கணவன் கழுத்தைக் குதறிய சிங்கம்… காப்பாற்ற மனைவி செய்த சிம்பிள் வேலை!

பிரான்ஸ் நாட்டின் வடக்குப் பக்கமாகவிருக்கும் டவுள்ளேன்ஸ் (Doullens ) என்ற பகுதியில் மிருகங்களையும் வைத்து நடாத்தப்படும் சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. வழமை போல, கடந்த ஞாயிற்றுக்கிழமையும் சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.சர்க்கஸின் ஒரு பகுதியாக சிங்கத்தை வைத்து சர்க்கஸ் காட்டும் சாகச நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. அவ்வேளை, அந்த நிகழ்ச்சிக்கான பயிற்சியாளர் லோபெரோட் ( Loberot) என்பவரும் சிங்கத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக கூடவே இருந்தார்.

திடீரென சிங்கம் மிரண்டது. தன் பற்கள் வெளித்தெரிய வாயைத் திறந்து கர்ஜனை செய்தது. யாரும் எதிர்பாராத நேரத்தில் அது பயிற்சியாளர் லோபெரோட்டைத் தாக்கியது. இந்தத் தாக்குதலினால் நிலைகுலைந்த லோபெரோட் கீழே விழுந்தார். மூர்க்கம் கொண்ட சிங்கமோ அவரின் தொண்டைப் பகுதியைக் குறி வைத்துக் கடித்துக் குதறவாரம்பித்தது.

தன்னை எப்படியாவது சிங்கத்திடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக அதனுடன் போராடினார் லோபெரோட். அந்த நேரத்தில்தான் அவரது மனைவியான சர்க்கஸ் வீராங்கனைக்கு அந்தச் சமயோசிதம் வந்தது. அவர் தீயனைப்பு பாதுகாப்பு உபகரணமான தீயனை கருவியை எடுத்தார். அதனை உடைத்ததும் புகை கக்க ஆரம்பித்தது. அந்தப் புகையைச் சிங்கத்தை நோக்கிப் பீய்ச்சியடிக்கத் தொடங்கினார்.

சிங்கம் பயந்து போனது. புகையைக் கண்டதும் இரையைக் கைவிட்டது. தூரமாக ஓடியது. உடனே காவலர்கள் கூண்டுக்குள் புகுந்து லோபெரோட்டைத் தூக்கிக் கொண்டு வந்துவிட்டனர்.

மிகக் கடுமையான காயங்களுடன் லோபெரோட் தற்போது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உயிராபத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வெகு சாமர்த்தியமாகத் தனது கணவனின் உயிரைக் காப்பாற்றிய அவரது மனைவியைப் பலரும் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.