ஐ.நாவின் கேள்வியால் ஆட்டங்கண்டது அரசாங்கம்

கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் மட்டக்களப்பிலும் உள்ள சித்திரவதைக் கூடங்களை, இலங்கை அரசாங்கம் விசாரித்ததா என்பது தெளிவில்லாமல் இருப்பதாக, சித்திரவதைக்கெதிரான செயற்குழுவின் 59ஆவது மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்த அமர்வில், அச்செயற்குழுவின் தலைவர் ஜென்ஸ் மொட்விக், உப தலைவர் பெலிஸ் காயெர் உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள், தங்களது கருத்துகளை முன்வைத்ததோடு, கேள்விகளையும் முன்வைத்தனர்.

இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புப் பகுதியில், அதன் கொள்ளளவை விட 200 அல்லது 300 சதவீதம் அதிகமானவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டதாக அறிவிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு உட்பட, பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 10 மடங்களுக்கும் அதிகமான முறைப்பாடுகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குக் கிடைத்துள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

சாட்சிகள் பாதுகாப்புச் சட்டமூலத்தில், சுயாதீன பாதுகாப்புப் பிரிவொன்று உருவாக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா எனக் கேள்வியெழுப்பப்பட்டதோடு, 2016ஆம் ஆண்டில், பல மனித உரிமைகள் செயற்பட்டாளர்களுக்கு எதிராக, அச்சுறுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்றன எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

பொலிஸாருக்கு எதிரான 170 சித்திரவதை விசாரணைகளில், 24 விசாரணைகள் மாத்திரம் முடிக்கப்பட்டுள்ளமை ஏனெனக் கேள்வியெழுப்பப்பட்டதோடு, அரச படைகளுக்கும் புலனாய்வாளர்களுக்கும் எதிரான பாலியல் துன்புறுத்தல், சித்திரவதைக் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக, முறையான பதில்கள் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

பாரிய குற்றங்களை மேற்கொண்டோருக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்படாது என்பதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை என, இலங்கை அரசாங்கத்தால் உறுதிப்படுத்த முடியுமா எனக் கேட்கப்பட்டதோடு, தடுத்து வைக்கப்பட்டோர், தொடர்ச்சியாக மருத்துவ சோதனைகளைக் கோர முடியும் என்ற உரிமை மதிக்கப்படுகிறதா எனவும் கேட்கப்பட்டது.

போருக்குப் பின்னரான இலங்கையில், பாதுகாப்புப் படையினரால் அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் விடயம் தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டதோடு, உப தலைவரால், கடந்த கால அச்சம் கலந்த நிலைமை மாற்றுவதற்கு, அரசாங்கத்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படுமெனக் கேள்வியெழுப்பப்பட்டது.