மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் 1970களில் வீரகேசரியுடன் இணைந்து நடத்திய நான்காவது மலையக சிறுகதை போட்டியில் முதல் பரிசு பெற்ற ‘பிஞ்சு உலகம்‘ என்ற சிறுகதை மூலம் எழுத்துத்துறையில் பிரவேசித்த மாத்தளை வடிவேலன், தனது இறுதி மூச்சு வரை மலையக இலக்கியத்தோடும், சமூகத்தோடும் வாழ்ந்தவர்.
கடந்த மாதம் அவர் இறுதியாக எழுதிய, மாத்தளை முத்துமாரி அம்மனின் புகழ்பாடும் ‘பாட்டுடை தெய்வம்‘ எனும் நூல் மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தொழில்சார் வாழ்வு: ஆசிரியராக, அதிபராகப் பணியாற்றிய இவர், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலாசார அதிகாரியாக முன்னாள் அமைச்சர் செல்லையா ராஜதுரை அவர்களால் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அமைச்சர்களாகப் பணியாற்றிய பி.பி. தேவராஜ், தியாகராஜா, மகேஸ்வரன் ஆகியோரின் வழிநடத்தலில் பல வருடங்கள் சிறப்பாக பணியாற்றி அனைவரினதும் பாராட்டைப் பெற்றவர்.
விருதுகளும் கௌரவங்களும்:
- ‘மலையகத்தின் மாரியம்மன் வரலாறும் வழிபாடும்’ (1997) என்ற இவரது நூலை பாராட்டிய பேராசான் இர. சிவலிங்கம், “மலையகச் சிறுகதைத்துறையில் ஆளுமை மிக்க முத்திரையைப் பதித்து, எழுத்தின் வளத்தால் கடல் கடந்த நாடுகளிலும் கௌரவம் பெற்றவர்” எனப் பதிவு செய்துள்ளார்.
- ‘மாரியம்மன்’ (2007), ‘அட்சயாவடம்’ (2012), ‘வல்லமை தாராயோ’ (2022), ‘கனவு மெய்ப்படல் வேண்டும்’ (2024) ஆகிய நூல்களுடன் நூற்றுக்கணக்கான ஆன்மீகக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
- ‘வல்லமை தாராயோ’ சிறுகதைத் தொகுதிக்காக எம்.ஜி.ஆர் ஜானகி அம்மாள் கலைக் கல்லூரி ஒரு இலட்சம் ரூபாய் பரிசில் வழங்கி கௌரவித்தது.
- மத்திய மாகாண சாகித்திய மண்டல பரிசைபெற்றதுடன், ‘இலக்கிய செம்மல்’, ‘கலாசாரக் கலைமாமணி’ ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
ஆளுமை குறித்த பதிவு: “மாத்தளை வடிவேலன் எழுபதாண்டு காலம் மலையக மக்களோடு வாழ்ந்து, அவர்களின் சுகதுக்கங்களில் பங்குகொண்டு, அந்த மக்களின் கூட்டு சொரூபமாய் அவரது கதைகளில் வெளிப்படுகிறார். நோர்த் மாத்தளை சந்தியில் குடைபிடித்து நிற்கும் ஆலமரம் அவருக்கு மலையக மக்களின் இருநூற்றாண்டு கால கதையை சொல்லும் ஒரு ‘Committee’ (சாட்சி) மாதிரிதான்” என்று பேராசான் மு. நித்தியானந்தன் இவரை பற்றி குறிப்பிட்டுள்ளார்.