குழிகளாகும் கிணறுகள்

  உலக வெப்பமயமாதல் காரணமாக பூமியின் மேற்பரப்பில் உள்ள நீரானது ஆவியாவதன் காரணமாகவும் நீர்த்தேவைக்காக முதலாம் படை நீரில் இருந்து குழாய்க் கிணறுகள் அமைத்து இரண்டாம் படை நீரை பயன்பாட்டுக்கு பெறுவதாலும் சீரான நீர் பரிமாணம் மாற்றப்பட்டு குடிநீர் பற்றாக்குறைக்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையை பொறுத்தவரையில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் மழை நீரை சேகரிக்கும் குளங்கள் மேற்பரப்பு நீரை தாங்கியிருந்த போதீலும் கூட, தற்போது குறித்த பல குளங்கள் பராமரிக்கப்படாமை குளங்கள் மக்கள் குடியிருப்புக்காக ஆக்கிரமிக்கப்படுதல் போன்றவற்றால் அதிகளவான மழை நீர் சேகரிக்கப்படாமலேயே கடலை சென்றடையும் துர்ப்பாக்கியம் காணப்படுகின்றது.

இந்த வகையில், வவுனியா பிரதேசத்தில்  நீர் தேவையை குளங்களும் ஆறுகளும் பூர்த்தி செய்யும் முக்கிய வளங்காக காணப்பட்டது. ஒரு பாரிய குளமும் 22 நடுத்தர குளங்களும் காணப்படும் வவுனியாவில் 674 சிறிய நிர்ப்பாசன குளங்களும் காணப்படுகின்றன. இன்று பல நகர்ப்பகுதி குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு மக்கள் வாழ்விடங்களாக மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறாக 83 குளங்கள் கைவிடப்பட்டு அல்லது தூர்வாரப்படாமல் பராமரிக்கப்படாமல் காணப்படுவதுடன், ஆறுகள் பலவும் தூர் வாரி, சீராக பராமரிக்கப்படாமையால் நீர் வழிந்தோடும் முறையில் மாற்றம் ஏற்பட்டு, வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கச் செய்வதையும் மறுத்துவிட முடியாது.

எனவே, நீர் முகாமைத்துவம் சீராக இன்மையினால் வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்டுவரும் நீர் பற்றாக்குறைக்கு மத்தியில் தற்போது அதிகளவான குழாய் கிணறுகள் அமைக்கும் பணிகள் அதிகரித்துச் செல்கின்றன.

இந்தக் குழாய் கிணறுகள், விவசாயத்துக்கு எதிரியாக காணப்படுவதுடன் பூமியின் மேற்பரப்பு நீரை இல்லாது ஒழிக்கும் கிணறுகளாகவும் காணப்படுகின்றன. சுமார் 100 தொடக்கம் 150 அடி ஆழம் வரை நிலத்திணை துளை போட்டு, நீரைப் பெறுவதால், சாதாரண கிணறுகளில் உள்ள நீர் வற்றிப்போகும் நிலை உள்ளதுடன் குளங்களில் சேமிக்கப்படும் நீரும் மிக விரைவில் பூமியின் இரண்டாம் படைக்கு செல்லும் வாய்ப்புள்ளது.

  எனவே, விவசாயத்துக்கான நீரோ சாதாரண குடிநீருக்கான தேவையோ பூர்த்தி செய்ய முடியாத துர்ப்பாக்கியம், குழாய்கிணறுகளால் ஏற்படுத்தப்பட்டு வருவதனை யாரும் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

 வவுனியாவைப் பொறுத்தவரையில், கிராமங்கள் ஒவ்வொன்றிலும் சுமார் 10க்கும் மேற்பட்ட குழாய் கிணறுகள் காணப்படும் நிலையில், அரசாங்கத்தின் திட்டங்களும் கூட நீர் முகாமைத்துவத்தினை சிதைக்கும் வகையில் குழாய்கிணறுகளை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது. அத்துடன் புலம்பெயர் அமைப்புகளும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதாகத் தெரிவித்து, குழாய்கிணறுகளை ஒரு திட்டமிடல் இல்லாமல் அமைத்து வருகின்றன.

 குழாய்க்கிணறு அமைப்போர் சங்கம் என்ற ஓர் அமைப்பு, நீரியாக குழாய் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோர் செயற்படும் அளவிற்கு வவுனியா மாவட்டத்தில் குழாய் கிணறு அமைக்கும் பணிகள் தீவிரம் பெற்று வருகின்றது.

எனினும் இது தொடர்பில் எவரும் கவனம் செலுத்தும் நிலை ஏற்படாத தற்போதைய சூழலில், மிக விரைவில் வவுனியா மாவட்டத்தில் கிணறுகள் வெறும் குழிகளாக மட்டுமே காணப்படும் நிலை உருவாகி, அனைவரும் நீருக்காக அலையும் சந்தர்ப்பம் ஏற்படுவதனை தவிர்க்க முடியாது போய்விடும்.

குறிப்பாக, வவுனியா மாவட்டத்தின் இவ்வாறான குழாய் கிணறுகளை தடுக்க வேண்டியது அரச திணைக்களங்களாக இருந்த போதிலும் கூட, குறித்த அரச திணைக்களங்களே கிராமம் கிராமமாக குழாய் கிணறுகளை அமைப்பதும் அதில் இருந்து குறித்த கிராமத்திற்கான குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வதாகவும் செயற்பட்டு வருகின்றனர்.

குறித்த கிராமங்களின் குடிநீரை ஓர் இடத்தில் குவியச்செய்வது மாத்திரமின்றி வீடுகளில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் குடிநீர் கிணறுகளில் உள்ள நீரை பராமரிப்பதற்கான செயற்றிட்டத்தினை அரச திணைக்களங்கள் முன்னெடுக்காமை வேதனையே.

இவ்வாறான முறையற்ற செயற்பாட்டால் வவுனியா வடக்கில் ஒலுமடு என்ற கிராமத்தில் கிணறுகளில் நீரைப் பெற முடியாத ஆபத்தான நிலைக்கு மக்கள் சென்றுள்ளதுடன் தோணிக்கல் பகுதியிலும் கோடை காலத்தில் குடிநீருக்கான தட்டுப்பாட்டு அதிகரித்து செல்கின்றது.

குழாய் கிணறு அமைப்பதற்கு அரச திணைக்களங்கள் எதிர்ப்பு வெளிப்படுத்தாவிட்டாலும் சில கிராமங்களில் மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த பின்நின்றதில்லை.

அண்மையில் வவுனியா, யேசுபுரம் கிராமத்தில் அமைக்கப்படவிருந்த குழாய்கிணற்றை அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தியிருந்ததை மறுத்துவிட முடியாது.

எனவே, நீர் முகாமைத்துவத்துக்குப்  பெரும் கேடாகவும் விவசாயம் மற்றும் குடிநீருக்கான புதைகுழியாகவும் காணப்படும் குழாய் கிணறுகளை அமைப்பதற்கு அரசாங்கம் தடை வித்திக்காத வரை, இலங்கையில் பயன்படுத்தக்கூடிய நீரின் அளவில் வீழ்ச்சி ஏற்படுவதனை தடுக்க முடியாது.