முதல்வர் அதிரடி! அச்சத்தில் அதிகாரிகள்!

வடமாகாண அலுவலகங்களில் நடைபெறும் மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் அமைச்சர்கள் கண்டுகொள்ளாதுள்ள போதும், முதலமைச்சர் தடாலடியாக நடவடிக்கைகள் சகிதம் களம் குதித்துள்ளார். அவ்வகையில் முறையற்ற வகையில் அலுலவலக வாகனங்களைப் பயன்படுத்துவது மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் தனது பார்வையை செலுத்தியுள்ளார். இதன் பிரகாரம் அலுவலக வாகனங்களை தனது குடும்ப தேவைகளிற்கு பயன்படுத்திய அமைச்சின் செயலாளரிற்கு பல இலட்சங்களில் தண்டம் அறவிடப்படவுள்ளதாக தெரியவருகின்றது. கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் உள்ளிட்ட பலரிற்கு இவ்வாறு குற்றப்பணம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தமது அலுவலகப்பாவனைக்கென ஒதுக்கப்பட்ட வாகனங்களினை விடுத்து ஏனைய அலுவலகப் பாவனை வாகனங்களை தமது தனிப்பட்ட குடும்ப தேவைகளிற்கு பயன்படுத்தியுள்ளதுடன் சிலர் அதற்கும் கொடுப்பனவுகளை கோரி பெற்றிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனிடையே கல்வி அமைச்சில் தமது வாகனங்களிற்கு எரிபொருள் நிரப்புவது தொடர்பில் அமைச்சர் மற்றும் அவரது அலுவலகத்தை சேர்ந்தவர்கள் செய்த முறைகேடுகள் தொடர்பிலும் முதலமைச்சரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த இரண்டு வருடங்களாக தாம் நினைத்த வாறு செயல்ப்பட்ட அதிகாரிகள் மாகாணசபைக்கு ஏற்படுத்திய அவப்பெயர் காரணமாக உறுப்பினர்கள் முதல்வருடன் அண்மையில் நடத்திய கலந்துரையாடலின் பிபே இந்த அதிரடி நடவடிக்கை.