மதுபானம் குடிப்பதில்லை, புகைத்தல் இல்லை, நீரழிவு, கொலஸ்ரோல் உயர் குருதி அழுத்தம் போன்ற நாற்பட்ட நோய்களுக்கான மாதாந்தம் சிகிச்சை பெறுபவர் அல்ல அல்லது விசமுள்ள பாம்பு கடிக்குள்ளானவரும் இல்லை இருப்பினும் அவரது சிறுநீரகங்கள் 45 வயதிலேயே செயலிழந்து விட்டன.
இதன் காரணமாக வைத்தியசாலைக்கு குருதி மாற்று சிகிச்சைக்கு வாராந்தம் வந்து சென்றவர். எனவே இவரது சிறுநீரக செயலிழப்புக்கான காரணங்கள் என்ன என்பதனை ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்படவில்லை எனினும் மருத்துவர்களின் தகவல்களின் படி இரண்டு காரணிகள் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகின்றன.
அதாவது அவர் அதிகம் கடலுணவுகளை முக்கியமாக மீன்களை விரும்பி சாப்பிடுகின்றவராக காணப்படுகின்றார். மற்றையது வயல் நிலங்கள் சூழவுள்ள பகுதியே இவரது வாழ்விடமாக காணப்படுகிறது.
இப்போது உங்களுக்கு எழும் சந்தேகம் இந்த இரண்டு காரணங்களுக்கும் அவரது சிறுநீரக செயலிழப்புக்கும் என்ன தொடர்பு என்பதே
உணவு என்பது வெறும் பசி தீர்க்கும் ஒன்றல்ல, அவ்வாறுதான் நீரும் வெறும் தாகம் தீர்க்கும் பானம் அல்ல அது மனிதனின் உடல் உள ஆரோக்கியத்துடன் தொடர்புபட்டது.
இதன் காரணமாகதான் எமது முன்னோர்கள் உணவே மருந்து அல்லது மருந்தே உணவு என்றார்கள் ஆனால் இன்று இந்த நிலைமை அப்படியே தலைகீழாய் மாறிவிட்டது. உணவே நஞ்சாக காணப்படுகிறது. எமது உணவுப் பழக்க வழக்கங்கள் காரணமாக மனிதனுக்கு கருவறையிலேயே நோய்கள் பீடிக்க தொடங்கி விடுகிறது.
இப்பொழுது மனிதர்களுக்கு காணப்படுகின்ற பெரும்பாலான நோய்கள் அவர்கள் உட்கொள்ளும் உணவின் விளைவே. மருந்தாக உணவை உட்கொண்ட காலம் மலையேறி போய் இப்போது நஞ்சாக உணவை உட்கொள்கின்றோம். இயற்கையோடு ஒத்திசைந்தும் பருவ கால உணவுகளுக்கு முன்னுரிமை கொடுத்தும் காணப்பட்ட எமது உணவு பழக்கவழக்கமுறை இப்பொழுது முற்றாக மாறிவிட்டது.
அதிகரித்த சனத்தொகை ஏற்ப அதிகரித்த விளைச்சலை பெற்றுக்கொள்வதற்காக விவசாய நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் அதிகரித்த இராசாயன உரங்கள், கிருமிநாசினிகள் காரணமாகவும் மற்றும் உணவுகளை நீண்ட நாட்களுக்கு பழுதடையாது பாதுகாக்க பயன்படுத்தப்படும் இராசயனங்களும் நாம் உட்கொள்ளும் உணவுகளை நஞ்சாக மாற்றியிருக்கிறது.
இதுவே பல்வேறு நோய்களுக்கும் காரணமாகவும் அமைந்துள்ளது. உலக உணவு விவசாய ஸ்தாபனத்தின் 2022 இன் அறிக்கை உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 மில்லியன் மக்கள் விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும கிருமிநாசினிகள் காரணமாக உடல் நலக் குறைபாடுகளுக்கு உட்படுகின்றனர் என கூறுகிறது.
இதனை தவிர உணவுப்பொருட்களை பாதுகாக்க பயன்படுத்தப்படுகின்ற பொருட்கள் (Preservatives),உணவுப்பொருட்களில் பயன்படுத்தப்படுகின்ற வர்ணங்கள் (Colors), சுவையை அதிகரிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்ற சுவை தூண்டிகள் (Flavour enhancers) என்பவற்றோடு இயந்திர மயமான வாழ்க்கையில் வேகமான உணவுகள் (Fast foods) உணவுகளை உடலுக்கு ஒவ்வாத உணவாக மாற்றுகிறது.
இவ்வாறான உணவுகள் நீரிழிவு,புற்றுநோய், அதிக குருதி அழுத்தம், இதய நோய்கள் கல்லீரல் தொடர்பான நோய்கள் என பல்வேறுப்பட்ட நோய்களை ஏற்படுத்துகிறது.
போமர்லின் (Formalin) என்றவுடன் எமக்கு நினைவுக்கு வருவது இறந்த மனித உடல்களை சில நாட்களுக்கு பழுதடையாது பாதுகாக்க பயன்படுத்தப்படும் திரவம் என்பதே. ஆனால் இது போர்மல்டிஹைடு (Formaldehyde) நீரும் சேர்ந்த கலவை ஆய்வகங்களில் திசுக்களை பாதுகாக்கும் வேதிப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் இதனை பலர் உணவுப்பொருட்கள் பழுதடையாது பாதுகாக்க பயன்படுத்துகின்றனர்.
முக்கியமாக மீன்கள் பழுதடையாது இருக்க போமர்லின் பயன்படுத்தப்படுகிறது. இதனால் மீன்கள் சில நாட்களுக்கு பழுதடையாது பளபளப்பாக உடன் மீன்கள் போன்று காட்சியளிக்கும்.
இதனை தவிர இறைச்சி கோழிகளுக்கும் ஊசி மூலம் போமர்லின் ஏற்றப்பட்டு இறைச்சி பாதுகாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது மனித உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது.
போமர்லின் பயன்படுத்தப்படுகின்ற மீன்கள் மற்றும் இறைச்சி வகைகளை நீண்ட காலமாக உண்ணுகின்றவர்களுக்கு சிறுநீரகம் செயலிழக்கும் அபாயம், கல்லீரல் பாதிப்பு.
நரம்பு மண்டல பாதிப்பு, கருப்பை பாதிப்பு குழந்தையின்மை அதிகரிப்பு போன்ற நோய்ககள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
போமர்லின் பயன்படுத்தப்படுகின்ற உணவுகளை உட்கொள்கின்ற முதியவர்கள், சிறுவர்கள், கர்ப்பிணிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
அவ்வாறே இராசயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்களை தொடர்ச்சியாக உண்ணுகின்றவர்களும் மேற்படி நோய்த்தாக்கங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
ஒரு புறம் உற்பத்தி நடவடிக்கைகளின் போது பயன்படுத்தப்படுகின்ற அளவுக்கு அதிகமான இராசாயன உரங்கள்.
கிருமிநாசினிகள் காரணமாக மனித குலத்திற்கு அதிக பாதிப்புக்கள் ஏற்படுகின்ற முக்கியமாக புற்றுநோய்கள், குழந்தை இன்மை. சிறுநீரக செயலிழப்பு. என ஆபத்தான நோய்கள் ஏற்படுகின்ற. அதேவேளை உற்பத்திக்கு பின்னரும் உணவுப்பொருட்களில் பயன்படுத்தப்படுகின்ற இராசாயனங்களுமாக பாதிப்பின் அளவை இரட்டிப்பாக மாற்றியிருக்கிறது.
அது மாத்திரமன்றி விவசாய நடவடிக்கைகளின் போது பயன்படுத்தப்படுகின்ற அதிகளவான இராசய உரங்கள் கிருமி நாசினிகள் காரணமாக நிலத்தடி நீரில் கலந்துள்ள பார உலோகங்களாலும் மனித உடலுக்கு ஆபத்து ஏற்படுகிறது. சம காலத்தில் இது மிகப்பெரும் பிரச்சினையாக மாறியிருக்கிறது. பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர் குடிப்பதற்கு பொருத்தமற்ற நீராக மாறியிருக்கிறது.
நீரானது நிறம் குணம் மணம்.சுவை இன்றி பளிங்கு போன்று காணப்படுகின்ற போதும் அந்த நீரில் காணப்படுகின்ற பார உலோகங்களான ஆசனிக், ஈயம்,,கட்மியம்,பாதசரம் போன்றன மனித உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்க கூடியது. பெரும்பாலான சிறுநீரக செயலிழக்கும் நோயாளிகள் பார உலோகங்கள் கலந்துகொள்ள நீரை நீண்ட காலமாக அருந்தி வந்ததன் விளைவாகவே காணப்படுகிறது.
இக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல ஒரு மனிதனுக்கு எந்தவிதமான கெட்டபழக்கவழக்கங்களும் இல்லாத போதும் அவனுக்கு சீறுநீரக செயலிழப்பு, அல்லது புற்று நோய், அல்லது குழந்தையின்மை போன்ற ஆபத்தான நோய்கள் காணப்படுகிறது என்றால் அது மேற்படி நஞ்சாக்கப்பட்ட உணவுகளை பயன்படுத்துவதன் விளைவே.
ஆகவே இந்த இளம் கும்பத் தலைவனின் மரணத்திற்கும் இதுவே காரணமாக இருக்கலாம் என பெரிதும் நம்பபடுகிறது.
தமிழ் சமூகத்தை பொறுத்தவரை உணவு ஒரு கலாச்சாரம். உணவு ஒரு பண்பாடு.
அதுவே எங்களுக்கு மருந்தாகவும் இருந்தது, எங்கள் முன்னோர்கள் ஆரோக்கியமான உணவு கலாசாரத்தை கொண்டவர்கள்.
எங்கள் உணவுக்கு நீண்ட கால பாரம்பரிய பண்பாடு உண்டு. அனதால்தான் மருந்தே உணவு என்று ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.
ஆனால் இன்று எல்லாம் தலைகீழாய் மாறியிருக்கிறது. அவசர உலகத்தில் அவசரமாக வாழ்ந்துவிட்டு அவசரமாகவே உலகை விட்டு சென்றுவிடுகின்ற நிலைமை அதிகரித்து வருகிறது. வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை யாழ்ப்பாணத்தில் அதிகரித்த புற்றுநோயாளர்களும், கிளிநொச்சி முல்லைத்தீவு,வவுனியாவில் அதிகரித்த சிறுநீரக நோயாளிகளும் காணப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
உணவே மருந்து என்ற நிலைமையினை நோக்கி செல்லவேண்டிய அவசிய தேவை உணரப்படுகிறது. விலைமதிப்பற்ற எங்களது உயிர்களை பாதுகாத்துகொள்ள உணவை மருந்தாக்கிகொள்வோம்.
(யாழ்ப்பாண புலனாய்வு )