‘றோகிஞ்சாக்களைக் கணக்கெடுக்காத ட்ரம்ப்’

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன், றோகிஞ்சா அகதிகள் தொடர்பாகக் கலந்துரையாடிய போதிலும், அவர்கள் குறித்து எந்தவிதமான கருத்தையும் அவர் வெளிப்படுத்தவில்லை என, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸினா தெரிவித்துள்ளார். அகதிகள் பற்றிய தன்னுடைய நிலைப்பாட்டை, ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்கெனவே தெளிவாக வெளிப்படுத்தியுள்ள நிலையில், அவரிடம் உதவிகளையும் எதிர்பார்க்கவில்லையெனவும், பிரதமர் ஹஸினா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடர் ஆரம்பித்துள்ள நிலையில், உலகத் தலைவர்களுள் அநேகமானோர், அங்கு சென்றுள்ளனர். அங்கு இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னரேயே, ஜனாதிபதி ட்ரம்ப்பும் பிரதமர் ஹஸினாவும் கலந்துரையாடியுள்ளனர்.

சந்திப்புத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பிரதமர் ஹஸினா, “அவர் என்னிடம், ‘பங்களாதேஷ் எப்படி இருக்கிறது?’ என்று கேட்டார். ‘பங்களாதேஷ் நன்றாக இருக்கிறது. ஒரே பிரச்சினையாக, மியான்மாரிலிருந்து அகதிகளின் வருகை காணப்படுகிறது’ என நான் குறிப்பிட்டேன். ஆனால், அகதிகள் பற்றி, எந்தக் கருத்தையும் அவர் வெளிப்படுத்தவில்லை” என்று தெரிவித்தார்.

மியான்மாரின் ராக்கைனில் இடம்பெற்றுவரும் வன்முறைகளின் காரணமாக, 410,000க்கும் மேற்பட்ட அகதிகள், பங்களாதேஷைச் சென்றடைந்துள்ளனர். அவர்களுக்கான அடிப்படை உதவிகளை வழங்குவதிலும், அவர்களுக்கான இருப்பிடங்களை வழங்குவதிலும், பலத்த சவால்களை, பங்களாதேஷ் எதிர்கொண்டு வருகிறது.

ஜனாதிபதி ட்ரம்ப்பிடம், அகதிகளுக்கான உதவிகள் கோரப்பட்டனவா எனக் கேட்கப்பட்டபோது பதிலளித்த பிரதமர் ஹஸினா, “அகதிகள் எவரையும் அனுமதிக்கப் போவதில்லை என, அமெரிக்கா ஏற்கெனவே அறிவித்து விட்டது. அவர்களிடமிருந்து – குறிப்பாக ஜனாதிபதியிடமிருந்து – நான் எதை எதிர்பார்க்க முடியும்? அவரது மனதில் இருப்பதை, அவர் ஏற்கெனவே வெளிப்படுத்தி விட்டார். எனவே, நான் ஏன் கேட்க வேண்டும்?” என்று பதிலளித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “பங்களாதேஷ், செல்வந்த நாடு கிடையாது. ஆனால், 160 மில்லியன் மக்களுக்கு நாங்கள் உணவளிக்க முடியுமானால், மேலும் 500 அல்லது 700,000 மக்களுக்கும் நாங்கள் அதைச் செய்ய முடியும்” என்று தெரிவித்தார்.