அசாட் இருக்கும் வரை உதவி இல்லை

சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டை எதிர்க்கும் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட பல நாடுகள், அப்பதவியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டு, புதிய அரசியல் மாற்றமொன்று ஏற்படும் வரை, அந்நாட்டை மீளக்கட்டியெழுப்பும் பணிகளுக்கு உதவாது என, ஐக்கிய இராச்சிய வெளிநாட்டுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். மேற்கத்தேய நாடுகளும் வளைகுடா நாடுகளும் இணைந்துள்ள “சிரியாவின் நண்பர்கள்” குழு, ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க்கில் சந்தித்து உரையாடின.

சிரியாவின் இடம்பெற்றுவரும் போர், முடிவுக்கட்டத்தை எட்டியிருப்பதாகக் கருதப்படும் நிலையில், அடுத்த கட்டங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டன. அதிலும், ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டின் படைகள், விரைவில் வெற்றியை அடையலாம் என்று கருதப்படும் நிலையில், அசாட்டின் கீழான சிரியாவின் எதிர்காலம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

அசாட் இல்லாத அரசியல் மாற்றத்தின் பின்னரே உதவப் போவதாகத் தெரிவித்த தகவலை, அசாட் அரசாங்கத்துக்கு மாத்திரமன்றி, ஈரானியர்களுக்கும் ரஷ்யர்களுக்கும் வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிரியப் போரில், ரஷ்யாவின் தலையீட்டின் பின்னரே, சிரிய ஜனாதிபதியின் பக்கம் வெற்றிகள் கிடைத்தன. அதேபோல், ஈரானினது ஆதரவும், லெபனானின் ஹிஸ்புல்லா குழுவின் ஆதரவும், அசாட்டுக்குக் காணப்படுகிறது.

இதேவேளை, அண்மைக்காலத்தில் கிடைத்துள்ள முன்னேற்றங்களை மாத்திரம் வைத்துக் கொண்டு, சிரியப் போரில் வெற்றி கிடைத்துவிட்டது என, சிரிய அரசாங்கம் எண்ணக்கூடாது என, ஐக்கிய அமெரிக்காவின், கிழக்குப் பகுதி விவகாரங்களுக்கான பதில் உதவிச் செயலாளர் டேவிட் சட்டர்பீல்ட் தெரிவித்துள்ளார். “சிரிய அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும், வரைபடமொன்றையும் அதில் காணப்படும் நிறங்களையும் மாத்திரம் வைத்துக் கொண்டு, வெற்றியைப் பிரகடனப்படுத்த முடியாது” என்று அவர் தெரிவித்தார்.

சிரியப் போர், வெற்றிகொள்ளப்பட்டு விட்டது என, ஹிஸ்புல்லா ஆயுததாரிகள் அறிவித்திருந்த நிலையில், வெல்லும் நிலையில் போர் காணப்படுகிறது என, ரஷ்யா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.