ஈழ விடுதலையின் முதல் பெண் போராளி புஸ்பராணி

தனது குடும்பத்தின் சகோதரர் புஸ்பராஜா உடன் இணைந்து அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் மங்கயற்கரசி போன்ற ஆளுமைகளுடன் ஒன்றாக மேடை ஏறிவர்.

அவரின் போராட்ட வாழ்வு தான் சார்ந்த அமைப்பிற்குள்ளும் தவறுகளுக்கு எதிரான வெஞ்சினம் எப்போதும் கேள்விகளுக்கு பதில் தேடும் போராளியாகவே என்றும் வாழ்ந்தவர்.

1975 இல் புஸ்பராணி மற்றும் அவர்களின் தங்கை ஜீவரட்ணராணியும் தமிழீழ விடுதலை இயக்கத்தில்(TLO) (TELOஅல்ல) இருந்தனர்.

அப்பொழுது அவ்வியக்கம் செய்த தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்கான நிதி சேகரிப்பாக நடைபெற்ற புலோலி வங்கி கொள்ளையிடல் நிகழ்வில் இவர்களுக்கும் தொடர்பு இருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் கைது செய்து வைத்திருந்த போது பஸ்தியாம்பிள்ளை தலைமையிலான பொலிஸ் சிஐடி குழுவினரே விசாரணை செய்து சித்திரவதைகளையும் செய்தார்கள். இது யாழ் பொலிஸ் நிலையக் காவலில் அடைக்கப்பட்ட காலத்தில் நடைபெற்றது.

இது அன்றைய காலகட்த்தின் துன்பியல் செய்தியாக தமிழ் பேசும் மக்கள் பரப்பில் அதிகம் அறியப்பட்டதாகவும் இருந்தது.

இவர்கள் பின்னர் வெலிக்கடை மகசீன் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களுடன் கூடவே கல்யாணி என்பவரும் கைது செய்யப்பட்டு மூவரும் ஒன்றாக தமிழ் மக்களுக்கான போராட்டக்களத்தில சிறை சென்றவர்கள் என்றான போராட்ட வரலாற்றை நாம் தமிழ் பேசும் மக்களின் வாழ்வியலில் இருந்து அகற்ற முடியாதவை.

இவை அதிகம் 1970 / 1980 களில் அதிகம் பேசப்பட்டவைதான்.

அவர் 1970 களின் முற்பகுதியில் அவர் அனுபவித்த சிறை வதை வாழ்வு அன்றைய ஊடகங்களில் மனித உரிமை ஸ்தாபனங்களின் அறிக்கைகளில் நீக்கமற்று இடம் பெற்றன.

நாலாம் மாடி என்று பலராலும் அறியப்பட்ட வடக்கு தெற்கு என்றாக இருதரப்பு மக்களும் விசாரணை என்று விதைகப்பட்ட இருண்ட வதை கூடங்கள் அறிமுகமான காலமது.

இது பற்றிய கட்டுரைகள் இவருடன் ஒன்றாக யாழ் பொலிஸ் நிலையக் காவலில் இருந்த சகாவான கலயாணியின் சில வருடங்களுக்கு முன்பான இயற்கை மரணத்தின் குறிப்புகளில் பலரும் பகிர்ந்தும் இருந்தனர்.

அது போல் தமிழ் மகளிர் அமைப்பின் ஆரம்பகாலப் பெண் போராளிகளிலொருவரான அங்கயற்கண்ணியுடனான செயற்பாடுகளை அதிகம் பதிவு செய்தவராகவும் இவரே விளங்குகின்றார்.

ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றை பு~;பராணியைத் தவிர்த்து…. கல்யாணியை விடுத்து அங்கயற்கண்ணியை மறைத்து எழுத முடியாது என்பது சத்தியமாகிப் போய்விட்டது.

தனது எழுத்தாற்றல் மூலம் அரசியல் அறம் அதுசாரந்த தெளிவு என்பவற்றில் அவருக்கு இருந்த உறுதித் தன்மையை அனுபவப் பகிர்வாக தனது ‘அகாலம்’ என்ற புத்தகத்தில் நிறையவே எழுதியும் இருக்கின்றார்.

இதுவரை இந்த புத்தகம் கிடைக்காதவர்கள் இந்த புத்தகத்தை வாசிப்பது மிகவும் அவசியம்.

ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் ஒரு முக்கியமான ஆவணமாக இவரின் சகோதர் புஸ்பராராஜா எழுதிய ‘ஈழப் போராட்டத்தில் என்து சாட்சியங்கள்’ உள்ளதோ இதற்கு வலுச் சோர்க்கும் ஆவணமாக இந்த அகாலம் புத்தகம் அமைந்துள்ளது.

இதற்கும் அப்பால்….. ‘அகாலம்’ ஆவணப்பதிவாக இருப்பதற்கு அப்பால் அது இன்னும் ஒருவகையில் வேறுபடுகின்றது.

இது ஆவணாமாக மட்டும் இது இல்லாது மனிதர்களின் மெல்லிய உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தும் இலக்கியமாகவும் இருப்பதே அதுவாகும். இதில் அவரின் எழுத்தாளர் அடையாளம் வெளி கொணரப்படுவதை நாம் உணர முடியும்.

போராளி சிவகுமாரன் மரணம் அவரின் தாயார் அன்னலஸ்மியுடனான உறவு அந்த மரணத்தின் பின்னராக நிகழ்வுகளில் சாதி பார்த்து பந்தி பரிமாறிய யாழ் மேட்டுக்குடி சாதி அமைப்புகள் பற்றிய குறுக்கு வெட்டுமுகப் பார்வையாக ஒரு சமூகம் பிரஞ்ஞையுடன் அவர் எழுத்தில் தனது வெஞ்சனத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

கூடவே யாழ் பொலிஸ் நிலையத்தில் தம்மை மனிதாபிமானத்துடன் நடாத்திய பொலிசார் பற்றியும் நாலாம் மாடியில் சிங்களப் பெண் போராளிகளுடனான சகோதரத்துவ உறவுகள் பற்றிய நேரிய பார்வைகளை முன்னைக்கும் இவரின் எழுத்து அறம் சார்ந்து நேர்மையை காட்டுவதாகவும் உணரப்படுகின்றது.

இவற்றையும் விட இது ஒரு பெண் போராளி அதுவும் 1970 களில் போராட்ட களத்திற்கு வந்தவர் தனது அனுபவங்களைப் பார்வைகளை போராட்டத் தடங்களை எடுத்தியம்பும் வரலாற்று ஆவணமாக மேலும் இதனை நாம் பார்க்க முடியும்.

தோழர் பத்மநாபாவிடம் மிகுந்த மரியாதையும் இறுதிவரையும் தான் கண்ட மிகவும் சிறந்து மனிதன் போராளி என்றாக என்றும் அவருடன் இணைந்து சாமந்தமாக சிந்தித்தவர். தோழர் நாபா பற்றி இவர் தனது பொதுவாழ்வுக் காலத்து பதிவுகளில் இவர் எப்போதும் குறிப்பிடத் தவறவில்லை.

ஈழவிடுதலைப் போராட்டத்தின் முக்கிய காலங்களில் ஆரம்ப காலங்களில் இருந்து இன்றுவரை போராளியான தோழர் அ. வரராஜப்பெருமாளுடன் ஒன்றாக இணைந்து தமிழ் இளைஞர் பேரவை தமிழ் மாணவர் பேரவை தமிழீழ விடுதலை இயக்கம் (TLO) (இது ரெலோ அல்ல) என்றான வரலாற்று பதிவுகளை இவரை விட நாம் வேறு யாரிடம் அறிந்திருக்க முடியும்.

இதில் சத்தியசீலனும், பத்மநாபாவும், முத்துக்குமாரும், புஸ்பராஜாவும் என்றாக பலரும்தான் இருக்கின்றார்கள்.

மயிலிட்டியில் போர்குணம் மிக்க சமூகப் பின்னணியில் பிறந்து சமூக ஒடுக்கு முறைகளுக்கு தனது இளமைக் காலத்தில் அதிகம் முகம் கொடுத்து போராடிய சமூகப் போராளி இவர்.

ஈழவிடுதலை வரலாற்றை 1970 களில் இருந்து எமக்கு கற்றுத் தரும் போராளியாக பெண்ணாக இவர் போன்ற சிலரே இருந்தனர். இன்று எம்மிடம் தமது போராட்டத் தடங்களை நினைவுகளாக ஆவணமாக விட்டுச் சென்று விட்டார்.

1980 களின் பின்னராக காலத்தில் போராட்ட வாழ்வில் அதிகம் நேரடி ஈடுபாடுகள் இன்றி தனிப்படட் வாழ்வில் தன்னை இணைத்துக் கொண்டவர்.

ஆனாலும் சமூக வலைத்தளங்களின் வருகைகளின் பின்னராக அதிக்கம் அறிமுகம் என்றான போது பலரின் பதிவுகளுக்கு கருத்திடும் இல்லை இல்லை வரலாற்றை தவறாக சித்தரிக்க முற்படும் பலருக்கும் ஆணித்தரமாக பதில் உரைத்து வரலாற்றை உண்மையாக பதியவைத்த பெருமை புஸ்பராணியிற்கு உண்டு.

அவரது சகோதரிகள், சகோதர்கள் என்று முழுக் குடும்பமுமே இந்த ஈழவிடுதலைப் போராட்த்திற்கு சாத்வீகப் போராட்டம், அகிம்சை வழிப் போராட்டம், ஆயுதப் போராட்டம் என்று எல்லாவற்றிலும் இணைந்து பயணித்ததே வரலாறு.

வரலாற்றை உண்மையாக எடுத்துரைக்கும் நேரடி அனுபவம் துணிசல் உள்ள எந்த சமரசத்திற்கும் இடம் கொடாத போராளியாக சூரியா என்ற தனது செல்லப் பிராணியின் மறைவிற்கு இரங்கல் உரையெழுதும் வரையலான மனித நேயம் இவரையும் என்மிடையே விட்டுச் சென்றுள்ளது.

1970 களின் முற்கூற்று அரசியல் போராட்ட நிகழ்வுகளில் எதாவது சந்தேகம் ஏற்பட்டால் உசாத்துணையாக எமக்கு இருந்த ஒரு நூலகம் தற்போது தனது பௌதிக செயற்ப்பாட்டை நிறுத்திக் கொண்டது.

எமக்கு அவரின் தைரியமான நேர் கொண்ட துணிசலான வரலாற்றை உண்மையாக உரைத்து மக்களை இறுதி வரை நேசித்த அந்த பெண் போராளியின் போராட்ட அனுபவங்களைத்தான் எமக்கு அவர் விட்டுச் சென்றுள்ளார்.

1970 களின் முற்கூற்றில் ஆரம்பித்த அவரின் போராட்ட வாழ்வின் ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றின் உசாத்துணையை தொலைபேசியில் அழைத்து பெறமுடியாத நிலைக்கு அவர் இயற்கை எய்தி இருந்தாலும் அவர் அகாலம் என்ற நூலகத்தை எம்மிடத்தே இருக்குமாறு விட்டுச் சென்றது எம்மிடம் எப்போதும் பொக்கிஸமாக இருக்கும்.

காலம் வேகமாக ஒடவில்லை….? இயல்பாகத்தான் உண்மையில் 55 வருடங்களுக்கு மேலாக கடந்து நினைவுகளை மீட்ட வண்ணம் மரிக்கும் நிலமையை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். நடமாடும் நூலகம் ஓரிடத்திற்கு உட்கார்ந்திருக்கும் நூலகமாக மாறிய நிலமை வலிக்கவே செய்கின்றது. ஈழ வீடதலை வரலாற்றை முழுமையாக தெரிந்த மிகச் சிலரே எஞ்சி இருக்கின்றனர் என்ற செய்தியும் எச்சரிக்கையாக ஒலிக்கின்றது இந் நிலமையில்….

அவருக்கு மரியாதை கலந்த அஞ்சலி வணக்கங்கள்.