உங்கள் ஓலங்கள் எடுபடாது!

அதற்குக் காரணம் நூற்றுக்கணக்கான பயணிகளுடன் சென்ற பிரித்தானிய உல்லாசக் கப்பல் ஒன்றில் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் அந்தக் கப்பலை எந்தவொரு நாடும் தமது துறைமுகங்களில் தரிக்க அனுமதிக்கவில்லை. இறுதியில் கியூபா மட்டுமே தனது துறைமுகம் ஒன்றில் தரிக்க அனுமதித்தது. இவ்வளவுக்கும் உலக ஏகாதிபத்தியமான அமெரிக்காவின் வலது கரம்போல விளங்கும் நாடு பிரித்தானியா. அமெரிக்கா அநியாயமாக 60 வருடங்களுக்கும் மேலாக கியூபாவின் மேல் பொருளாதாரத் தடை விதித்திருப்பதற்கு துணை நிற்கும் நாடு. இருந்தும் பிரித்தானிய கப்பலை தனது நாட்டில் தரிப்பதற்கு கியூபா அனுமதி அளித்திருக்கிறது. இதற்கு என்ன காரணம்?

இதற்கு மனிதாபிமானம்தான் காரணம் என சுலபமாகச் சொல்லிவிடலாம். அப்படியானால் ஏன் மற்றைய நாடுகளுக்கு அந்த மனிதாபிமானம் வரவில்லை? உண்மையான காரணம் வெறும் மனிதாபிமானம் மட்டுமல்ல. கியூபா மற்றெல்லாவற்றையும் விட மனிதர்களை உயர்வாகக் கருதும் நேசிக்கும் சோசலிச சமூக அமைப்பைக் கொண்ட ஒரு நாடு. அதனால் அதன் சோசலிச மனிதாபிமானமே இந்த மகத்தான கடமையைச் செய்ய கியூபாவைத் தூண்டியது.

இந்த மனிதாபிமானமே சக முதலாளித்துவ நாடுகளால் கைவிடப்பட்ட கொரோனா கோரத்தாண்டவம் ஆடும் இத்தாலிக்கு மருத்துவர்களை அனுப்ப வைத்தது கியூபாவை. இந்த மனிதாபிமானமே ஆபிரிக்காவில் ‘எபோலா’ ஆட்கொல்லி நோய் கோரத்தாண்டவம் ஆடிய போது ஆபிரிக்க நாடுகளுக்கு கியூப மருத்துவர்களை அனுப்ப வைத்தது. அதுமட்டுமன்று. தன்னலம் கருதாது இதுவரை காலமும் சுமார் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட கியூப மருத்துவர்களை உலக நாடுகள் பலவற்றுக்கும் அனுப்பி தன்னலம் கருதாச் சேவை புரிய வைத்தது. இந்த தன்னலம் கருதா சோசலிச மனிதாபிமானமே இத்தாலிக்கும் உலகின் வேறு பல நாடுகளுக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் சீனாவிலிருந்து மருந்துகளையும் மருத்துவ உபகரணங்களையும் அனுப்பவும் வைத்திருக்கிறது.

இந்த நிலைமையில் பென்னம்பெரிய யானையின் காதுக்குள் சின்னஞ்சிறு ஈ கிணுகிணுப்பது போல, பிற்போக்கு இலங்கை தமிழ் தேசியவாதிகள் சிலரும், ஊடகங்களும் வயிற்றெரிச்சல் தாங்காமல் கியூபா மீது அவதூறு பொழிகிறார்கள். அதாவது தங்களுடைய ‘விடுதலை போராட்டத்துக்கு’ கியூபா உதவி வழங்கவில்லையாம்!

எப்படியிருக்கிறது கதை. நீங்கள் எப்போதாவது உலக மக்களின் விடுதலைப் போராட்டங்களுக்கு – வியட்நாம், தென் ஆபிரிக்கா, சிம்பாப்வே, அங்கோலா, நபீமியா, எரித்திரியா, கிழக்கு திமோர் போன்ற பல நாடுகளின் மக்கள் போராடிய போது ஒருமுறையாவது ஆதரித்து ஒரு அறிக்கை தன்னும் விடுத்தீர்களா? கியூபா மீது 60 வருடங்களாக அமெரிக்கா மேற்கொண்டு வரும் அநியாயமான பொருளாதாரத் தடையை ஒரு தடவையாவது கண்டித்தீர்களா? மாறாக என்ன செய்தீர்கள்? “ஒபாமாவுக்கான தமிழர்கள்”, “ட்ரம்புக்கான தமிழர்கள்” என சங்கங்கள் அமைத்து ஏகாதிபத்திய அமெரிக்காவுக்கு வால்பிடிக்கத்தானே உங்களால் முடிந்தது.

‘வினை விதைத்தால் வினையைத்தான் அறுவடை செய்ய வேண்டும். தினை விதைத்தால் தினையை அறுவடை செய்யலாம்’.