யாழ். மாவட்டத்தின் அதிகஷ்ட பிரதேசமான அரியாலை கிழக்கு மனித நேய வேலை திட்டத்துக்காக இராணுவத்தால் தத்தெடுப்பு

கல்வி, சுகாதாரம், அபிவிருத்தி, ஒழுக்கம் ஆகியவற்றில் மிகவும் மோசமான நிலையில் அரியாலை கிழக்கு காணப்படுகிறது. போதை பொருள் , பல தார மணம், பாலியல் ஒழுக்க கேடுகள் ஆகியன இங்கு மலிந்து காணப்படுகின்றன. வன்முறைகள், குற்ற செயல்கள் ஆகியன அடிக்கடி நடந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் வறுமை தாண்டவம் ஆடுகின்றது. எதிர் கால சந்ததியினராகிய பிள்ளைகள் பெரும்பாலும் பாடசாலைக்கு செல்வதே இல்லை.

அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அணுகி வராத பிரதேசமாகவே இது உள்ளது. அதே நேரம் அரசாங்கத்தின் மனித நேய வேலை திட்டங்களின் வரப்பிரசாதங்கள் இப்பிரதேசத்தை முறையாக வந்தடைவதும் இல்லை.
இந்நிலையில் இராணுவத்தின் மனித நேய வேலை திட்டங்களுக்கான நாடளாவிய இணைப்பாளர் செல்வா இப்பிரதேசத்தினதும், இங்கு வாழ்கின்ற மக்களினதும் பேரவல நிலையை இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராய்ச்சிக்கு எடுத்து கூறினார்.

மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி இப்பிரதேசத்துக்கு நேரில் கள விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை பார்வையிட்டதுடன் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தின் மனித நேய வேலை திட்டங்களுக்கான கேந்திர பிரதேசமாக அரியாலை கிழக்கை தத்தெடுக்கின்ற தீர்மானத்தை எடுத்தார்.

இங்கு வாழ்கின்ற மக்களின் வறுமையை ஒழித்தல், வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல், கல்வி, சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றை மேம்படுத்துதல், இளையோர்களுக்கான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துதல், வன்முறைகள், குற்ற செயல்கள் ஆகியவற்றை குறைத்தல், அறிவூட்டல்கள், விழிப்பூட்டல் ஆகியவற்றை மேற்கொள்ளுதல் ஆகிய செயல் திட்டங்கள் இங்கு இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தால் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

இந்நிலையில் 130 உலர் உணவு பொதிகள், 50 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், சொக்லேட்டுகள் ஆகியன பூம்புகார் பொதுநோக்கு மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற வைபவத்தில் வைத்து வழங்கப்பட்டன. இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதியின் வேண்டுகோளை ஏற்று தெற்கை சேர்ந்த தமிழ் – சிங்கள மனித நேய செயற்பாட்டாளர்கள் இவற்றுக்கான உதவிகளை மேற்கொண்டதுடன் நேரில் வந்து இவற்றை கையளித்து வைத்தார்கள்.

தெற்கில் இருந்து வருகை தந்த மனித நேய செயற்பாட்டாளர்கள் சார்பாக பிரபா லோகநாதன் இங்கு உரையாற்றியபோது இறைவனின் அருட்பார்வை அரியாலை கிழக்கு பிரதேசத்துக்கு கிடைத்து உள்ளது, இறைவனின் கருவியாக இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி செயற்படுகின்றார், இறைவனின் கருவிகளாக இருந்து இப்பிரதேசத்துக்கும், இப்பிரதேச மக்களுக்கும் தொடர்ந்து சேவையாற்றுவோம் என்று பேசினார். இவைபவத்துக்கு விசேட அழைப்பின் பெயரில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் சென்றிருந்தனர்.