பற்குணம் A.F.C (பகுதி 76 )

பற்குணம் முல்லைத்தீவு வந்தபின் நடேசபிள்ளையின் நிர்வாகத்துக்கு தடையாக இருந்த வர்த்தகரையே குறிவைத்தார்.அந்த வர்த்தகர் அரச அதிபரான ஞானச்சந்திரனுடன் நெருக்கமான நட்பில் உள்ளவர்.எனவே கொஞ்சம் நிதானமாகவே செயற்பட வேண்டியிருந்தத நடேசபிள்ளையை எந்தப்பாணியில் மிரட்டி அவரின் நிர்வாகத்துக்கு இடையூறு பண்ணினானோ அதே பாணியில் அவனுக்கு பதிலடி கொடுக்க விரும்பினார்.

இதற்காக அவர் கிளிநொச்சி சென்று மாணிக்கம் இராசன் என்பவரைச் சந்தித்தார்.அவரிடம் ஆளுதவிகளை கோரினார்.(மாணிக்கம் இராசர் தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர்.இவரையே பலகாலத்தின் பின்னரும் முடிந்த வழக்கு தொடர்பாக கைது தமிழர் உளவுப் பொலிஸ் கைது செய்து காரணமின்றி சிறையில் அடைத்தது.)

இதைக் கேட்ட இராசர் அடே அதுக்கும் இங்க வந்தனி.அங்க வவுனிக்குளத்தில் இல்லாத பெடியளா அங்கேதான் எங்கட பெடியள் இருக்கிறார்கள்.சொன்னால் அங்கேயே விசயம் முடியும் என்றார்.

அதற்கு பற்குணம் தெளிவாக தன் தேவையை விளக்கினார்.கடைக்காரன் தீவுப்பகுதியைச் சேர்ந்தவர்.ஏற்கனவே அங்கே அவர்களும் நமது ஊரவர்களும் மோதல்களில் உள்ளனர்.நான் செய்யப்போகிற இந்தவேலையால் நாளை ஊர்ச்சண்டைகளாக வரலாம்.அதை தவிர்க்கவே உங்கள் உதவியைக் கேட்கிறேன் என்றார்.அவரும் சரி என ஆட்களை ஒழுங்குபடுத்திக் கொடுத்தார்.

இதேநேரம் பற்குணம் பொலிஸ் எப்படி செயல்படவேண்டும் என்ற இறுக்கமான ஒழுங்குகளையும் செய்தார்.ஏனென்றால் ஞானச்சந்திரன் அவர்களை காப்பாற்ற அதிகாரத்தைப் பாவிப்பார்.அப்படியானால் காரியம் தோல்வியுறும்.

ஒரு வெள்ளிக்கிழமை துணிக்காய் மல்லாவி பகுதி கடைகளை சோதனை செய்யவருவதாக திடீர் தகவல் ஒன்றை கடைக்கார்ருக்கு அனுப்பிவித்தார்.காரணம் அவர்களும் ஆட்களுடன் தயாராக நிற்கவேண்டும்.அப்போதுதான் அவர்கள் பாணியில் பதிலடி வழங்கமுடியும்.அவரகளும் தயாராக நின்றார்கள்.பற்குணம் ஏற்பாடு செய்தவரகளும் மறைந்து நின்றார்கள்.

பற்குணம் தன் சக ஊழியர்கள் கடைக்குள் இறங்க அவர்கள் தாக்க முற்பட்டார்கள்.அதற்குள் பற்குணம் ஏற்பாடு செய்தவர்கள் முந்திவிட்டார்கள்அத்தனை பேரையும் அடித்து வாகனங்களில் ஏற்றி மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் வழக்குப்பட பதிவுசெய்து சிறையில் அடைத்தார்.

அதன் பின் ஞானச்சந்திரனை சந்தித்து விபரத்தை கூறினார்.அதற்கு ஞானச்சந்திரன் யாரைக்கேட்டு இப்படி செய்தீர் என கேட்டார்.அதற்குப் பற்குணம் என் கடமைக்கு குறுக்கே எவர் வருவதையும் நான் அனுமதிக்கமாட்டேன்.உங்களையும் சேர்த்தே சொல்கிறேன் என்றார்.

அதன்பின் ஞானச்சந்திரன் மாங்குளம் பொலிஸ்நிலையத்தில் தொடர்புகொண்டு அவர்களை விடுவிக்க கோரினார்.அவரகளை விடுவிக்க முடியாது என பதிலளித்தனர்.அந்தளவுக்கு கடுமையான ஏற்பாட்டை பற்குணம் செய்திருந்தார்.

பற்குணம் அவர்களை அடித்துப்பிடித்ததை அவரது பால்யகால நண்பர் ஒருவர் கண்டுவிட்டார்.அவர் மல்லாவிப் பகுதியில் விவசாயம் செய்பவர்.அதன் பின்பு ஒரு நாள் அந்தக் கடைக்கு பற்குணம் போனார்.மரியாதையாக வரவேற்றார்கள்.எந்தவொருவரின் கடமைக்கும் இடையூறு பண்ணவேண்டாம் என அமைதியாக சொல்லிவிட்டு திரும்பினார்.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)