சர்வதேசம் உதவி

மோசமான மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவ, ஐக்கிய நாடுகள், ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் முன்வந்துள்ளன. அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு, இலங்கை அரசாங்கத்தால் சர்வதேசத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு அமையவே, மேற்படி நாடுகளும் அமைப்புகளும், உதவ முன்வந்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் உலக சுகாதார ஸ்தாபனம், உலக உணவுத் திட்டம், ஐ.நா சிறுவர் நிதியம் (யுனிசெப்) மற்றும் ஐ.நா சர்வதேச நிதியம் ஆகியன, இலங்கைக்கான நிவாரணங்களை வழங்கவும் தொடர்பாடல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உணவுகளை விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு, இலங்கையிலுள்ள ஐ.நா அலுவலகத்துக்கு அறிவித்துள்ளன.

இந்நிலையில், இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து, தொடர்ந்து நிவாரணங்களை வழங்கவும் மீட்புப் பணிகளில் ஈடுபடவும், ஐ.நா அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, பாகிஸ்தான் அரசாங்கமும், இலங்கைக்கு உதவத் தயாரான நிலையில், நிவாரணப் பொருட்களை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, இலங்கையிலுள்ள பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது.

இதேவேளை, இலங்கையில் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்களுக்கு உதவுவதற்காக, அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களத்தால், 15 மில்லியன் ரூபாய் நிதியுதவி அளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதென.இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் அறிவித்துள்ளார்.

அத்துடன், அமெரிக்காவின் நிவாரணக் குழுவொன்றையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை, இந்திய அரசாங்கத்தின் நிவாரணப் பொருட்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் அடங்கிய இரு கப்பல்கள், ஏற்கெனவே இலங்கை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.