கோட்டா பேணும் இராணுவ ஒழுங்கு

அதில், முதலாவது, இந்த ஆட்சியில் எந்த ராஜபக்‌ஷ தீர்மானங்களின் நாயகனாக இருப்பார் என்பது;

இரண்டாவது, எதிர்க்கட்சிகளோ, சிறுபான்மைத் தரப்புகளோ எந்தவொரு தருணத்திலும், அரசாங்கத்தினதும் நிர்வாகத்தினதும் தீர்மானங்களில், ‘சிறிய ஆலோசனை’ என்கிற அடிப்படையில் கூட, உள்வாங்கப்பட மாட்டார்கள் என்பது;

மூன்றாவது, சிவில் நிர்வாகக் கட்டமைப்பைத் தாண்டி, இராணுவ நிர்வாக ஒழுங்கொன்று பேணப்படும் என்பது.

2015ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், பொதுத்தேர்தலில் போட்டியிட மஹிந்த ராஜபக்‌ஷ மேற்கொண்ட தீர்மானமானது, ராஜபக்‌ஷக்களின் மீள்எழுச்சி பற்றிய சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. ராஜபக்‌ஷக்களின் மீள் எழுச்சிக்கான முகமாக, மஹிந்தவே முன்னிறுத்தப்பட்டார்.

19ஆவது திருத்தச் சட்டம், ராஜபக்‌ஷக்கள் மீதும் அவர்களின் மீள் எழுச்சி மீதும் பல இடையூறுகளைச் செய்தது. மஹிந்த இன்னொரு தடவை ஜனாதிபதியாக வர முடியாது என்பதை, ஒருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே ஜனாதிபதியாகப் பதவி வகிக்க முடியும் என்கிற வரையறை உறுதிப்படுத்தியது. அதுபோல, இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள், தேர்தல்களில் போட்டியிட முடியாது; 35 வயதுக்குக் குறைந்தவர்கள், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதெல்லாம், ராஜபக்‌ஷக்களைக் கருத்தில் கொண்டு, 19ஆவது திருத்தச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட அம்சங்களாகும்.

தங்களது மீள் எழுச்சியின் மீது, 19ஆவது திருத்தச் சட்டம் பாரிய இடையூறுகளை விளைவிக்கின்றது என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்து கொண்ட ராஜபக்‌ஷக்கள், அவற்றை எதிர்கொள்ளும் உத்திகளை, மூன்று ராஜபக்‌ஷக்களுக்கு இடையே பிரதானமாகப் பங்கிட்டுக் கொண்டார்கள்.

சிங்கள மக்களை ஒருங்கிணைக்கும் வெற்றி முகமாக மஹிந்தவும் கட்சியை உருவாக்கி, தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான நிர்வாகக் கட்டமைப்புகளைச் செயற்படுத்துபவராக பசில் ராஜபக்‌ஷவும் புதிய ஜனாதிபதி வேட்பாளர் எனும் அடையாளத்துக்காக கோட்டாபய ராஜபக்‌ஷவும் தயாரானார்கள்.
அடிப்படையில், ராஜபக்‌ஷக்களின் வெற்றியில், இரண்டு விடயங்களில் மாத்திரம்தான் கோட்டாபய பங்களித்திருக்கிறார்.

ஒன்று, அமெரிக்கக் குடியுரிமையை விடுவதற்குத் துணிந்தமை. மற்றையது, ‘வியத்மக’ அமைப்பினூடாகத் தென் இலங்கை புத்திஜீவிகள், வர்த்தக சமூகக் கட்டமைப்பொன்றைப் பேணியமை. இதில், ‘வியத்மக’ என்பது, சிங்கள மேல் மட்டத்தில் மாத்திரமே இயங்கியது. அது, தேர்தல் வெற்றிக்கான வாக்குகளைச் சேகரிக்கும் கருவியாகப் பெரியளவில் பங்களிக்கவில்லை. வாக்குச் சேகரிக்கும் கட்டமைப்பை, பசிலே இயக்கியிருந்தார்.

அப்படியான நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் கோட்டா வென்ற போதிலும், பொதுத் தேர்தலுக்குப் பின்னரான ஆட்சியில் மஹிந்தவும் பசிலுமே அதிக தாக்கத்தைச் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆளுங்கட்சிக்காரர்களும் அப்படித்தான் நினைத்து இயங்கினார்கள். ஆனால், கோட்டாவின் அக்கிராசன உரையும் அமைச்சரவை நியமனமும் அதைப் பெரியளவில் கேள்விக்கு உள்ளாக்கி இருக்கின்றது.

அமைச்சரவை நியமனம் என்பது, மஹிந்த, பசிலின் தலையீடுகளுடன் உருப்பெற்ற போதிலும், யாருக்கு என்ன அமைச்சுகளைக் கையளிக்க வேண்டும் என்பதிலும், தனக்கு இணக்கமான சிலருக்கு, தான் நினைத்த அமைச்சுகளை, யார் எதிர்த்தாலும் வழங்க வேண்டும் என்பதிலும், கோட்டா குறியாக இருந்தார். அதில், அலி சப்ரிக்கான நீதி அமைச்சு நியமனம் முக்கியமானது.

19ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக இல்லாதொழித்து, 20ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வருவது தொடர்பில், ராஜபக்‌ஷக்கள் கவனம் செலுத்துகிறார்கள். 20ஆவது திருத்தத்தின் ஊடாக, 19ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிப்பது சார்ந்து, ராஜபக்‌ஷக்கள் ஆர்வம் கொண்டிருந்தாலும், அதிகாரங்களின் ஒட்டுமொத்தமான இடமாக, ஜனாதிபதி மாறிவிடக்கூடாது என்று மஹிந்த நினைக்கிறார்.

அதனால், 19ஆவது திருத்தத்தினூடாக நாடாளுமன்றத்திடம் பாரப்படுத்தப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை, அப்படியே பேணுவதற்கே அவர் விரும்புகிறார். அது, தனக்கும் தன்னுடைய மகனின் எதிர்காலத்துக்கும் உதவும் என்றும் நினைக்கிறார்.

அதன்போக்கில், தனக்கு இணக்கமான ஒருவரை, நீதி அமைச்சராக நியமிப்பது சார்ந்து அவர் ஆர்வம் காட்டினார். இந்த இடத்தில், கோட்டா எந்தவித விட்டுக்கொடுப்பையும் செய்யாது, தன்னுடைய விசுவாசியான அலி சப்ரியை நீதி அமைச்சராக்கினார். புதிய அரசமைப்பாக இருந்தாலும், அரசமைப்புத் திருத்தங்களாக இருந்தாலும் தன்னுடைய பார்வைக்கு அப்பால் எந்த விடயங்களும் நடந்துவிடக் கூடாது என்பது அவரது நிலைப்பாடாகும்.

ஏனெனில், மைத்திரிபால சிறிசேன, 19ஆவது திருத்தம் தன்னுடைய பார்வைக்கு அப்பால் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக, தனது பதவிக்காலத்தின் கடைசிக் கட்டங்களில் புழுங்கி வந்திருந்தார். அவ்வாறான நிலையொன்று, எந்தவொரு தருணத்திலும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில், கோட்டா கவனமான இருக்கிறார்.

அக்கிராசன உரையின் போது, கோட்டா வெளிப்படுத்திய உடல்மொழி என்பது, ஓர் அரசியல் தலைவருக்கு உரியது அல்ல. மாறாக, ஓர் இராணுவ அதிகாரிக்குரியது. கிட்டத்தட்ட, கட்டளைகளை வழங்கும் களமுனை இராணுவ அதிகாரிக்குரியது.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பொதுஜன பெரமுன, (மஹிந்த ராஜபக்‌ஷ) கொண்டிருந்தாலும், நாடாளுமன்றம் தன்னுடைய நிலைப்பாடுகளின் படிதான் இயங்க வேண்டும் என்ற தொனியை, உரை முழுவதுமாகக் கோட்டா பிரதிபலித்தார். அந்த உடல்மொழியையும் தொனியையும் அமைச்சரவைக் கூட்டங்கள் தொடக்கம் அரச நிர்வாகச் செயற்பாடுகள் முழுவதிலும் அவர் பேணுகிறார். ஆளுங்கட்சியின் தலைவர் மஹிந்தவே; ஆனால், ஆட்சியின் தலைவர் தான்தான்; இதை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும் என்று, அவர் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறார்.

கோட்டா, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஓர் அரசியல்வாதியாக எழுந்து வரவில்லை. அவர் தன்னையோர் இராணுவ அதிகாரியாகத்தான் முன்னிறுத்தினார். அந்த ஒழுங்குமுறையைத்தான் ‘வியத்மக’ போன்ற அமைப்புகளினூடும் பேணினார்; தற்போது அமைச்சரவைக்குள்ளும் பேணுகிறார்.

இவ்வாறான நிலைப்பாடு என்பது, பாரம்பரிய அரசியலுக்குள்ளால் வரும் எவருக்கும் சிக்கலானது. ஏனெனில், அது, சில ஒழுங்கைப் பேணும்; சிரேஷ்ட தலைமைத்துவம் உள்ளிட்ட விடயங்கள் அங்கு தாக்கம் செலுத்தும். ஆனால், இராணுவ கட்டமைப்பில் திறமையும் செயற்பாட்டு ஒழுங்கும் முக்கியத்துவம் பெறும்.

அப்படியான நிலையில், பாரம்பரிய அரசியலுக்குள்ளால் வந்தவர்களுக்கு, கோட்டாவை எதிர்கொள்வதில் சிக்கல்கள் இருக்கும். அவ்வாறானவர்கள், தனக்கு எதிரான அணியை அமைத்துவிடுவார்கள் என்பது, கோட்டாவின் அச்சமாக இருக்கிறது. அதுதான், ஆரம்பத்திலேயே இராணுவ மனநிலையோடு பேணி, அவற்றை அகற்ற நினைக்கின்றார்.

20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதும், இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் அரசியல் பதவிகளை வகிக்க முடியாது என்கிற தடை நீக்கப்பட்டுவிடும். அதன்மூலம், பசில் மீண்டும் அமைச்சரவைக்குள் மஹிந்தவுக்கு அடுத்த நிலைக்கு வந்துவிடுவார். அவரும் பாரம்பரிய அரசியலுக்குள்ளால் வந்தவர் அல்ல. அவர், செயற்பாட்டில் யார் வல்லவர்களாக இருக்கிறார்களோ, அவர்களை முதன்மைப்படுத்துபவர்.

அப்படியான நிலையில், கோட்டாவுக்கு இணக்கமான நிலையொன்றை அவர் பேணக்கூடும். அது, மஹிந்தவினதும், அவரது மகனினதும் ஆதிக்கத்தை ஒரு கட்டம் வரையில் கட்டுக்குள் வைத்திருக்கும். கிட்டத்தட்ட ராஜபக்‌ஷக்களின் ஆட்சியில், தீர்மானிக்கும் நபராக கோட்டாவே இருக்கிறார் என்கிற நிலையை உருவாக்கிவிடும்.

அக்கிராசன உரைக்குப் பின்னரான தேநீர் விருந்துபசாரத்தின் போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரோடும் கோட்டா உரையாடினார். அப்போது, வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று, கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் கோட்டாவிடம் கூறினாராம்.

அதற்கு அவர், “கட்டாயமாக! அபிவிருத்தி தொடர்பில் உங்களோடு இணைந்து வேலை செய்வோம். அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பில், எப்போதும் என்னோடு பேசலாம்” என்றாராம். அப்போது, கோட்டா வெளிப்படுத்திய தொனி, ‘அபிவிருத்தியைத் தாண்டி, எதையும் என்னிடம் கேட்டு வந்துவிடாதீர்கள்’ என்பதாக இருந்ததாகவும் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் குறிப்பிட்டார்.

ஓர் இராணுவக் கட்டமைப்புக்கு உண்டான செயற்பாட்டு ஒழுங்கை, ஆட்சியதிகாரத் தலைமையொன்று பேண நினைக்கின்றமை என்பது, எப்போதுமே ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலானது. அந்த அச்சுறுத்தலானது எதிர்க்கட்சிகள், சிறுபான்மைத் தரப்புகளுக்கு மாத்திரமல்ல, ஆளுங்கட்சிக்குள் இருக்கும் ஜனநாயக விரும்பிகளுக்கும் எதிரானது. கோட்டாவை இந்தத் தரப்புகள், எப்படி எதிர்கொள்ளப் போகின்றன என்பதுதான், நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.