தமிழ் கட்சிகளிடையே மாறும் ஆட்சிக் கூட்டமைப்பு

இந்த விடயத்தில் தமிழரசு கட்சியின் அரசியல் அணுகுமுறை முற்றிலும் தோல்வியடைந்த ஒன்றாக மாறிவிட்டது. வடமாகாணத்தில் பெரும்பான்மையான சபைகளில் முதலிடத்தை பெற்றிருந்த போதிலும் கூட்டணி விடயத்தில் ஏற்பட்ட சறுக்கல் காரணமாக அதில் பல சபைகளை சைக்கிள்+சங்கு கூட்டணியிடம் பறிகொடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வவுனியா மன்னார் மாவட்டங்களில் ஒரு சபையைக்கூட தமிழரசு கட்சியால் கைப்பற்ற முடியாத நிலமை ஏற்பட்டுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியவற்றுக்கு இடையில் இன்று மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு அரசியல் உடன்படிக்கையின் மூலம் அவ்விரு கூட்டணிகளும் பெற்ற உறுப்பினர் எண்ணிக்கை ஒரு முகப்படுவதால் பல சபைகளில் இரண்டாம் மூன்றாம் நிலையில் இருந்தவர்கள் இப்போது முதன் நிலைக்கு சென்றுள்ளனர்.

முதல் நிலையில் உள்ள ஒரு கூட்டணிக்கு இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்ட தமிழரசு கட்சி விரும்பியோ விரும்பாமலோ ஆதரவளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது ஏற்பட்டுள்ளது.

மேலும் வன்னி தேர்தல் தொகுதியில் சைக்கிள் சங்கு கூட்டு ஒப்பந்தம் தமிழரசு கட்சிக்கு மிகப்பாரிய அரசியல் தோல்வியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா முல்லை மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB ரெலிபோன்) உறுப்பினர்கள் எண்ணிக்கையானது சபைகளின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது.

அந்த ஆதரவு தமக்கு கிடைக்கும் என்றே தமிழரசு கட்சி நேற்றுவரை நம்பி இருந்தது ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது SJB யின் முழுமையான ஆதரவு இனி சங்கு+ சைக்கிள் கூட்டணிக்கே கிடைக்கும்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் SJB ஊடாக நேரடியாக போட்டியிட்ட முருகேசு சந்திரகுமார் கூட்டணியில் இருப்பதனால் அவரின் பக்கத்திற்கே சஜித் அணி ஆதரவளிக்கும் ஏனெனில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கூட சந்திரகுமார் அணி மாத்திரமே வெளிப்படையாக சஜித்தை ஆதரித்தது.

தமிழரசு கட்சியின் ஆதரவென்பது ஓடும் புளியம்பழமும் போல் ஒட்டி ஒட்டாமலே இருந்தது.

வன்னி தேர்தல் தொகுதியில் மட்டும் 10 சபைகளை DTNA கூட்டணி கைப்பற்றும் முல்லைத்தீவில் இரு சபைகளை மாத்திரமே தமிழரசு தக்கவைக்கும். மன்னாரில் ஒரு சபை போராட்டதின் மத்தியில் கிடைக்கலாம்.

ஆக வன்னி தொகுதியில் 3 சபைகளே தமிழரசு கட்சிக்கு கிடைக்கும். அதேபோல் யாழ் மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 6 சபைகளை DTNA கூட்டணி தன் வசப்படுத்தும் 35 சபைகளில் 16 சபைகள் சைக்கிள் சங்கு அணியினர் வசமாகும்.

இது தமிழரசு கட்சியின் அரசியல் தோல்வி அல்ல அணுகுமுறை தோல்வியாகும்…