பரீட்சைகளையும் பட்டங்களையும் கடந்த கல்வி மறுசீரமைப்பு

இந்நிலையில், எப்படியாவது எமது பிள்ளையும் ஒரு பட்டத்தைப் பெற்றுவிட வேண்டும் என்ற பெற்றோரின் அவாவின் விளைவாக, அதிகளவிலான பட்டதாரிகள் உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். கல்வியின் இலக்கு, அறிவு என்பதற்குப் பதிலாக பட்டம் என்ற நிலையில்தான் கல்வித்துறை இங்கு இயங்கிக் கொண்டிருக்கிறது.

எங்கு கேள்வி இருக்கிறதோ அங்கு, அதற்குரிய நிரம்பலை, வணிகம் வழங்குவது என்பது இயல்பானது. இந்தப் பட்டப்படிப்புக்கான அதீத கேள்வியை, நிரம்பல் செய்யவே, மூலைக்கு மூலை கல்வி வழங்கும் ‘தொழில் நிலையம்’கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவு, வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நிற்க!

இலங்கையில் மிகப்பெரிய வரங்களில் ஒன்று, ‘இலவசக் கல்வி’. இது எவ்வளவு பெரிய வரம் என்பதை உணர்ந்துகொள்ள, அயல்நாடான இந்தியாவின் கல்விக் கட்டமைப்புடன் ஒப்பு நோக்கினாலே போதும். ஆனால், இலங்கையின் இலவசக் கல்வியின் கல்வித் திட்டமும் முறைமையும் காலாவதியாகிப்போனதொரு நோக்கத்தில்தான் இன்றும் வேர்கொண்டுள்ளது.

இலங்கையின் இன்றைய பாடசாலைக் கல்வியின் ஆரம்பம், பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இங்கு உருவான ஆங்கில வழிக் கல்வி வழங்கும் பாடசாலைகள் ஆகும். குறிப்பாக, மிஷனரி பாடசாலைகளும் அவற்றுக்குப் போட்டியாக உருவான ஆங்கிலக்கல்வி வழங்கும் பௌத்தம், இந்து ஆகிய பாடசாலைகளும் ஆகும்.

பிரித்தானிய கொலனித்துவ காலகட்ட்தில் உருவான இந்தப் பாடசாலைகளின் நோக்கம், சுதேசிகளுக்குச் சமயம் கற்பித்தல், அடிப்படை ஆங்கில அறிவைப் புகட்டுதல், அடிப்படை கணித அறிவை ஏற்படுத்தல் ஆகியனவாகும். இதனூடாக, பிரித்தானியர் இங்கு ஆட்சியைக் கொண்டு நடத்துவதற்குத் தேவையான அடிப்படை ஆளணியை உருவாக்குதல் ஆகும். இதைச் சுருக்கமாக, ‘எழுதுவினைஞர்களை உருவாக்கும் கல்வி முறை’ என்பார்கள்.

இந்தப் பாடசாலைக் கல்வி மட்டுமே, அன்றைய காலத்தில், அரச உத்தியோகமொன்றைப் பெற்றுக்கொள்ளப் போதுமானதாக இருந்தது. வெகு சிலர், பிரித்தானியப் பல்கலைக்கழகத்துக்குச் சென்று, மேற்படிப்பை மேற்கொண்டார்கள். மேலும் சிலர், இலங்கைப் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைப் பெற்றுக்கொண்டார்கள்.

இத்தகைய மேற்படிப்பை மேற்கொண்டவர்கள், தத்தம் துறைகளில் தொழில்நிபுணர்களாகவும் பல்கலைக்கழக ஆசான்களாகவும் அரச நிர்வாகத்துறை உத்தியோகத்தர்களாகவும் ஆனார்கள். இதன் பாலாக, இவர்களின் சமூக அந்தஸ்து அதிகரித்தது.

தொழில்நிபுணர்களுக்கான தேவை அதிகமாகவும், வழங்கல் குறைவாகவும் இருந்த காலகட்டத்தில், இவர்கள் பெருஞ்செல்வம் ஈட்டத்தக்கவர்களாக மாறினார்கள். இது, பட்டப்படிப்பு என்பது உயர் சமூக அந்தஸ்தையும் பொருளாதார வளங்களையும் வழங்கவல்லது என்ற எண்ணத்தைப் பரவலாக ஏற்படுத்தியது. இதுதான் ‘பட்டம்’ பெற வேண்டும் என்ற அவாவின் அடிப்படை.

தான் பெறமுடியாத பட்டத்தை, எப்படியாவது தன் பிள்ளை பெற்றுவிட வேண்டும் என்றும், தான் பெற்றதை விட, அதிக பட்டங்களைத் தன் பிள்ளை பெற்றுவிட வேண்டும் என்றும், தான் பட்டம் பெற்ற பல்கலைக்கழகத்தைவிட, உயர் அங்கிகாரமுள்ள பல்கலைக்கழகத்தில் தன் பிள்ளை பட்டம் பெற்று விட வேண்டும் என்றும் கருதுவதால், பட்டத்துக்காக எவ்வளவு பணத்தையும் கொட்டியிறைக்க, பெற்றோர் தயாராக இருக்கிறார்கள். இந்த இடத்தில்தான், எமது கல்விமுறையின் பிரச்சினை தொடங்குகிறது.

தனது பிள்ளை கல்வியறிவு பெறுவது என்பதை விட, பட்டம் பெறுவதுதான் இங்கு முக்கியமானதாகவும் முதன்மையானதாகவும் இருக்கிறது. ஆகவே, இங்கு பாடசாலைக் கல்வியின் நோக்கமும், இதை மையமாக வைத்தே முன்னெடுக்கப்படுகிறது.

அரச பாடசாலைகளில், முதலாம் வகுப்பிலிருந்து, ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் பெரும்பான்மை மாணவர்களுக்கு, எப்படியாவது ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகள் எடுத்து, தற்போது கற்பதைவிட தரங்கூடிய பாடசாலைக்குப் போய்விட வேண்டும் என்ற அழுத்தம்; ஆறாம் ஆண்டிலிருந்து 11ஆம் ஆண்டு வரை எப்படியாவது க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அதியுயர் புள்ளிகள் பெற்றுவிட வேண்டும் என்ற அழுத்தம்; அதன் பிறகு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அதியுயர் புள்ளிகள் பெற்று, அதிக மதிப்புள்ளதாகக் கருதப்படும் பல்கலைக்கழகக் கல்வியொன்றைக் கற்பதற்கு, எப்படியாவது அரச பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்; அல்லது, குறைந்த பட்சம் ஏதாவதொரு துறையைக் கற்பதற்கேனும் அரச பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அழுத்தம்; இவ்வாறான அழுத்தங்கள், ஆண்டு ஒன்றிலிருந்து பல்கலைக்கழகக் கல்வி வரை தொடர்கின்றன.

ஆனால், அண்மைய தரவுகளின்படி உயர்தரப் பரீட்சைக்கு முகங்கொடுக்கும் கிட்டத்தட்ட 280,000 பரீட்சார்த்திகளில், வெறுமனே கிட்டத்தட்ட 180,000 பரீட்சார்த்திகளே பல்கலைக்கழகம் செல்லும் தகுதியைப் பெறுகிறார்கள். ஆனால், இதில் ஏறத்தாழ 30,000 பேர் மட்டுமே பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

பல்கலைக்கழகம் செல்லும் தகுதி பெற்றவர்களில் 16.6% ஆனவர்களுக்கு மட்டுமே, அரச பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்கிறது. அரச பல்கலைக்கழகம் செல்லும் 30,000 பேரைத் தவிர்த்த ஏனையவர்கள் பட்டப்படிப்பைப் பெற்றுக்கொள்ள, மாற்று வழிகளை நாட வேண்டியதாக உள்ளது.

இத்தனை கடும் போட்டிப் பரீட்சைகளில் மிகத்திறமையானவர்களை உள்ளீர்ப்பதாக அமையும் அரச பல்கலைக்கழகங்கள், உண்மையில் அவர்களது திறன்களை மேம்படுத்தி, தரமானவர்களை உருவாக்குகின்றனவா என்ற கேள்வி எழுகிறது.

பல்கலைக்கழக அனுமதிக்கான போட்டி என்பது, குறிப்பாக உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான அனுமதி தொடர்பிலான போட்டி என்பது, மிக அதிகமானது. ஆனால், அந்தப் போட்டியை அந்தப் பல்கலைக்கழகத்தின் ஊடாக உருவாக்கப்படும் மாணவர்களின் தரம் நியாயப்படுத்துவதாக அமைகிறது. உதாரணத்துக்கு, சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்தை எடுத்துக்கொண்டால், அதற்கு அனுமதி பெற அதியுயர் புள்ளிகள் அவசியமாகிறது. ஆனால், அதன் மூலம் அது உள்ளீர்க்கும் திறமைகளை, அது அதிகமாக வளர்த்தெடுப்பதன் விளைவாக, உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் 11ஆவது இடத்தில் இருக்கிறது.

ஆனால், இலங்கைப் பல்கலைக்கழகங்களின் நிலை இதுவல்ல. இது, பல கேள்விகளை எழுப்புகிறது.

முதலாவது, இலங்கையின் மிகச் சிறந்த அறிவுத்திறமையை தன்னுள் ஈர்த்துக்கொள்ளும் இலங்கைப் பல்கலைக்கழகங்கள் ஏன் சர்வதேச ரீதியில் சோபிப்பதில்லை?

இரண்டாவதாக, உண்மையில் உயர்தரப்பரீட்சை என்பது சிறந்த வடிகட்டல் முறைதானா?

முதலாவது கேள்விக்கான பதில் நீண்டது. ஏனெனில், இலங்கைப் பல்கலைக்கழகங்கள் எதிர்நோக்கும் சவால்கள் கொஞ்சநஞ்சமல்ல!பல்கலைக்கழகங்களுக்கான நிதியொதுக்கீடு முதல் பல்கலைக்கழகங்களின் நிர்வாகம், ஆட்சேர்ப்பு, பல்கலைக்கழக ஆசிரியர்கள், கற்றல்-கற்பித்தல் முறை, ஆராய்ச்சி, பரீட்சை முறை, வளங்கள் என எல்லா இடங்களிலும் எக்கச்சக்க சிக்கல்கள் இருக்கின்றன.

இன்றும் ‘சீனியர்’களின் குறிப்புகளை அச்சுப்பிரதியெடுத்து, பரீட்சை எழுதுவதே பல்கலைக்கழகத்தின் கலாசாரமாக இருக்கிறது. பல்கலைக்கழகம் செல்லும் ஒரு மாணவன், நான்கு வருடங்களில் ஒருமுறை கூட நூலகத்துக்குச் செல்லாமலேயே, பட்டம் பெற்றுப் பல்கலைக்கழகத்திலிருந்து வௌியேறக் கூடியதாக இருக்குமானால், அந்தக் கல்வி முறையில் பெருங்குறை இருக்கிறது.

ஆனால், இது இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்குப் புதியதொன்றல்ல என்பது இலங்கைப் பல்கலைக்கழகங்களைப் பற்றித் தெரிந்த அனைவரும் அறிந்ததே. ஆகவே, இங்கு அடிப்படைப் பிரச்சினை, பல்கலைக்கழகம் என்பது, அறிவை விருத்தி செய்யும் வளாகமாக இல்லாது, பட்டம் வழங்கும் நிறுவனமாக மாறியுள்ளதாகும்; பல்கலைக்கழகம் ஆராய்ச்சிக்கூடமாக இல்லாது, அங்கிகாரம் வழங்கும் நிலையமாகச் சுருங்கியுள்ளது. இது கல்வியின் நோக்கத்தைச் சுருக்கி உள்ளதுடன், மனித வாழ்வின் கணிசமாக காலத்தை வீணடிப்பதாக மாறுகிறது.

இன்று மேலைத்தேய நாடுகளில் கூட, குறிப்பாக அமெரிக்காவில், பல்கலைக்கழகக் கல்வி தேவைதானா? அங்கு செலவழிக்கும் பணத்துக்கு உரிய பயன் கிடைக்கிறதா என்ற கேள்விகள் பரவலாக எழுப்பப்படுகின்றன. தொழில்நுட்ப நிறுவனங்கள், தற்போது பல்கலைக்கழக பட்டங்களை ஆட்சேர்ப்புக்கான அடிப்படையாகக் கொள்வதைக் கைவிட்டு வரும் போக்கையும் அபிவிருத்தியடைந்த நாடுகளில் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இந்த இடத்தில்தான், கல்வி மறுசீரமைப்புப் பற்றி நாம் மிகக்கூர்மையாகச் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

இங்கு, கல்வி மறுசீரமைப்பு என்பது, நிறுவனம்சார் மாற்றங்கள் மட்டுமல்ல, கல்வி பற்றிய எமது சிந்தனைசார் மாற்றங்களும் தான் உள்ளடங்கி இருக்கின்றன. எமது பாடசாலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி ஆகிய முறைமைகள் பற்றி, நிறையக் கேள்விகள் எழுகின்றன. அவற்றை நாம், மீள்பரிசீலனை செய்ய வேண்டிய காலம் உருவாகியிருக்கிறது.

(Cont…)