகளிலுள்ளோரின் குடும்பத்தினர், விதவைகள் உள்ளிட்டோர் தொடர்பான தவல்களை திரட்டி வருவதாகவும் அதற்கான விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பா டெனீஸ்வரன் தெரிவித்தார்.

மே 14 2015 : புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள், மாவீரர் குடும்பங்கள் மற்றும், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கான சுயதொழில் உதவித் திட்டத்திற்கு 13 ஆயிரம் குடும்பங்கள் பதிவு செய்துள்ளதாக மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

செப்ரம்பர் 24 2015 : அரசியல் கைதிகளின் குடும்பங்கள், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மற்றும் பிள்ளைகளை இழந்த பெற்றோர் என 860 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் இவ்வருட இறுதிக்குள் வழங்கப்படும் என வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யூன் 8 2016 : முன்னாள் போராளிகள் மற்றும் அரசியல் கைதிகளுக்கு வாழ்வாதார உதவித் திட்டங்களை வகுத்துக் கொடுக்கவென இவ்வருடம் 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் சுமார் 100 பயனாளிகள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் வட மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ப.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

மேலுள்ள உதவித் திட்டங்கள் அமைச்சர் பா டெனீஸ்வரனால் அறிவிக்கப்பட்டவை. இவற்றில் எதனை அவர் நிறைவேற்றி பாதிக்கப்பட்டவர்களின் வாழ்நிலையை மேம்படுத்தி உள்ளார். வடமாகாணத்தில் போராளிக் குடும்பங்கள், போரினால் பாதிக்கப்பட்டவர்கள் மரணத்தின் விளிம்புக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். சிலர் தற்கொலை செய்து கொண்டும் உள்ளனர்.

ஆனால் தைத்திருநாள் ஒரு நல்லநாள், பெருநாளில் ஆவது உண்மை பேச வேண்டும் மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் பா டெனீஸ்வரன் கருதவில்லை. மாறாக அம்மக்களை எவ்வாறு ஏமாறறலாம். தன் மீது சுமத்தப்பட்டுள்ள மோசடிக் குற்றச்சாட்டுகளை எப்படி மறைக்கலாம் என்பதற்கு அவர் கண்டுபிடித்த விடயம் தான் ‘பிரபாகரன் நலமாக வாழவேண்டும்’ என்று பிரார்த்திக்கும் கோரிக்கை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இல்லை என்ற உண்மையை தமிழீழ விடுதலைப் புலிகளே ஏற்றுக்கொள்ள தயாராகி வருகின்றனர். சர்வதேச நிதி சேகரிப்புகளுக்காக, சேர்க்கப்பட்ட நிதியை காப்பாற்றுவதற்காக பிரபாகரன் இல்லை என்ற மறைக்கப்பட்ட உண்மையைப் பயன்படுத்தி தன்மீது சுமத்தப்பட்ட குறறச்சாட்டுக்களில் இருந்து தப்புவதற்கு அமைச்சர் பா டெனீஸ்வரன் வே பிரபாகரன் இருக்கின்றார் என்ற பழைய ரீலை வல்வை மண்ணிலேயே விட்டுள்ளார். வல்வை மக்கள் மட்டுமல்ல தமிழ் மக்களும் உணர்வால் முட்டாள்கள் என்பதை அமைச்சர் பா டெனீஸ்வரன் மிகச் சரியாகவே கணித்துள்ளார்.

தைப்பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் இடம்பெற்ற பட்டம் விடும் போட்டியில் கலந்து கொண்ட அமைச்சர் பா டெனீஸ்வரன் ‘எந்த மூலையில் அண்ணன் பிரபாகரன் வாழ்ந்தாலும் நலமோடு வாழவேண்டும். தமிழ் மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்க அண்ணன் இங்கு வரவேண்டும். அவர் வருவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த மண்ணிலேயே பட்டமும் விட்டு ரீலும் விட்டு அமைச்சர் பா டெனீஸ்வரன் திரும்பி இருக்கின்றார் என்றால் அவர் உதய சூரியன் அப்புக்காத்துக்களுக்கே அல்வா கொடுக்கும் ஒரு அப்புக்காத்து என்பதை நிரூபித்து உள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்புக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் அமைச்சர் பா டெனீஸ்வரன். ஆனால் அவர் தமிழீழ விடுதலை இயக்கத்தில் இருந்தவரல்ல. அவரது கல்வி மற்றும் தொழில் அந்தஸ்து கருதி அவருக்கு ஆசனம் வழங்கப்பட்டது. தமிழீழ விடுதலை இயக்கம் இன்று அதிகாரத்திலும் முக்கிய பொறுப்புகளிலும் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி. அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்ற குழுக்களின் தலைவர். அவர்களுக்கு என்று குறிப்பிட்ட அளவு நியமனங்கள் வழங்கப்பட்டு இருந்தது.

தமிழீழ விடுதலை இயக்கப் போராளிகளின் கல்லறைகள் மீது ஏறி அரசியலுக்கு வந்த இவர்கள் அந்தப் போராளிகளின் அவர்களின் குடும்பங்கள் வாழ்வை மேம்படுதத வில்லை, வன்னி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட போராளிகளின், மக்களின் வாழ்நிலையை மேம்படுத்தவில்லை. தங்கள் சொந்த வாழ்வை மட்டுமே மேம்படுத்துவதில் குறியாக உள்ளனர்.

தமிழ் மக்களின் பொது எதிரியான பேரினவாத அரசு தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமைகளை மறுக்கின்றது. தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் மக்களுக்கு மற்றைய அனைத்தையும் மறுக்கின்றனர்.

ஏனைய அரசியல் அமைப்புகளோடு ஒப்பிடுகையில் தமிழீழ விடுதலை இயக்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் அரசியல் சித்தாந்தம் ஒன்றைக் கொண்டிருப்பதற்கான அரசியல் தளம் அற்ற அமைப்பாகவே கருதப்படுகின்றன. அதனை தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமையும் அமைச்சர் பா டெனீஸ்வரன் போன்றவர்களும் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர்.