தமிழகத் தலைவர்கள், இலங்கை தமிழர்களை மறந்து விட்டார்களா?

அதேபோல், முன்னைய தேர்தல்களைப் போலல்லாது, இம்முறை தேர்தலின் போது, இலங்கை தமிழர்களின் பிரச்சினை பேசு பொருளாகவில்லை.

1969ஆம் ஆண்டு, அண்ணாத்துரையின் மறைவை அடுத்து, அதே ஆண்டு தி.மு.கவின் தலைமையையும் முதலமைச்சர் பதவியையும் ஏற்ற கலைஞர் மு. கருணாநிதி, 2018ஆம் ஆண்டு காலமானார்.

அதேபோல், அ.தி.மு.கவின் ஸ்தாபகத் தலைவரான எம்.ஜி. இராமச்சந்திரன், 1987 ஆம் ஆண்டு இறந்ததை அடுத்து, 1989ஆம் ஆண்டு, அ.தி.மு.கவின் தலைமையைப் பொறுப்பேற்ற ஜெயலலிதா ஜெயராம், 2016 ஆம் ஆண்டு காலமானார்.

எனவே, சுமார் மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர், புதிய தலைமைகளின் கீழேயே இரு கட்சிகளும் இம்முறை தேர்தலை எதிர்நோக்கின.

கருணாநிதியின் மகன் எம்.கே ஸ்டாலினின் தலைமையில் தி.மு.கவும் அப்போதைய மாநில முதலமைச்சராக இருந்த எடப்பாடி கே. பழனிசாமியின் தலைமையில் அ.தி.மு.கவும் களத்தில் இறங்கின.

முன்னைய தலைவரின் இரத்த உறவு என்பதாலும் போட்டியில்லாக் கட்சித் தலைமை என்பதாலும், ஸ்டாலினுக்கு வெற்றிக்கான சாதக நிலைமைகள் பழனிசாமியை விட அதிகமாக இருந்த நிலையிலேயே, தேர்தல் நடைபெற்றது.

அத்தோடு, 2018ஆம் ஆண்டு, இலங்கையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெற்ற வெற்றி, அக்கட்சிக்கு 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, பெரும் அலையைத் தேடிக் கொடுத்திருந்தது.

அதேபோல், 2019ஆம் ஆண்டு லோக் சபா தேர்தலின் போது, தி.மு.க பெற்ற மாபெரும் வெற்றி, இம்முறை மாநிலத் தேர்தலின் போது, பெரும் அலையை உருவாக்கிக் கொடுத்தது. லோக் சபா தேர்தலின் போது, தமிழ்நாடு மாநிலத்தில் 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெற்றது.

தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும், தனியாகவன்றி கூட்டணி அமைத்தே போட்டியிட்டன. தி.மு.கவின் தலைமையிலான கூட்டணி, தமிழக சட்ட சபையின் 234 ஆசனங்களில் 159 ஆசனங்களைப் பெற்றது. அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி, 75 தொகுதிகளையே கைப்பற்றியது.

தி.மு.க கூட்டணியில் தி.மு.கவின் உதயசூரியன் சின்னத்தின் கீழ், வேறு சில கட்சிகளும் போட்டியிட்டன. சிலர் கூட்டணியில் இருந்தாலும், தத்தமது கட்சிச் சின்னங்களின் கீழேயே போட்டியிட்டனர்.

தி.மு.க சின்னத்தின் போட்டியிட்டவர்கள் மொத்தம் 133 ஆசனங்களைக் கைப்பற்றினர். அதிலும், அச்சின்னத்தில் போட்டியிட்டு வென்ற தி.மு.க வேட்பாளர்களின் எண்ணிக்கை 125 ஆகும்.

மாநில சட்ட சபையின் அதிகாரத்தைக் கைப்பற்ற, கட்சியொன்றுக்கு 118 ஆசனங்களே வேண்டும். தற்போது தி.மு.க எம்.எல்.ஏக்கள் மட்டும் 125 பேர் இருக்கின்றனர். அதாவது, தி.மு.க இம்முறை தமது கூட்டணியிலும் எந்தக் கட்சியின் மீதும் தங்கியிருக்கத் தேவையில்லை. இது ஒரு பலமான அரசாங்கமாகும்.

2011ஆம் ஆண்டுக்குப் பின்னர், தி.மு.க இம்முறை பதவிக்கு வந்திருக்கிறது. 2011ஆம் ஆண்டு, தி.மு.க படுதோல்வியடைந்தது. அதற்கு மாநில சட்ட சபையில் 234 ஆசனங்களில் வெறும் 23 ஆசனங்களே கிடைத்தன. எதிர்க்கட்சி அந்தஸ்தையும் அக்கட்சி அந்தமுறை பறிகொடுத்தது.

ஆனால், கடந்த அ.தி.மு.க அரசாங்கத்தில், அக்கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுகள் போன்றவை, தி.மு.க தலைமையின் தெளிவான வாரிசுரிமைக்குப் புறம்பாக, தி.மு.கவுக்குச் சாதகமான நிலைமையை உருவாக்கிக் கொடுத்தன.

வழமையா, தமிழ் நாட்டு மாநிலத் தேர்தல், இலங்கையிலும் பேசுபொருளாகும். ஆனால், இம்முறை அவ்வாறாக இருக்கவில்லை. அதற்குப் பிரதான காரணம், இம்முறை தமிழ் நாட்டுத் தேர்தலின் போது, இலங்கை தமிழர்களின் பிரச்சினை, பெரிதாகப் பேசுபொருளாக இருக்காமையாகும்.

மாநிலத்தில் அனேகமாக சகல அரசியல் கட்சிகளும், இலங்கை தமிழர்களின் பிரச்சினையைத் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளடக்கி இருந்த போதிலும், தேர்தல் மேடைகளில் அது பெரிதாகப் பிரசாரப்படுத்தப்படவில்லை.

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக, மத்திய அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை விடுப்பது, தமிழ் ஈழத்தை வலியுறுத்தி வீராவேசமாகப் பேசுவது, ஆர்ப்பாட்டம் நடத்துவது போன்ற எதுவும் இம்முறை அவ்வளவாக காணப்படவில்லை.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மட்டும், தமது கூட்டங்களின் போது இலங்கை தமிழர்களின் பிரச்சினையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், அவரது கட்சி இந்தத் தேர்தலின் போது, ஓர் ஆசனத்தையேனும் பெறவில்லை.

மாநிலத் தேர்தலுக்கு முன்னர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்துக்கு விஜயம் செய்தார். அங்கு நடைபெற்ற கூட்டங்களில் பேசும் போது, இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசினார். தமது அரசாங்கம் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கிய சலுகைகள், வசதிகளைப் பற்றிக் குறிப்பிட்டார். எனினும், அ.தி.மு.க கூட்டணியில் இருந்த மோடியின் பாரதிய ஜனதா கட்சி, சட்ட சபையின் 234 ஆசனங்களில் நான்கை மட்டுமே கைப்பற்றியது.

எனவேதான், இலங்கை தமிழர் பிரச்சினை, தமிழகத் தேர்தல் மேடைகளில் பேசுபொருளானாலும் தேர்தலின் திசையை மாற்றவில்லை என, சில இந்திய அரசியல் விமரசகர்கள் கூறியிருந்தனர்.

நாம் தமிழர் கட்சியின் நிலைமை அதை உறுதிப்படுத்துகிறது. அக்கட்சி, பல தொகுதிகளில் ஒரு இலட்சத்துக்கு அதிகமாக வாக்குகளைப் பெற்ற போதிலும், அக்கட்சிக்கு ஓர் ஆசனத்தையேனும் கைப்பற்ற முடியவில்லை.

தமிழகத்தின் தலைவர்கள், வெறும் அரசியலுக்காக இலங்கை தமிழர்களின் பிரச்சினையைத் தூக்கிப் பிடிப்பதை, மக்கள் அறிந்திருப்பதே இதற்குக் காரணம் என, முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு முறை கூறியிருந்தார். உண்மையிலேயே, இலங்கை பிரச்சினையைத் தூக்கிப் பிடிப்பதால், தேர்தல் களத்தில் மாற்றம் ஏற்படுவதாக இருந்தால், மறுமலச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோவே, தமிழகத்தில் முதலமைச்சராக வேண்டும் என்றும் மன் மோகன் சிங் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

தமிழகத்தின் தலைவர்கள், இலங்கை பிரச்சினையைத் தமது சொந்த அரசியல் இலாபத்துக்காகவே பாவிக்கிறார்கள் என்பதை, முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் 2013ஆம் ஆண்டு வடமாகாண சபைக்கான முதலாவது தேர்தல் நடைபெற்ற நாள்களில், ‘த இந்து’ பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியொன்றின் போது பின்வருமாறு கூறியிருந்தார்.

“துரதிர்ஷ்டமாக எமது பிரச்சினை, தமிழ் நாட்டில் இரண்டு, மூன்று அரசியல் கட்சிகளுக்கிடையே பந்தாடப்படுகிறது. அவர்கள் ஒரு புறத்திலிருந்து, மறுபுறத்துக்குப் பந்தை அடிக்கிறார்கள். அப்போது நாம் தான் அடி வாங்குகிறோம்.நாம் சண்டை பிடிக்கலாம்; பின்னர், நாம் ஒன்று சேரலாம். பக்கத்து வீட்டுக்காரர் வந்து, நீங்கள் விவாகரத்துச் செய்து கொள்ள வேண்டும், விவாகரத்துச் செய்து கொள்ள வேண்டும் என்று கூறக்கூடாது. அது அவர்களது வேலையல்ல” என்று விக்னேஸ்வரன் அந்தப் பேட்டியின் போது கூறியிருந்தார்.

அதே காலத்தில், தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசனும் இதே கருத்தைத் தமது டுவிட்டர் கணக்கொன்றில் குறிப்பிட்டு இருந்தார். ‘நீங்கள் வேண்டுமானால், மாநிலத் தேர்தல் முடிவடைந்ததன் பின்னர், இலங்கை பிரச்சினையைப் பற்றிப் பேசுங்கள்’ என அவர், தமிழகத்தின் தலைவர்களை அறிவுறுத்தி இருந்தார்.

இம்முறை, மாநில தேர்தல் காலத்தில், தமிழகத் தலைவர்கள் இலங்கை பிரச்சினையைப் பற்றி, அவ்வளவு அலட்டிக் கொள்ளாமை, இவர்களது இந்தக் கருத்துகளை வலியுறுத்தி நிற்கின்றது.

இம்முறை தமிழக தலைவர்கள், இலங்கை பிரச்சினையை மறப்பதற்கு, 2015ஆம் ஆண்டு, மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சி கவிழ்ந்தமையும் ஒரு பிரதான காரணம் என, இந்திய ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

மஹிந்த தோல்வியடைந்ததன் பின்னர், நல்லாட்சி அரசாங்கத்தின் போக்கின் நிமித்தம், இலங்கை தமிழ்த் தலைவர்கள், அந்த அரசாங்கத்தோடு சுமூகமாகச் செயற்பட்டமை காரணமாக,இலங்கையிலோ தமிழகத்திலோ, இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக எவ்வித ஆரப்பாட்டங்களோ போராட்டங்களோ இடம்பெறவில்லை. அதன் காரணமாக, இலங்கை தமிழர்களைப் பற்றிய, தமிழகக் கட்சிகளின் ஆர்வம் அடங்கிப் போய்விட்டது போலும்!

2017ஆம் ஆண்டு, அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டுவிட வேண்டும் என, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமசந்திரனிடம் கூறிய போதும், தமிழகத் தலைவர்கள் அதைப் பற்றி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனவே, இம்முறை தேர்தல் வரும் போது, அந்த விடயம் பெரிதாக தேர்தல் களத்தல் எடுபடவில்லை.

இலங்கை தமிழ் தலைவர்கள், தமிழ் நாட்டின் மீதோ, இந்தியாவின் மீதோ பெரிதாகத் தங்கியிருக்காது, தமக்கான திட்டங்களைத் தாமே வகுத்துக் கொள்ள வேண்டும் என்பதையே, இந்த நிலைமை எடுத்துக் காட்டுகிறது.