புலம்பெயர் தரப்புகளின் தாயக வருகை; சாதித்தவை எவை?

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான கடந்த இரண்டு ஆண்டுகளில் தாயகப் பகுதிகளை நோக்கி வருகை தரும் புலம்பெயர் தமிழ் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கின்றது. அதிலும் குறிப்பாக, புலம்பெயர்அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட தமிழ்த் தேசிய அரசியலில் தாக்கம் செலுத்தக்கூடியவர்களின் வருகை எதிர்பார்க்கப்பட்ட அளவினைத் தாண்டியிருக்கின்றது.

தாயக மக்களை நேரடியாகச் சந்திப்பதும் அவர்களின் பிரச்சினைகள், ஆதங்கங்களைப் புரிந்து கொள்வதும், அதனூடாகக் களம் எப்படியிருக்கின்றது என்கிற அடிப்படைகளைப் புரிந்து கொள்வதும் எதிர்கால அரசியலுக்கு அவசியமானது என்று புலம்பெயர் தமிழ் மக்களையும் அமைப்புகளையும் நோக்கித் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அவர்களின் வருகைக்கான சூழல் சற்றும் காணப்படாத நிலையில், தற்போதுள்ள சிறிய ஜனநாயக இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு அச்ச உணர்வுகள் தாண்டி, குறிப்பிட்டளவான புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட தரப்பினரும் வந்துசெல்கின்றார்கள். இன்னமும் தமது வருகை தொடர்பில் பெரும் ஆர்வத்தோடு காத்திருப்பவர்களையும் காண முடிகின்றது.

ஆனால், தாயக மக்களும் புலம்பெயர் தமிழ்த் தரப்புகளும் நேரடியாகச் சந்திப்பதற்கான தேவைகள் குறித்து, கடந்த காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட முன்னேற்றகரமான விடயங்கள் ஏதாவது கடந்த இரண்டு ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கின்றதா என்றால், பெரும்பாலும் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கின்றது.

தாயக அரசியல் நடைமுறைக்கும் புலம்பெயர் அரசியல் நடைமுறைக்கும் இடையிலான முரண்பாடுகள் என்பது, கடந்த எட்டு ஆண்டுகளில் அதிகரித்தே வந்திருக்கின்றன. பல முக்கியமான கட்டங்களில் தாயக மக்களின் அடிப்படை எதிர்பார்ப்புகளிலிருந்து புலம்பெயர் அரசியல் நிகழ்ச்சி நிரல் வேறு பக்கம் செலுத்தப்பட்டமை தொடர்பில் பலத்த அதிருப்தியும் காணப்பட்டது.

ஆனால், முரண்பாடுகளையும் அதிருப்திகளையும் களைவதற்கான சூழல் தற்போது சிறியதாக ஏற்பட்டிருக்கின்ற போதும், அவை நிகழ மறுக்கின்றன.

தாயகத்தினை நோக்கி வருகை தரும் புலம்பெயர் தரப்பினரை மூன்று வகைக்குள் அடக்கலாம்.

1. சொந்த இடங்களையும் உறவினர்களையும் பார்க்க வரும் சாதாரண மக்கள்

2. தாயகப் பகுதிகளில் முதலீடுகளைச் செய்து, தொழில் முனைப்புகள் தொடர்பில் ஆர்வம் கொள்பவர்கள்.

3. தமிழ்த் தேசிய அரசியலில் தாக்கம் செலுத்தும் அமைப்புகளின் பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட தரப்பினர்.

இதில், முதலாவது வகையினரே எண்ணிக்கையில் அதிகமானவர்கள். அவர்களின் அதிகபட்ச ஆசையும் அடைவும் உறவினர்களோடு கதைத்துப் பேசி, தாம் பிறந்து வளர்ந்த இடங்களைப் பிள்ளைகளுக்குக் காட்டி, கோயில் திருவிழாக்களில் கலந்து கொண்டு, ஊரின் சிறப்பு உணவுகளை உண்டு, மகிழ்ந்து செல்வதோடு முடிந்துவிடும்.

ஒருவகையில் விடுமுறை காலத்து வருகையாக அதனைக் கொள்ள முடியும். இவர்கள், நேரடியான மாற்றங்களையோ,முதலீடுகளையோ பெருமளவு செய்பவர்கள் அல்ல; ஆனால், இவர்களினால் செலவிடப்படும் பணத்தின் பெறுமதி என்பது பல நேரங்களில் பெரும் முதலீடுகள் தொடர்பில் எதிர்பார்க்கப்படும் அளவினைவிடவும் பல மடங்கு அதிகம்.

தாயகச் சூழல் தொடர்பிலான உரையாடல்களில், இராணுவத்தினரின் சோதனைச் சாவடிகள் அகற்றம் மற்றும் இரயில் பயணங்கள் பற்றி உரையாடல்களோடு முடிந்து போகும். சிலவேளை அந்த உரையாடல்கள், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வரையிலும் நீளலாம். இது, அவர்களின் அடுத்த தலைமுறையிடம், தாயகத்தின் தமிழ்த் தேசிய அரசியல் தொடர்பிலான பதிவுகளை அவ்வளவுக்கு ஏற்படுத்துவதில்லை. அதிகபட்சம், பூர்வீகம் தொடர்பிலான பதிவுகளைச் செய்வதோடு முடிந்து போகும்.

இரண்டாவது தரப்பினரோ, தாயகத்தில் அதிகமாக தேவைப்படுபவர்கள். முப்பது வருட நீண்ட போர் ஏற்படுத்திவிட்ட அக-புற தாக்கங்களின் பொருளாதார பின்னடைவு என்பது இன்னும் இரண்டு தசாப்தங்களுக்குள் ஈடு செய்யமுடியாதது.

போர் முடிவடைந்து, எட்டு வருடங்கள் நிறைவடைந்து விட்டன. ஆனால், தாயகத்தின் பொருளாதாரமோ முள்ளிவாய்க்கால் முனையிலேயே தேங்கிவிட்டது. எந்தவொரு மாற்றமும் இல்லை. நாளாந்தம் பொருளாதார சுமைகளை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலைகள் என்கிற செய்திகளை மானாவாரியாகக் காண முடிகின்றது.

புலம்பெயர் தேசத்திலிருந்து குறிப்பிட்ட ஒரு தொகுதியினருக்கு வரும் அளவுக்கு அதிகமான பணம், சாதாரண வாழ்வு குறித்துக் கனவோடு கடைநிலையில் இருக்கின்றவர்களை இன்னும் இன்னும் பின்னுக்குத் தள்ளிவிடுகின்றது.

ஒரு சமூகத்தில் ஒரு தொகுதியினரிடம் அளவுக்கு அதிகமான பணமும் பெரும்பான்மையினரிடம் வறுமையும் குடிகொண்டிருக்கும்போது, சமுதாய ஏற்றதாழ்வின் இடைவெளி அதிகரிப்பதோடு, சமூக ஒழுங்கில் அதீத மாற்றங்கள் ஏற்பட்டுப் பிளவுகள் உண்டாகும். அப்படியான நிலையில், தாயகத்தின் பொருளாதார சூழலைச் சரிப்படுத்த வேண்டிய தேவையொன்று அவசரமானது.

ஆனால், அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவது தொடர்பில் தாயகத்திலுள்ளவர்களும் புலம்பெயர் தரப்புகளும் எந்தவொரு இணக்கப்பாட்டுக்கோ, ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்துக்கோ முனைப்புகளைக் காட்டவில்லை. அப்படியான முனைப்புகள் சில மேலே வந்தாலும், அவை ஆரம்பத்திலேயே அகற்றப்பட்டு விட்டன.

அப்படியான நிலையில், புலம்பெயர் முதலீடுகளைத் தாயகத்தில் எவ்வாறு செய்வது என்பது தொடர்பில் யாருமே வெற்றிகரமான பக்கத்தில் நகரவில்லை. இதனால், முதலீடுகளைச் செய்வது தொடர்பில் ஆர்வம் கொண்டிருந்தவர்களில் குறிப்பிட்டளவானவர்கள் தமது தற்போதைய வதிவிடங்களிலேயே இருப்பது ஆரோக்கியமானது என்று முடிவெடுத்து விட்டார்கள்.

மூன்றாவது தரப்பினரோ, தமிழ்த் தேசிய அரசியலில் நேரடியாகத் தாக்கம் செலுத்தும் தரப்பினர். இவர்களில் அதிகமானவர்கள் முன்முடிவுகளோடு தாயகத்தை நோக்கி வருகின்றார்கள். அதாவது, முள்ளிவாய்க்கால்கள் காலத்துக் காட்சிகளை காலங்கள் தாண்டியும் அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பிலானது.

புறச்சூழல் மாற்றங்கள் என்பது இயல்பானது. ஆனால், அகச் சூழலில் தமிழ் மக்கள் பெருமளவு மாற்றங்கள் இன்றியே இருக்கின்றார்கள். அதனை உணரவேண்டும் என்றால், அவர்களோடு அவர்களின் நிலைக்கு- அதாவது மக்களின் கண்களை நேரடியாகச் சந்தித்து மனங்களை அறிய வேண்டும்.

அந்த மனங்களிலுள்ள வடுக்கள், காலங்கள் கடந்தாலும் நீக்க முடியாதவை என்பதை அறிய வேண்டும். ஆனால், அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவது தொடர்பில் இந்தத் தரப்பிலுள்ள பெரும்பான்மையினர் விரும்புவதில்லை.

அதிகபட்சம், தாயகத்திலுள்ள செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களுடனான உரையாடல்களோடு விடயங்களை முடித்துக் கொள்கின்றார்கள். இந்தத் தரப்புகளுடனான சந்திப்பு என்பது தாயகத்தின் பருமட்டான வடிவத்தைக் காட்டினாலும், மக்களுடனான உரையாடல் என்பது அதன் அடிநாதத்தை, அதன் தன்மைகள் சார்ந்து உணர்ந்து கொள்ள உதவும். அந்தச் சந்திப்புகளை நிகழ்த்தாதவர்களின் வருகையினால் எந்தப் பயனும் இல்லை.

நேரடியாக மக்களைச் சந்திக்கும் சிறுதொகையினராலும் கூட, அவர்களுடன் மனந்திறந்து உரையாடுவது தொடர்பில் தடை ஏற்படுகின்றது. அதனால், நீண்ட உரையாடல்களை நிகழ்த்துவதற்கான வாய்ப்புகள்அற்றுப்போகின்றன. மாறாக, அவர்களை அவதானிப்பதோடு விடயங்கள் முடிந்து போகின்றன.

எப்போதாவது ஒரு சிலர் மாத்திரமே மக்களின் கண்களூடு அவர்களின் மனங்களை முழுமையாகப் படிக்கின்றனர். அவர்களின் முன்வைப்புகள் பல நேரங்களில் புலம்பெயர் அரசியல் நிகழ்ச்சி நிரலில் இருந்து முற்றுமுழுதாக வேறுபடும்போது, அவற்றை புலம்பெயர் தரப்புகள் நிராகரிக்கின்றன. இதனால், பலனற்ற தன்மையொன்று நீடிக்கின்றது.

தமிழ்த் தேசிய அடிப்படைகளோடு தாயக- புலம்பெயர் தமிழ் மக்கள் ஒத்தோடினாலும் வாழ்விடமும் இயங்கும் சூழல் மாறுபடும் போது முரண்பாடுகள் ஏற்படுவது இயல்பானது. அதனைக் களைவது என்பது சில நாட்களில் நிகழ்த்தப்படக் கூடியதும் அல்ல. ஆனால், மனத்தடைகள், இடைவெளிகள் தாண்டி பூரண உரையாடல்களைத் தொடர்ச்சியாக நிகழ்த்த எத்தனிக்கும் போதுதான் அந்த முரண்பாடுகளைக் களைய முடியும். ஆனால், அவற்றைத் தாண்டி தெளிவான கட்டத்துக்குப் பயணப்படுவதற்கான சூழலை, இந்த மனத் தடைகள் தாண்டி நிகழ்த்த வேண்டும்.

ஆனால், மற்றொரு பக்கமோ புலம்பெயர் தமிழ்த் தளத்தில் அதிக தாக்கம் செலுத்தும் அமைப்புகள், பெரு வர்த்தகர்களை இலங்கை அரசாங்கம் மிக இயல்பாகக் கையாண்டு வருகின்றது.

நட்போடு அழைத்து வந்து, தனது நிகழ்ச்சி நிரலை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டுகின்றது. அதிலும், தாயகத்திலுள்ள தமிழ்த் தரப்புகளிலிருந்து அவர்களை விலக்கி வைத்து விளையாட்டுக் காட்டி, வெற்றிகளையும் பெற்று வருகின்றது. இந்த ஆண்டு மட்டும் 100 க்கும் மேற்பட்ட புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் பெரு வர்த்தகர்கனையும் இலங்கை அழைத்து வந்து சந்திப்புகளை நடத்தி அனுப்பியிருக்கின்றது.

தெற்கில் முதலீடுகளைச் செய்வது தொடர்பில் அதிகஉரையாடல்களும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் பாதிப்பின் வடுக்களோடு அல்லாட, தென்னிலங்கை வெற்றிகரமாக நகருகிறது. தமிழ் மக்களோ ஏதும் அறியாது குழப்பத்துக்குள் கண்கள் கட்டப்பட்டவர்கள் போல அலைகின்றார்கள்.

(புருஜோத்தமன் தங்கமயில்)